மஹிந்த பிரதமராக பதவி வகிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க, உச்ச நீதிமன்றம் மறுப்பு

🕔 December 14, 2018

பிரதமரும், அமைச்சரவையும் அந்தப் பதவிகளை வகிப்பதை தடைசெய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவை நீக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்த வகையில் பிரதமர் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷ நீடிப்பதற்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏனையவர்களும், தங்களுடைய அந்தப் பதவிநிலைகளை வகிப்பதை நிறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவுக்கு எதிராக, மஹிந்த தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான பரிசீலனைகள், உயர் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்த நிலையில், நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனேக அலுவிகார மற்றும் விஜித மலல்கொட ஆகியோர், இடைக்காலத் தடையுத்தரவை நீக்குமாறு மஹிந்த குழுவினர் விடுத்திருந்த கோரிக்கையை நிராகரித்தனர்.

அத்துடன், ஜனவரி மாதம் 16, 17 மற்றும் 18ஆம் திகதிகளில், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த மனுவை விசாரணைக்கு எடுக்கும் வரை, மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரின் அமைச்சரவைக்கும் எதிராான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம் என, மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்