கண்பொத்தியார் விளையாட்டு

🕔 December 11, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக, ஜனாதிபதி வெளியிட்ட அறிவித்தலுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பைப் பரபரப்போடு நாடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தப் பத்தி எழுதப்படுகிறது. 

தத்தமது விருப்பு – வெறுப்புகளுக்கேற்ப, தீர்ப்புக் கிடைத்து விட வேண்டுமென்பதே கணிசமானோரின் ஆசையாக உள்ளது. ஆனால், ‘நீதிக்குக் கருணை கிடையாது’ என்பதை, இங்கு பதிவுசெய்ய வேண்டியுள்ளது. அதனால், அடுத்தவரின் அபிலாஷைகளுக்கேற்ப அது, செயற்பாடுவதில்லை. எனவே, தீர்ப்பு எப்படியும் அமையலாம்.

அரசியலரங்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பானது, மேலே கூறப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புடன், முடிவுக்கு வந்து விடப் போவதில்லை என்கிற உண்மையைப் புரிந்து கொள்தல் அவசியமாகும்.

நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி கலைத்தமை சட்டப்படி செல்லும் அல்லது செல்லாது என்பதில், ஒன்றைத்தான் நீதிமன்றம் சொல்லப்போகிறது. நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தால், நாடாளுமன்றம் தொடர்ந்தும் இயங்கும். கலைத்தமை, சட்டப்படி செல்லும் என்கிற அறிவிப்புக் கிடைக்குமாயின், பொதுத் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய நிலை உருவாகும்.

உதாரணமாக, நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, சட்டப்படி செல்லுபடியாகும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால், தற்போதைய அரசியல் கொந்தளிப்பு அடங்கி விடக்கூடும். ஆனால், நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, செல்லாது என்று நீதிமன்றம் கூறுமாயின், இப்போதுள்ள பிரச்சினை தொடர்ந்து செல்லும்.

எது நடந்தாலும், “ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கப் போவதில்லை” என்று, ஜனாதிபதி கூறியுள்ளமை நினைவுகொள்ளத்தக்கது. “யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என்று, நாடாளுமன்றமோ, நீதிமன்றமோ ஜனாதிபதிக்குக் கூற முடியாது” எனவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள தரப்புக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு, ஜனாதிபதி தயாராக இருக்கின்றபோதும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு அந்தப் பதவியைக் கொடுக்க, அவர் தயாரில்லை. அப்படியென்றால், நாடாளுமன்றத்தைக் கலைத்தமை, சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், ‘ரணிலுக்குப் பிரதமர் பதவி கிடையாது’ என்கிற ஜனாதிபதியின் பிடிவாதத்தை, அந்தத் தீர்ப்பால் எதுவும் செய்து விட முடியாது.

எனவே, ‘நாடாளுமன்றில் யாரைப் பிரதமராக நியமிக்க வேண்டும் என, பெரும்பான்மையினர் விரும்புகின்றனரோ, அவரைத்தான் பிரதமராக, ஜனாதிபதி நியமிக்க வேண்டும்’ என்று, ஜனாதிபதிக்கு உத்தரவிடக்கோரி, மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை வரலாம். அவ்வாறு உத்தரவிட, நீதிமன்றுக்கு அதிகாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து, இன்னுமொரு தீர்ப்புக்காக, நாடு காத்திருக்கும் நிலை ஏற்படும்.

ரணில் விக்கிரமசிங்க மீது, இவ்வளவு கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் ஜனாதிபதியிடம், ரணிலைப் பிரதமராக நியமித்துக் கொண்டு, ஆட்சியை நடத்துமாறு கோரிக்கை விடுகின்றமை, எந்தளவுக்குச் சரியானது என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானதாகும். 

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கீழ் இருந்து கொண்டு, அவரின் வெறுப்புக்குரிய நபரொருவர் ‘முழுமையான’ பிரதமராகப் பணியாற்றுவதென்பது, அவ்வளவு லேசுப்பட்ட காரியமாக, இருந்து விடப்போவதில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

எனவே, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமித்தே ஆகவேண்டும் என்கிற தமது பிடிவாதத்தை, ஐக்கிய தேசிய முன்னணியினர் மீளாய்வு செய்தால் என்ன என்கிற கேள்வியும் இங்கு உள்ளது. 

ரணிலைப் பிரதமராக நியமித்து விட்டு, அவரைப் பிரதமராகச் செயற்பட முடியாதவாறு, ஜனாதிபதி தொடர்ந்தும் முட்டுக்கட்டைகளை இட்டுக்கொண்டிருந்தால், இப்போதுள்ள பிரச்சினை இன்னும் தீவிரமாகும். போராட்டங்கள் தொடரும்; நீதிமன்றத்தை மேன்மேலும் நாடும் நிலைவரங்கள் தொடரக்கூடும்.

ஆனால், இந்தக் கூத்துகளை எல்லாம், ஒரு கட்டத்துக்கு மேல் நாடு தாங்காது. உண்மையில், இப்போது நடந்து கொண்டிருப்பது, மக்களுக்கான அரசியல் போராட்டங்களல்ல; இது, அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கான சண்டையாகும். 

இன்னும் தெளிவாகச் சொன்னால், தமது பலத்தை நிரூபிப்பதற்காக, சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் ஆதிக்கச் சண்டைதான், இலங்கை அரசியரங்கில், இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இது முற்றுமுழுதாக, இலங்கையின் அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரமாக இருக்குமாயின், வெளிநாட்டுத் தூதுவர்களை அழைத்து, ரணில் விக்கிரமசிங்க விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. இலங்கையின் அரசியல் நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காணுமாறு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கும் தொனியில், அறிக்கைகளை விட்டிருக்கவும் மாட்டாது.

இலங்கையில், தமது கால்களை நன்றாக ஊன்றிக் கொண்டு, தெற்காசியப் பிராந்தியத்தில் தமது மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ளும் பேராசையுள்ள, நாடுகளுக்கு இடையிலான சண்டைதான், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பாகும் என்கிற உண்மையைப் பொதுமக்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் கட்சி, அணிசார் மனநிலைகளுக்கு அப்பால் நின்று, இப்போதுள்ள நிலைவரத்தைப் புரிந்து கொள்ள முடியும். 

இன்னொருபுறம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை, முற்றாக ஒழிப்பதே, தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழியாகும் என்று, ஜே.வி.பி தெரிவித்திருக்கும் கருத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை வைத்துக் கொண்டு, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண முடியாது என்பது, அதன் மறுதலையாகும்.

ஜே.வி.பியின் இந்த வாதம் முற்றிலும் சரியானதா என்கிற கேள்விகளும் உள்ளன. ஜே.பி.பி சொல்வது போன்று, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைதான், தற்போதைய பிரச்சினைகளுக்குப் பிரதான காரணம் என்றால், அந்த முறைமையை இல்லாமல் செய்வது குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யப் போவதாகக் கூறிக்கொண்டு, ஆட்சிபீடம் ஏறிய எந்தவொரு நபரும், அதை நிறைவேற்றவில்லை என்பது கசப்பான உண்மையாகும். சந்திரிகா தொடக்கம் சிறிசேன வரை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை, இல்லாதொழிக்கப் போவதாகக் கூறியே, ஆட்சிபீடமேறினர். ஆனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியின் சுவையை அனுபவிக்கத் தொடங்கிய பிறகு, அதை இழப்பதற்கு, அவர்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாகும்.

ஆனாலும், மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதிக் கதிரையில் வைத்துக் கொண்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்துக்கட்டக் கூடிய அரசியல் சூழ்நிலை, ஒரு கட்டத்தில் இருந்தது. ரணில் விக்கிரமசிங்க நினைத்திருந்தால், அதைச் செய்திருக்க முடியும். ஆனால், அதை அவர் செய்யவில்லை. ‘ஒரு காலகட்டத்தில் ஜனாதிபதியாக, தான் தெரிவு செய்யப்பட்டால், அப்போது சுவைப்பதற்கு நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதிப் பதவி இருக்க வேண்டும் என்கிற ஆசையில்தான், அதை ரணில் விக்கிரமசிங்க இல்லாமல் செய்யவில்லை’ என்கிற விமர்சனங்கள், அரசியலரங்கில் உள்ளமையையும் பதிவு செய்தல் பொருத்தமாகும்.

இன்னொருபுறம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதில், சிறுபான்மைக் கட்சிகளுக்கு விருப்பம் கிடையாது என்பதையும் பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

குறிப்பாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இருப்பதுதான், தமது சமூகத்துக்கு நல்லது என்று, முஸ்லிம் கட்சிகள் தொடர்ந்து கூறிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, ஜே.வி.பி சொல்வதுபோல்,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம்தான், இப்போதுள்ள பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காணமுடியும் என்பது, சரியான வழிமுறையாகச் சிலவேளை இருந்தாலும் கூட, அதை நிறைவேற்றுவதற்கு, ரணில் விக்கிரமசிங்கவும் அவருக்கு இப்போது ஆதரவளித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகளும் தயாரா? என்கிற கேள்வியும் இங்கு எழுகிறது.

எனவே, அரசியலரங்கில் இப்போதுள்ள பிரச்சினையின் யதார்த்தத்தைப் புரிந்து கொண்டுதான், அதற்கான தீர்வைக் கண்டடைய வேண்டியுள்ளது. ‘சட்டப்படி’ முடிவு காண்பதை விடவும், சில ‘சமரசங்களினூடாக’ முடிவு காண்பதுதான் புத்திசாலித்தனமான தீர்வாக அமையும். சுவைக்க முடியாத ‘தீர்ப்பு’களை வென்றெடுப்பதில், பலனேதும் இருக்கப் போவதில்லை. 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கு, 19ஆவது திருத்தத்தின் ஊடாக, சில கடிவாளங்கள் இடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், இதன் மூலம், ஜனாதிபதி என்கிற ‘குதிரை’யை முழுவதுமாகக் கட்டுப்படுத்தி விட முடியாது என்பதையும் நாம் அறிவோம். 

எனவே, நிறைவேற்று அதிகாரத்துடன் முட்டி மோதாமல், மீதமிருக்கின்ற நாடாளுமன்றக் காலத்தை, கொண்டு செல்வது குறித்து, அனைத்துத் தரப்பினரும் யோசிக்க வேண்டும்.

நாட்டில் பிரதமர் இல்லை, அமைச்சரவை இல்லை என்பது ஆபத்தான சூழ்நிலையாகும். இந்த நிலைவரமானது, ஜனாதிபதிக்கு மேலும் ராட்சதத்தனமான அதிகாரப் பலத்தை வழங்கியுள்ளதை ஊன்றிக் கவனிக்க வேண்டியுள்ளது. மறுபுறம், வருடத்தின் இறுதி நாள்களை நெருங்கும் நிலையிலும், பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர முடியாத நிலைவரமொன்று ஏற்பட்டுள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள், இலவசங்கள், அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் என்று, பல எதிர்பார்ப்புகள் பாதீட்டுத் திட்டத்தில் உள்ளன.

எனவே, பிடிவாதங்களுக்கு அப்பால் சென்று, தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டிய தேவை உள்ளதை, புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகளை மட்டும் வைத்துக் கொண்டு, இணக்கமானதோர் அரசாங்கத்தை, நடத்திச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குரியதாகும். 

விட்டுக்கொடுப்புகளின் ஊடாகவும் சமரசங்களினூடாகவும் கிடைக்கும் முடிவுகளை வைத்துக் கொண்டுதான், மைத்திரி – ரணில் தரப்பால் வெற்றிகரமானதோர் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியும். எனவே, அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதுதான் பொருத்தமாக அமையும்.

ஒரு பிரச்சினையில் விட்டுக் கொடுத்தல் என்பது, அதனுடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். ஆனாலும், சூழ்நிலைகளைப் பொறுத்து, சில தரப்பினர் அதிகளவில் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயங்களும் ஏற்படுவதுண்டு. 

ஒரு பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காமல் போவதால், அதனுடன் தொடர்புபட்ட எந்தத் தரப்புக்கு, அதிகளவில் பாதிப்பில்லையோ, அந்தத் தரப்பினர் அதிகளவில் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள் என்கிற யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளுதல் அவசியமாகும். எனவே, தற்போதைய சூழ்நிலையில், நிறைவேற்று அதிகாரத்துடன் முட்டிமோதி, எந்தளவுக்கு வெற்றி பெறலாம் என்கிற யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இன்றுள்ள பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கு, அரசியல் கட்சிகள் அனைத்தும் முன்வருதல் அவசியமாகும்.

மறுபுறமாக, இன்னும் ஒரு வருடத்தில், பதவிக் காலம் முடிவுறும் நிலையிலுள்ள ஜனாதிபதி, ‘தேசத்தின் முதல் மகன்’ எனும் வகையில், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சில விட்டுக் கொடுப்புகளைச் செய்வது பொருத்தமாக அமையும். மிகவும் மென்மையான ஒருவராகப் பார்க்கப்பட்டு வருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போது எடுத்து வரும் அரசியல் முடிவுகள், பலரின் புருவங்களையும் உயர்த்தி விட்டிருக்கின்றன. 

‘சாது’வான ஜனாதிபதி, ரணில் விவகாரத்தில் இந்தளவு ‘மிரண்டு’ போயுள்ளமைக்கான காரணங்கள் குறித்தும் பேசப்பட வேண்டியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்துக் கொண்டிருப்பதாலோ, தமிழ், முஸ்லிம் மக்களால் தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவுடன், மைத்திரி கைகோர்த்து விட்டார் என்பதற்காகவோ, ‘சாது’ மிரண்டதன் காரணங்களிலுள்ள நியாயங்களைப் புரிந்து கொள்வதிலிருந்தும் சிறுபான்மை சமூகங்கள் விலகி நிற்க கூடாது.

அப்படி நடந்து கொள்வது, புத்திசாலித்தனமும் அல்ல. 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்