அட்டாளைச்சேனை பிரதேச சபையில், மு.கா. சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டம் தோல்வி

🕔 December 10, 2018

– றிசாத் ஏ காதர் –

ட்டாளைச்சேனை பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்ட பிரேரணை, இன்று திங்கட்கிழமை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் ஆட்சியிலுள்ள மேற்படி சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா, இன்று சபையில் மேற்படி வரவு – செலவுத் திட்ட பிரேரணையைச் சமர்ப்பித்தார்.

இதன்போது குறித்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், ஆதராவக 08 வாக்குகளும், எதிராக 09 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் அனைவரும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த போதும், முஸ்லிம் காங்கிரசுக்கு இதுவரையில் ஆதரவாக செயற்பட்டு வந்த பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர், இன்றைய வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தமையினால், அது தோல்வியடைந்தது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையில், இம்முறை யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரசுக்கு 08 உறுப்பினர்களும், தேசிய காங்கிரசுக்கு 06 உறுப்பினர்களும்,  அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 03 உறுப்பினர்களும், பொதுஜன பெரமுனவுக்கு 01 உறுப்பினரும் உள்ளனர்.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளரைத் தெரிவு செய்வதற்காக, முஸ்லிம் காங்கிரசுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கியிருந்தது.

ஆயினும், முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக சபையில், தேசிய காங்கிரசும் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து 09 ஆசனங்களைக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக, துண்டு குலுக்கல் மூலமாக அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தவிசாளர் பதவியை
முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், அட்டாளைச்சேனை பிரதேச சபையில் உதவித் தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான தேசிய காங்கிரஸ் கைவசப்படுத்தியுள்ளது.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பட்டியல் உறுப்பினர் ஒருவர், வரவு செலவுத் திட்ட பிரேரணை சமர்ப்பிக்கப்பட்ட இன்றைய தினம், சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்