ரணிலுக்கு முடியாது: அதிகாரிகளிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

🕔 December 5, 2018

நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணலில் விக்ரமசிங்க, முதலில் அவருடைய கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகளுடன் இன்று புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போது, இந்தக் கருத்தினை அவர் வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை, நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை எனவும் இதன் போது ஜனாதிபதி கூறினார்.

எந்தவொரு காரணத்திற்காகவும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரி சேவைகளும் தடைப்பட கூடாதென இதன்போது ஜனாதிபதி  வலியுறுத்தினார்.

குறித்த நிதியாண்டிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதிகளையும், உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அவர்கள், எதிர்வரும் வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கினார்.

நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது, பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்தி செயற்திட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்றார்.

கடந்த மூன்றரை வருட காலமாக உரியவாறு கவனம் செலுத்தப்படாத வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்தி தேவைகளை நிறைவேற்றுவதற்கு, தன்னால் நியமிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி குறிப்பிடத்தக்க வகையில் செயற்பாடுகளை நிறைவேற்றி வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்