செல்போன் சர்ச்சை, ஆரா, ஃபிஃப்த் ஃபோர்ஸ்: 2.0 பேசும் அறிவியல் எந்தளவுக்கு உண்மை?

🕔 December 4, 2018

யக்குநர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த்தின் 2.0 படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா, அதில் எதெல்லாம் உண்மை? கொஞ்சம் விரிவாக அலசுவோம்.

“உங்கள் முன், அறிவியல் என்ற பெயரில் திணிக்கப்படும் போலி அறிவியலை (Pseudoscience) பகுப்பாய்வுக்கு உட்படுத்துங்கள். அதில் நமக்கு மகிழ்ச்சி அல்லது நிம்மதி தரக்கூடிய ஏதோவொன்று திணிக்கப்பட்டிருப்பதை உணர்வீர்கள். எனக்குப் புரியாதது இதுதான். ஒரு விஷயம் நமக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் தருகிறது என்பதாலேயே அது நிச்சயம் உண்மையாய் இருக்கக்கூடும் என்று நாம் எப்படி நம்புகிறோம்”? – ஐசக் அஸிமோ, Asimov’s Guide to Science (1972), பக்கம்: 15

“ஐசக் அஸிமோ பேரன்டா” என்று கெத்தாக இறங்கியிருக்கிறார்கள் சிட்டியும் குட்டியும். 2.0, 3.0 என கமர்ஷியலாக ஒரு கலக்கல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இந்திய சினிமாவின் உச்சம், பிரமாண்டப் படைப்பு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தப் படம் சயின்ஸ் ஃபிக்ஷன், ஃபேன்டஸி என்ற ஜானரின் கீழ் தன்னை அடக்கிக்கொண்டுள்ளது. தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்ததைவிட சிறந்த அவுட்புட்டையே VFX குழு வழங்கியிருக்கிறது. இதுவரை எல்லாம் சரிதான். அடித்தது எல்லாம் சிக்ஸர்தான். பிரச்னை என்று ஒன்று தொடங்குவது எங்கே எனப் பார்த்தால் படத்தின் குழப்பியடிக்கும் அறிவியலில்தான். அல்லது வெளிப்படையாகக் கேட்க வேண்டும் என்றால் `படத்தில் பேசப்படுவது அறிவியல்தானா?’ தற்போது படம் வெளியாகி 5 நாள்களைக் கடந்துவிட்டதால் அதன் உண்மைத்தன்மையை இப்போது ஆராய்வோம்.

படத்தின் ஆணிவேர், பக்ஷிராஜனாகப் பறந்து வரும் அக்ஷய் குமார். இயற்கை ஆர்வலராக இருக்கும் மனிதர், செல்போன் டவரினால் பறவைகள், முக்கியமாகக் குருவிகள் இறப்பதை எதிர்த்துப் போராடுகிறார். நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி கதிர்வீச்சை வெளிப்படுத்தும் செல்போன் நிறுவனங்களை விதிமுறைக்குட்பட்டு இயங்க வலியுறுத்துகிறார். விதிமுறைக்குட்பட்டுதான் அனைத்தும் இயங்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், அதே சமயம், செல்போன் டவர்களினால்தான் பறவைகள், அதிலும் குருவிகள் இறக்கின்றனவா? இதற்கு “போதிய ஆதாரங்கள் இல்லை!” என்று கைவிரிக்கின்றனர் விஞ்ஞானிகள். ஆனால், இதுகுறித்து தற்போதும் ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. அதில் திருப்திகரமான ஒரு முடிவே எட்டப்படாத நிலையில், `செல்போன் டவர்களால் பறவையினத்துக்கு ஆபத்து’ என எப்படி சினிமா என்ற ஒரு மாஸ் மீடியாவில், அதுவும் அறிவியல் படம் என மெச்சப்படும் ஒரு ஜனரஞ்சக சினிமாவில் எப்படி புகுத்த முடியும்?

அப்படியென்றால் செல்போன் டவர்களால் பறவைகள் இறப்பதே இல்லையா? நடக்கிறது. 2012-ம் ஆண்டின் தரவுப்படி, கனடா மற்றும் அமெரிக்காவில் மட்டும் 6.8 மில்லியன் பறவைகள் செல்போன் டவரினால் இறந்திருக்கின்றன. ஆனால், அது கதிர்வீச்சினால் இல்லை. பல நேரங்களில், குறிப்பாகப் பனி படர்ந்த இரவுகளில் வேகமாகப் பறக்கும் பறவைகள் டவர்களில் மோதி இறக்கின்றன. இப்படி இறந்த கணக்குதான் அந்த 6.8 மில்லியன். இதை ஆங்கிலத்தில் `Towerkill Phenomenon’ என்று அழைக்கிறார்கள். இதைத் தாண்டி செல்போன் டவர்களை வேறு எதற்காகவும் குற்றவாளி என்று கூறிவிட முடியாது என்பதுதான் அறிவியலாளர்களின் தற்போதைய வாதம். சமீபத்தில், 5G டெஸ்டிங்கின்போது பறவைகள் செத்து விழுந்தன என்று ஒரு வீடியோ வைரலாகி பின்னர் அது போலி எனக் கண்டறியப்பட்டது நினைவில் இருக்கலாம். இப்போதும் செல்போன் டவரின் கதிர்வீச்சினால் பறவைகள் இறக்காது என்பது வாதமல்ல. உண்மை தெரியாதபோது அதைச் சந்தேகத்துடனே அணுகாமல், ஊர்ஜீதமாகாத ஒன்றை உண்மை என்ற ரீதியில் ஏன் காட்சிப்படுத்த வேண்டும்?

ஃபிஃப்த் ஃபோர்ஸ் (Fifth Force) என்று ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள். புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை, ஸ்ட்ராங் (பலம் வாய்ந்த) நியூக்ளியர், வீக் (பலமற்ற) நியூக்ளியர் என நான்கு விசைகள் இருக்கின்றன. இதைத் தாண்டி காரணங்கள் புரியாத விஷயங்களுக்கு ஃபிஃப்த் ஃபோர்ஸ்தான் காரணம் எனப் பஞ்சாயத்தை முடித்துக்கொள்கிறார்கள். இந்த விசையின் தன்மை அது நடத்திய விஷயங்களைப் பொறுத்தது. 2.0-வில் இறந்துவிட்டு பின்பு சூப்பர் வில்லனாக வந்த பக்ஷிராஜனை ஃபிஃப்த் போர்ஸ் என்கிறார்கள். இதைக்கூட ஒரு லாஜிக்காக ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால், இந்தப் படத்தில் இருக்கும் மற்றொரு மிகப்பெரிய சிக்கல் அந்த `ஆரா’ (Aura). உலகமே போலி அறிவியல் என்று ஒதுக்கிய ஒரு விஷயத்தை நிஜ அறிவியலுடன் கலந்து, “ஆம், இது உண்மைதான். இது சாத்தியம்தான்!” எனப் படத்தில் விஞ்ஞானி வேடத்தில் வரும் ஒருவரை வைத்தே பேச வைத்திருக்கிறார்கள். மனிதனைச் சுற்றி ஓர் ஆற்றல் மண்டலம் இருக்கிறது என்றும், தற்கொலை செய்து இறந்தவர்களுக்கு அது நெகட்டிவ் சக்தியாக மாறுகிறது என்றும் பேசியிருக்கிறார்கள். ஆவி, பேய் போன்ற விஷயங்களைத் தன்னுள் அடக்கிய பேராநார்மல் (Paranormal) என்பதன் கீழ்தான் இந்த ஆரா விஷயமும் வருகிறது. இப்படி ஒரு மூட நம்பிக்கைச் சார்ந்த விஷயத்துக்கு அறிவியல் முலாம் பூச வேண்டியதன் அவசியம் என்ன?

அதற்காகப் பேய் படங்கள் எடுப்பது தவறு என்று சொல்லவில்லை. அதை நிஜ அறிவியலுடன் கலந்து எதற்காக அதையும் உண்மைபோலவே முன்னிலைப் படுத்தவேண்டும்? அது சரி, அது என்ன நெகட்டிவ் எனர்ஜி / ஃபோர்ஸ்? அது தீமை மட்டும்தான் செய்யுமா? ஓர் அணுவில் புரோட்டான் பாசிட்டிவ் சார்ஜில் இருக்கிறது. எலக்ட்ரான் நெகட்டிவ் சார்ஜில் இருக்கிறது. இதில் எலக்ட்ரான் தவறு மட்டுமே செய்யும் என்று கூறுவதில் ஏதேனும் லாஜிக் இருந்துவிட முடியுமா? இது குறித்தும் செல்போன் டவர் பிரச்னை குறித்தும் விளக்கம் அளிக்கிறார் உயிரியல், தொல்லியல் மற்றும் வானியல் துறையில் ஆர்வலராகவும், ராயல் சொசைட்டி ஆஃப் பயாலஜி மற்றும் தி பிளானட்டரி சொசைட்டி ஆகிய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருக்கும் நிர்மல் ராஜா.

“எனர்ஜி எனும் ஆற்றல் ஸூடோசயின்ஸில் அதிக முறை தவறாகப் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளுள் ஒன்று. 2.0 படத்தினால் கோயிலில் இருந்த எனர்ஜி தற்போழுது மொபைல்களிலும் வந்துவிட்டது எனச் சொல்லலாம். நமக்குப் புரியாத ஒரு விஷயத்தைக் கண்டு பயப்படுவது, வியப்படைவது மனித இயல்பு. ஆனால், அந்தப் பயத்தை போக்க, வியப்பை ஏற்படுத்திய விஷயத்தைப் பற்றி மேலும் அறிய நாம் காட்டும் ஆர்வம் குறைவே. காரணம் சில காமாசோமா பதில்களிலேயே நாம் திருப்தியடைந்து விடுகிறோம். அது நமக்குத் தன்னிறைவு மற்றும் மகிழ்ச்சியைத் தந்துவிடுகிறது. எனவே, நாம் அதைத் தாண்டி செல்ல மறுக்கிறோம்.

எனர்ஜியில் பாசிட்டிவ் நெகட்டிவ் உண்டுதான். அதை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் அதன் மேல் நமது அறநெறிகளைப் பொருத்திப் பார்ப்பது ஏன் என்பதுதான் புரியாத புதிர்! கெட்டது நெகட்டிவ், நல்லது பாசிட்டிவ் என்று பிதற்றுவது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. ஒருவருக்கு நல்லது எனப்படுவது இன்னொருவருக்குக் கெட்டதாகப் படலாம். அப்பொழுது எந்தப் பக்கம் சாயவேண்டும் என எனர்ஜியானது எப்படி முடிவெடுக்கும்? அது நமக்கு எப்படித் தெரியும்? அதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? இப்படிக் கேள்விகள் பல கேட்கலாம். அறிவியலில் இதற்கெல்லாம் இடம் இல்லை. காரணம், ஆதாரங்கள் எதுவும் இல்லை.

செல் டவரும் பறவைகளும்

செல் டவர்கள் பறவைகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறதா என்றால் ஒரு விதத்தில் ஆம் என்றுதான் சொல்லவேண்டும். அது செல் டவர்கள் வெளியிடும் அலைக்கற்றைகளினால் இல்லை. ஆனால் அந்த டவர்களில் மோதி பறவைகள் இறப்பதனால்! வேகமாகப் பறக்கும் பறவைகள் இதுபோன்ற உயரமான கட்டடங்களில், டவர்களில், ஏரோப்பிளேன்களில் மோதி இறப்பது உண்டு. செல் டவர்களிலிருந்து வெளிப்படும் அலைக்கற்றைகள் அவற்றின் வழிகாட்டியாகச் செயல்படும் உறுப்புகளைச் செயலிழக்க செய்யும் என்ற ஒரு கருத்தும் உண்டு. ஆனால், அதற்கும் ஆதாரங்கள் குறைவே. சில பறவைகள் கண்ணாடிகள் நிறைந்த கட்டடங்களில் மோதி இறக்கும். சில பறவைகள் கண்ணாடிகளில் தெரியும் பிரதிபலிப்பைப் பார்த்து அதன்பின் ஒரு பறக்கும் ஸ்பேஸ் இருக்கிறது என நினைத்து அதன்மீது வேகமாக மோதி இறப்பதும் உண்டு. ஆனால் அலைக்கற்றைகளினால் இறக்கிறது என்பதுக்கு ஆதாரங்கள் அவ்வளவாக இல்லை.

சிலர் விடாப்பிடியாக செல் டவர்களுக்கும் பறவைகள் எண்ணிக்கை குறைவதுக்கும் முடிச்சு போட ஆவலாக இருப்பார்கள். இந்த குரூப்பில் டெக்னோபோபிக் (Technophobic) பேர்வழிகளும் அடக்கம். அதாவது எல்லாத் தொழில்நுட்பங்களும் ஆபத்து என நினைத்து எதிர்ப்பார்கள். ஒரு விஷயம் தங்களுக்கு அறமாகப்படுகிறது என நினைத்து, அந்தத் தவற்றைச் சரி செய்யவோ, குறையைச் சரி செய்யவோ முற்படாமல் அதை முழுவதும் தடை செய்ய வேண்டும் எனக் குதிப்பார்கள். ஸ்பெயினில் Association of People Affected by Telephone Masts (AVAATE) என இதற்கு ஓர் அமைப்பே இருக்கிறது. இதைப் பொய் என முற்றிலும் ஒதுக்குவதும் தவறு என்றாலும் இதனால்தான் எனச் சொல்லவும் நம்மிடம் போதிய ஆதாரங்கள் இல்லை.

பிரபஞ்சத்தில் வேற்றுக்கிரகவாசிகள் இருக்கின்றனரா என அறிய பல காலங்களாகப் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.ரேடியோ சிக்னல்கள் மூலம் `இங்கேதான் உலகம் இருக்கிறது’ என அட்ரசோடு தங்கத் தட்டில் (உண்மையாகவே) வைத்து வானில் எப்போதோ அனுப்பியாயிற்று. இந்த வேலை தொடர்ந்து 1970-களின் மத்தியிலிருந்தே நிகழ்ந்து வருகிறது. 2.0 படத்தில் அதை ஒரு ரகசிய வேலையாகக் காட்டியிருக்கிறார்கள். அதைக்கூட விட்டுவிடுவோம். இதில் இல்லாத ஒரு எனர்ஜியை பாசிட்டிவ் நெகட்டிவ் எனப் பிரித்து பாசிட்டிவை மட்டும் விண்வெளிக்கு அனுப்புவது எந்தக் கிரகத்து லாஜிக்கோ.

ஆரா (Aura)

1900-களில் மனோதத்துவ (metaphysical) ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்கள் பலர். அதில் ஒருவர் டங்கன் மெக்டுகல் என்றோர் அமெரிக்க மருத்துவர். `ஆத்மா உண்மை, அதைக் கண்டுபிடிக்கிறேன்’ என இறக்கும் தறுவாயில் இருப்பவர்களை எடைக் காட்டும் கருவி பொருத்திய கட்டிலில் படுக்க வைத்து அவர்கள் இறக்கும் முன்னான எடை, இறந்த பின்னான எடை என இரண்டையும் அளந்தார். இறந்தவர் உயிரோடு இருக்கும்போது இருந்ததைவிட 21 கிராம்கள் குறைவாக இருந்தார். அதனால் அந்தக் குறைந்த 21 கிராம்தான் ஆத்மாவின் (soul) எடை என அதை ஒரு பொருளாக (material) நிரூபிக்க முயன்றார். எடை குறைந்ததுக்குக் காரணங்கள் பல இருந்தாலும், டங்கனின் பாரபட்சமான, ஒருதலைபட்சமான confirmational bias-தான் அதுகுறித்து அவரை மேலும் ஆராய விடவில்லை. பின்னர் உடலைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரியும், ஆளுக்கு ஆள் அது வேறுபடும் என ஒரு கும்பல் கிளம்ப, அதையும் அறிவியல் சோதனைகளுக்கு உட்படுத்திப் பார்க்கையில் ஒரு வட்டமும் வெளிச்சமும் தெரியவில்லை. பின்னர் க்ரில்லியன் கேமரா என்றொரு டெக்னிக்கில்தான் அந்த ஆராவைக் காண / படம் பிடிக்க முடியும் எனக் கதை அளந்தார்கள். அதையும் நன்கு ஆராய்ந்த பின்னர் எதுவும் அசாதாரணமானதாக இல்லை, வெறும் வெப்பநிலை, காற்றில் உள்ள ஈரப்பதத்தினால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் எனத் தெரிய வந்தது.

ஆரா மட்டுமல்ல ஆத்மாவும் இன்றும் நிரூபிக்கப்படாத ஒன்றாகத்தான் இருக்கிறது, இதில் பேய், ஆரா, ஆத்மா, ஆவி என்றால் அது நகைப்புக்குரியதே ஒழிய ஆராய ஒன்றும் இல்லை.

சில அறிவியல் உண்மைகள் கசக்கும். அதாவது பல காலங்களாக நம்பி வந்த ஒன்றை இல்லையென்றால் வரும் ஒரு வெறுமை, வெறுப்புதான் இது. ஆனால், அதை எதிர்பார்த்து, எதிர்கொண்டுதான் விஞ்ஞானிகள் தினம் தினம் இவ்வுலகைப் பற்றிய உண்மைகளைத் தொடர்ந்து தெரிந்துகொண்டு இருக்கிறார்கள். நம் மனதுக்குச் சரியெனப் படுவது, நம் நம்பிக்கைக்கு ஊறு விளைவிக்காத ஒன்றை உண்மையென நம்புவது, வாட்ஸ்அப்பில் வருவதுதான் உண்மையென நம்புவதற்குச் சற்றும் குறைவில்லாத ஒரு செயல். இதைத்தான் ஆங்கிலத்தில் `comforting lies versus uncomfortable truths’ என்கிறார்கள்.

படத்தில் வரும் பக்ஷிராஜனுக்கு எதிராக சண்டையிடும் சிட்டியைப் போல இவ்வகை ஸூடோசயின்ஸை எதிர்த்துச் சண்டையிட நமக்குப் பல சிட்டிகள் தேவை” என்று முடித்தார்.

இப்போது தோன்றலாம்… “இதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள்? 2.0வில் பேசப்படுவது அறிவியல் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் பேன்டஸிதானே? இதற்கு முன் எந்தப் படங்களிலும் இதைச் செய்யவில்லையா? ஹாலிவுட்டிலேயே அறிவியலற்ற விஷயங்கள் நிறைய இருக்கின்றதே?” உண்மைதான். ஆனால் இங்கே அதை அறிவியல் என்று டேக் செய்ததுதான் பிரச்னையே. அதுவும் வசீகரன் என்ற விஞ்ஞானி கதாபாத்திரத்தைகொண்டே போலியான அறிவியலை முன்னிறுத்தியதுதான் தவறு.

‘This is beyond Science’ எனத் தொடங்கப்பட்ட கதை முழுக்கவே பேன்டஸியாகப் போயிருக்க வேண்டும். இல்லை, பேய் என்று வழக்கமான பாணியில் சென்றிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இது நிரூபிக்கப்பட்ட அறிவியல் என்று கம்பு சுற்றியதுதான் இப்போது பிரச்னையே! இந்தப் படம் மட்டுமல்ல. அப்படிச் செய்யும் ஹாலிவுட் படங்களுமே தவறான முன்னுதாரணங்கள்தாம். இதை ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என ஏற்றுக்கொண்டாலும் அதிலுள்ள சிக்கல்களைப் பேசுவது, பதிவு செய்வது, அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்று. இதுவும் விமர்சனம்தான். விமர்சனங்களை எல்லாப் படைப்பாளிகளும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்