கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

🕔 May 29, 2015

Eastern province flag - 01கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கமைவாக, அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு மேல் – தற்காலிகமாகப் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிரந்தர தொழில் நியமனம் வழங்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

இதற்கிணங்க, கிழக்கு மாகாணத்திலுள்ள அரச நிறுவனங்களில் 180 நாட்களுக்கு மேல் தற்காலிகமாகக் கடமையாற்றும் ஊழியர்களுக்கு – நிரந்தர நியமனம் வழங்கப்பட்டுள்ளன. ஆயினும், இம் மாகாணத்தின் உள்ளுராட்சி சபைகளில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக முறையிடப்படுகிறது.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளில் 180 நாட்களுக்கு மேல், தற்காலிகமாகக் கடமையாற்றுகின்றவர்களுக்கு நிரந்தர தொழில் நியமனம் வழங்கும் பொருட்டு, ஏற்கனவே இரண்டு தடவை நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், குறித்த நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றாத சிலர், 180 நாட்களுக்கு மேல் கடமையாற்றியவர்களின் பட்டியலில் தமது பெயர்களையும் புகுத்தி, அரசியல்வாதிகளினூடாக குறுக்கு வழியில் நிரந்தர நியமனம் பெறுவதற்கு முயற்சித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு நிலைவரம் காணப்படுகின்றமையினால்தான், தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.

எனவே, கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளில் 180 நாட்களுக்கு மேல் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் நிலையில், நிரந்தர நியமனத்தினைப் பெறுவதற்காக நேர்முகப் பரீட்சைகளுக்குத் தோற்றியவர்களுக்கு – இன்னும் காலத்தினை இழுத்தடிக்காமல், உடனடியாக நிரந்தர நியமனங்களை வழங்கி வைக்குமாறு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கேரிக்கை விடுக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்