அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயரும், விசித்திரமான பல் வலியும்

🕔 November 20, 2018

– ராஸி முகம்மத் –

க்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அஸ்மி கபூருக்கு, ஒரு விசித்திரமான பல் வலி இருக்கிறது.

எம் எல்லோருக்கும் பல் வலி வருவதுதானே. பிரதி மேயரின் பல் வலியில் அப்படி என்ன விசித்திரம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். இருக்கிறது. மிகப் பெரிய விசித்திரம் இருக்கிறது.

உங்களுக்குப் பல்வலி ஒருமாதத்தில் எந்தத் திகதியில் வரும் என்று சொல்ல முடியுமா?

ஆனால், பிரதி மேயருக்கு சொல்ல முடியும். அக்கரைப்பற்று மாநகர சபை எப்பொழுதெல்லாம் கூடுகிறதோ, அப்பொழுதெல்லாம் பிரதி மேயருக்கு தாங்கவொண்ணா பல் வலி வரும். கூட்டத்துக்கான அழைப்பிதழ் வந்தவுடனேயே பல் வலிக்க ஆரம்பிக்கும். கூட்டம் நடைபெறுமன்று, உயிர் போகுமளவுக்கு பல் வலி அதிகரிக்கும். இறுதியாக கூட்டத்துக்கு போக முடியாமல் ஆகிவிடும். திகதி போட்டு பல் வலி வருவது விசித்திரம்தானே.

பிரதி மேயரின் பல்வலிக்கு இன்னொரு விசித்திரம் இருக்கிறது.

உங்களுக்கு எந்த ஊருக்குப் போனால் பல்வலி வரும் என்று கூறமுடியுமா? ஊருக்கும் பல்வலிக்கும் தொடர்பிருக்கிறதா?

ஆனால், பிரதிமேயரின் பல்வலி ஊர் பார்த்துத்தான் வரும்.பிரதி மேயருக்குப் பல்வலி மூதூரில்தான் வரும். மூதூர் காலநிலையில் ஏதோ மர்மம் இருக்கிறது போலும். பிரதி மேயருக்கு மூதூர் சென்றால் பல்வலி வருகிறது.

ஊர்பார்த்து, நாள் பார்த்து வரும் பல்வலி விசித்திரமானது தானே.

இங்கு இணைக்கப்பட்டிருப்பது பிரதி மேயர், பல்வலி காரணமாக மாநகர சபை அமர்வுகளுக்கு செல்லாமல் இருந்தமைக்காக, மூதூரில் இருந்து பெற்று சமர்ப்பித்த மருத்துவச் சான்றிதழ்களின் பிரதிகள்.

ஒரு மருத்துவச் சான்றிதழ் மூதூர் தனியார் மருத்துவ மனையில் இருந்தும், மற்றையது மூதூர் ஆதார வைத்திய சாலையில் இருந்தும் பெறப்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் இருந்து பெற்ற சான்றிதழை ஏற்றுக் கொள்வதற்கு, மாநகர சபைச் சட்டம் அனுமதிக்கிறதா என்பது வேறு விடயம்.

இதில் சுவாரஸ்யமான விடயம் ஒன்றிருக்கிறது. இரண்டு மருத்துவச் சான்றிதழையும் கையெழுத்திட்டிருப்பவர் யார் என்று தெரியுமா?

டொக்டர் வை.எஸ்.எம். ஸியா

அதாவது தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர்தான் டொக்டடர் ஸியா. அவர் மூதூரைச் சேர்ந்தவர்.

இப்பொழுது புரிகிறதா, பிரதி மேயருக்குப் பல்வலி ஏன் மூதூரில் இருக்கும்போது வருகிறது என்று.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்