அஷ்ரப் என்கிற முகவரி

🕔 September 16, 2015

Article - 14
”மு
ஸ்லிம் காங்கிரசின் மூத்த துணைத் தலைவராக இருந்த, மருதூர் கனியின் தாயாருடைய 40 ஆம் கத்தம் (நினைவு நாள்) கொழும்பில் நடந்தது. அதில், மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்களுடன் நானும் கலந்து கொண்டேன். அந்த நிகழ்வு முடிந்தவுடன் அன்றிரவே தலைவருடன், அவரின் கம்பளை வீட்டுக்கு வந்தோம். அன்றைய தினம் அங்கு தங்கிவிட்டு, மறுநாள் அம்பாறை நோக்கி புறப்பட்டோம். கார் ஒன்றில்தான் நாங்கள் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது, தலைவர் அஷ்ரப் அவர்கள்; ‘எனக்கு அடிக்கடி துர்க் கனவுகள் வருகின்றன, ஊருக்குப் போனவுடன் 40, 50 மாடுகளை அறுத்து குர்பான் (இறைவனின் பெயரால் வழங்கப்படும் தானம்) கொடுக்க வேண்டும்’ என்று சொன்னவர், ‘திடீரென நான் மரணித்தால் என்ன செய்வீர்கள்’ என்று என்னிடம் கேட்டார். எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. ஒன்றும் சொல்லாமல், பேசாமல் இருந்து விட்டேன். இது நடந்து, இரண்டு மூன்று மாதங்கள்தான் ஆகியிருக்கும். 2000 ஆம் ஆண்டு நடந்த, அந்த ஹெலிகொப்டர் விபத்தில், தலைவர் மரணித்து விட்டார்”.

முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய மூத்த துணைத் தலைவரும், கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ‘முழக்கம் மஜீத்’ என்று, கட்சிக்குள் அறியப்படும் – ஏ.எல். மஜீத் சொன்ன தகவல்தான் மேலுள்ளது. மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் குறித்த அரிதான தகவல்கள் குறித்து, முழக்கம் மஜீத்திடம் கேட்டபோதுதான், மேற்படி அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபையில், முழக்கம் மஜீத் – மு.காங்கிரசின் உறுப்பினராகப் பதவி வகித்தவர். மு.கா. தலைவர் அஷ்ரப்புக்கு நெருக்கமாக இருந்தவர்களில் ஒருவர். தலைவர் அஷ்ரப்புடன் அந்த உரையாடல் நிகழ்ந்த காலப்பகுதியில், முழக்கம் மஜீத், கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார்.

மு.காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்கள், 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். அவர் மரணிக்கும் போது 51 வயதுதான் ஆகியிருந்தது. வெறும் 11 வருடங்கள் மட்டுமே, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஆனால், முஸ்லிம் சமூத்துக்குத் தேவையான நூற்றாண்டு கால அரசியலை அஷ்ரப் செய்து விட்டுப் போனமைதான் ஆச்சரியமான விடயமாகும்.

மு.காங்கிரசின் தலைவர் அஷ்ரப் அவர்கள், ஒரு வரலாற்று நாயகன். முஸ்லிம் சமூகத்தின் அரசியலை அவர் புரட்டிப் போட்டார். ஆண்டாண்டு காலமாக, பெருந் தேசியக் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை, புதியதொரு அரசியல் திசைநோக்கி வழி நடத்த முயற்சித்து, அதில் கணிசமானளவு வெற்றியும் கண்டு கொண்டார்.

அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் முகவரியாக இருந்தார். அஷ்ரப் என்கின்ற பெயர்தான் பல அரசியல்வாதிகளுக்கு இன்றுவரை அடையாளமாகவும் இருக்கிறது. அஷ்ரப் என்கிற, வசீகரம் நிறைந்த அந்த அடையாளத்தை வைத்துக் கொண்டு, சிலர் முஸ்லிம் சமூகத்தின் முன்பாக, அரசியல் மாயாஜாலம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

‘செத்தும் கொடை கொடுத்தார் சீதக்காதி’ என்பார்கள். இலங்கை முஸ்லிம் அரசியலில், அஷ்ரப் அவர்களும் ஒரு சீதக் காதிதான். அவரின் மரணம் கூட, இன்று பலரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது – அரசியலிலும், அதற்கு வெளியிலும்.

ஒரு தந்தையின் மரணத்தின் பின்னர் அவரின் சொத்துக்களை, அடிபிடிப்பட்டுப் பிரித்தெடுத்துக் கொண்டு போகும் மோசமான பிள்ளைகள் போல், அஸ்ரப்பின் அரசியலையும் அவர் உருவாக்கிய அரசியல் ஸ்தாபனத்தினையும், அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக்கொள்கின்றவர்கள், கூறுபோட்டு வியாபாரம் செய்து வருகின்றமையினைத்தான் அஷ்ரப்பினை நேசிப்போரால் ஜீரணிக்க முடியாதுள்ளது.

அஷ்ரப் அவர்கள் உயிரோடியிருந்தபோது, அவரின் அரசியல் தேவை குறித்து உணராதவர்கள் கூட, அஷ்ரப்பின் மரணத்தின் பின்னர் – அவரின் பெறுமானம் குறித்து உணர்ந்து கொண்டனர் என்பதுதான் உண்மை நிலையாகும்.

அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசினை உருவாக்கி வழிநடத்தி வந்தபோதும், அவரின் அந்திம காலத்தில் தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) என்கிற ஒரு கட்சியையும் ஆரம்பித்திருந்தார். மு.காங்கிரஸ் என்கிற இனத்துவ அடையாளம் கொண்ட கட்சியை அஸ்ரப் தனது இறுதிக் காலத்தில் விரும்பவில்லை என்றும், அதனால்தான், தேசிய ஐக்கிய முன்னணி என்கிற, முஸ்லிம் அடையாளமற்ற பொதுவான கட்சியை ஆரம்பித்தார் என்றும், சிலர் இப்போதும் பேசிக் கொள்வதுண்டு.

இவ் விடயம் தொடர்பிலும், மு.காங்கிரசின் மூத்த துணைத் தலைவர் முழக்கம் மஜீத், தனது நினைவிலிருந்த ஒரு விடயத்தினை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

”தேசிய ஐக்கிய முன்னணி குறித்து, தலைவர் அஷ்ரப்பிடம் அந்திம காலத்தில் ஒரு அச்சநிலை ஏற்பட்டிருந்தது. 1999 காலப்பகுதியில், ஒரு தடவை தலைவர் அஷ்ரப் அவர்களும் நானும் பாதாகொட எனும் இடத்துக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது அவர் என்னிடம்; ‘தேசிய ஐக்கிய முன்னணியை உருவாக்கியது பிழையாகப் போய்விட்டது” என்று சொன்னார்.

”ஏன் அப்படி அஷ்ரப் கூறினார்” என்று, மஜீத்திடம் கேட்டோம். ”தேசிய ஐக்கிய முன்னணி என்கிற கட்சியை ஆரம்பித்த அஷ்ரப் அவர்கள், அந்தக் கட்சியினூடாக 2012 ஆம் ஆண்டு நாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தேசிய ஐக்கிய முன்னணியில் இணைந்து கொள்ளத் தொடங்கினர். இந் நிலைமையானது, பெரும்பான்மை சமூத்துக்குள்ளிருந்த சிலருக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியது. அந்த சந்தேகமானது, காலப்போக்கில் தனக்கு அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்று, தலைவர் அஷ்ரப் அவர்கள் யோசித்தார்கள். அதனால்தான், தேசிய ஐக்கிய முன்னணியை ஆரம்பித்ததை, பிழையென்று அவர் உணரத் தொடங்கினார்” என்றார் மஜீத்.

மஜீத் சொல்லும் இந்த விடயம், மிக முக்கியமானதாகும். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் எனும் இன அடையாளம் கொண்ட கட்சியை கலைத்து விட யோசித்திருந்தார் என்று கூறுகின்றவர்களின் கதைகளுக்கு, முழக்கம் மஜீத்தின் இந்த நினைவுப் பகிர்வானது, அழுத்தமான பதிலொன்றை முன்வைக்க முயற்சிக்கின்றது.

அஷ்ரப் ஆரம்பித்த முஸ்லிம் அரசியல், முஸ்லிம்களுக்கான அரசியல் என்பது, இன்று உடைந்து சிதறிப்போய், முஸ்லிம்களை வைத்து செய்யப்படும் அரசியலாக மாறியிருக்கிறது. முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்குகின்ற பட்டறைகளாக இன்று மாறியிருக்கின்றன. கடந்த பொதுத் தேர்தல் முடிந்த பிறகு, முஸ்லிம்களை வைத்து அரசியல் செய்யும் இந்தக் கட்சிகள், ‘அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் – உனக்கா? எனக்கா?’ என்று பெருமை பேசிக் கொண்டதைக் கண்டவர்கள், இதனைத் தெளிவாகப் புரிந்திருப்பார்கள்.

அஷ்ரப் எனும் அடையாளம், இன்று அதிகமான அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கால சுவரொட்டிகளுக்குத் தேவையானதொன்றாக மட்டுமே இருக்கிறது. அதாஉல்லா போன்றவர்களின் சுவரொட்டிகளில், அதுகூட இல்லை. இப்படித்தான் இருக்கிறது நிலைமை.

முஸ்லிம்களின் தனி அரசியல் அடையாளத்தினைப் பிரதிபலிப்பதற்காக, முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் ஸ்தாபனத்தினை உருவாக்கியவர் அஷ்ரப் அவர்கள். ஆனால், இன்று அவரின் பாசறையில் வளர்ந்ததாகக் கூறிக் கொள்ளும் பலர், முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகிச் சென்று உருவாக்கிய கட்சிகளின் பெயர்களிலேயே, ‘முஸ்லிம்’ என்கிற அடையாளத்தினை வைத்திருப்பதற்கு வெட்கப்படுகிறார்கள் என்பது, எவ்வளவு பெரிய முரண்நகை.

அஷ்ரப் அவர்கள் தனது நாடாளுமன்றக் காலங்களில், உரிமை அரசியலுக்குச் சமாந்தரமாக அபிவிருத்தி அரசியலையும் செய்தார். அபிவிருத்தி அரசியல் என்பதும் உரிமை அரசியலுக்குள்தான் அடங்கும் என்பாரும் உள்ளனர். ‘எனது சமூகத்துக்கான அபிவிருத்திப் பங்கினைத் தா’ என்று, கேட்டுப் பெறுவதும் உரிமைதான் என்பது அவர்களின் வாதமாகும். எவ்வாறாயினும், அஷ்ரப்புக்குப் பின்னர், அவரின் அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரஸ் – அபிவிருத்தி அரசியலை போதுமானளவு செய்து காட்டவில்லை என்பது, அந்தக் கட்சி மீது வைக்கப்படும் பாரிய விமர்சனமாகும்.

இன்னொருபுறம், கண்களை விற்றுச் சித்திரம் வாங்கிய கதையாக, அபிவிருத்திகளைப் பெற்றுக் கொள்வதற்காக, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களைத் தாக்குவதையும், ஹலால் விவகாரங்களில் பேரினவாதிகள் கைவைப்பதையும் – கண்டுங்காணாமல் இருக்கவும் முடியாது. ஆனால், அஷ்ரப்பின் பாசறையில் வளர்ந்ததாகச் சொல்லும் அதாஉல்லா போன்றவர்கள், இவ்வாறான அரசியலைத்தான் செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

அஷ்ரப் அவர்களின் பாசறையில் இருந்தவர்கள் என்பதற்காக, அஷ்ரப்பின் அரசியலைச் செய்து விடமுடியாது என்பதற்கு மேற்சொன்னவை, கவனிக்கத்தக்க உதாரணங்களாகும். அஷ்ரப்பின் அரசியலை உள்வாங்கியவர்களால் மட்டுமே அவருடைய அரசியலை முன்கொண்டு செல்ல முடியும்.

நீரின் வெற்றிடத்தை நீர் நிரப்பி விடுவதைப் போல, அஷ்ரப் விட்டுச் சென்ற அரசியல் வெற்றிடத்தை, அவரின் அரசியலை உள்வாங்கியவர்களால் மட்டுமே நிரப்பி விட முடியும். ஆனால், முஸ்லிம் அரசியல் அரங்கில், அஷ்ரப் விட்டுச் சென்ற இடைவெளியானது, இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

இந்த உண்மையினை ஏற்றுக் கொள்வதற்கே, அஷ்ரப்பின் பெயரால் அரசியல் செய்யும் பலர் தயாராக இல்லை. அவர்கள் தங்களை இன்னொரு அஷ்ரப்பாகவே கற்பிதம் செய்து கொண்டு, அதையே மக்களிடம் பரப்பியும் வருகின்றனர். இதனால், அண்மைக் காலமாக, சிலருக்கு – ‘தேசியத் தலைவர்’ என்கிற காய்ச்சல் வேறு உருவாகியுள்ளது.

அஷ்ரப்பின் மரணம், இயல்பானதொரு விபத்தினால் ஏற்படவில்லை என்கிற கதையொன்று இன்னும் உள்ளது. அந்த விபத்தின் பின்னணயில் யார் இருந்தார்கள் என்பது குறித்தும் – நிரூபிக்கப்படாத ஓர் உண்மை உள்ளது. முஸ்லிம்கள் தனியான அரசியல் அடையாளம் பெறுவதை விரும்பாதவர்களாலேயே, அஷ்ரப் பயணித்த ஹெலிகொப்டர் வெடிக்கச் செய்யப்பட்டதாக, கணிசமானோர் இன்னும் நம்புகின்றனர்.

அஷ்ரப் எதைப் பெற்றுக் கொள்ள நினைத்தாரோ, அதனை நாம் இன்று இழந்து கொண்டிருக்கிறோம்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (15 செப்படம்பர் 2015)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்