கத்தியுடன் பாய்ந்த தேவபெரும; கட்டுப்படுத்திய உறுப்பினர்கள்: ரணகளமாக மாறிய நாடாளுமன்றம்

🕔 November 15, 2018

நாடாளுமன்றுக்குள் இன்று வியாழக்கிழமை பகல் ஏற்பட்ட குழப்பகரமான சூழ்நிலையின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும, கத்தியை ஏந்தியவாறு முன்னேறிக் கொண்டிருந்த காட்சிகள், வீடியோ மற்றும் படங்கள் மூலம் ஊடகங்களில் பரவி வருகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவபெரும – கத்தியுடன் பாயும் போது, அவரை ஏனைய உறுப்பினர்கள் கட்டுப்படுத்துவதை, அந்தப் படங்கள் காட்டுகின்றன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றில் உரையாற்றியமையைத் தொடர்ந்து, அவரின் உரை உண்மையற்றது எனக் கூறி, அது தொடர்பில் வாய்மூல வாக்கெடுப்பொன்றினை நடத்த வேண்டுமென, ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, சபையில் பெரும் குழப்பமும் கைகலப்பும் ஏற்பட்டது.

இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரியவை நோக்கி குப்பைக்கூடை மற்றும் காகிதக் கட்டுகள் போன்ற பொருட்கள் வீசப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம கையில் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக சபையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சூழ்நிலையில்தான், ஐ.தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தேவப்பெரும கத்தியுடன் பாய முயற்சித்த போது, அவரை ஏனைய உறுப்பினர்கள் கட்டுப்படுத்துவது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, “ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனநாயகத்துக்காக போராடும் லட்சணம் இதுதானா” என்பது போன்ற கேள்விகளும் விமர்சனங்களும், சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்