“புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை”: ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து மங்கள விமர்சனம்

🕔 November 13, 2018

“ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது” என, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதியாக ஆற்றிய உரை குறித்து, மங்கள சமரவீர ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புக்கு எதிரான சதியின் பின்னர், ஜனாதிபதி 03 வது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி இருந்தார். அதில், பதவிக்காக உண்மைக்கு புறம்பாக பொய்களை சொல்லக் கூடிய, ஜனநாயகத்திற்கு எதிரான சர்வதிகார போக்கில் செயற்படும் மனநோயாளியாக ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பது தெளிவாகின்றது.

கொலைகார்கள்

இந்த நாட்டில் வாழும் மக்கள் இன, மத, கட்சி பேதமின்றி, ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியலமைப்புக்கு முரணான சதித் திட்டத்தை முற்றாக நிராகரிக்கின்றார்கள். அதேபோன்று சர்வதேச சமூகம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சட்டவிரோதமான பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் குழுவை ஏற்றுக்கொள்ள இன்னும் முன்வரவில்லை. அந்தவகையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ஆற்றிய உரையில் இந்த நிலைமை இன்னும் உச்சமடைவது உறுதியாகியுள்ளது.

அரசியலமைப்புக்கு முரணாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு உரிய காரணங்களை ஜனாதிபதி தெளிவுபடுத்துகையில்; சில நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்குவதற்கு சில தரப்புகள் நடவடிக்கை மேற்கொண்டார்கள் என்று கூறியிருந்தார். இங்கு குறிப்பிடும் வகையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் 100, 150 மில்லியன் ரூபா மட்டுமல்லாமல், 500 மில்லியன் ரூபாவிற்கும் விலை பேசப்பட்டிருந்தார்கள். இவ்வாறு நடந்துகொண்டது எமது தரப்பினரல்ல. மாறாக இந்த அறிக்கையை விடுக்கும் ஜனாதிபதியினுடைய நெருங்கிய பிரதிநிதிகளே ஆகும்.

எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை தங்களது பக்கத்துக்கு அழைத்து, அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், ஜானதிபதிக்கு நெருங்கிய பிரதிநிதிகள் மூலம் அவர் தொலைபேசி அழைப்புக்கள் விடுத்து, நினைத்துப் பார்க்க முடியாதளவு தொகையை வழங்குவதற்கு ஒப்புக்கொண்ட உரையாடல் இருக்கின்றது.

அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை விலைகொடுத்து வாங்கும் வியாபாரத்துக்கு தலைமைதாங்கி இருப்பது வேறு யாருமில்லை, தன்னுடைய பிழைகளை மறைக்க பொய் கூறும் ஜனாதிபதியே என்பது தெளிவாகிறது. இதுதொடர்பில், சாட்சியும் எம்வசம் உள்ளது. அவை அனைத்தையும் தற்போது  ஏற்பட்டிருக்கும் அரசியலமைப்பு குளறுபடிகள் தீர்ந்ததும், லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு நங்கள் தயாராக உள்ளோம்.

எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தைக் கூட்டினால் அதனுள் கலவரம் வெடிக்கும் என்ற பயத்தில்தான், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கூட்டுவதை நிறுத்தி வைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். எமது தரப்பில் கொலைகாரர்கள் யாரும் இல்லை என்பதையும், ஜனாதிபதி அவர்களின் புதிய தரப்பில்தான் போதியளவு கொலைகாரர்கள் உள்ளனர் என்பதும், இந்நாட்டில் சிறு குழந்தைக்குக் கூட தெரிந்த விடயமாகும். அதன்படி நாடாளுமன்றத்தில் கொலை கூட நடக்கும் என்று பயப்பட வேண்டியது ஜனாதிபதி அவர்கள் அல்ல, நாங்கள்தான்.

லஞ்சம்  

எவ்வாறாயினும் ஜானாதிபதியவர்கள் நாடாளுமன்றத்தை கூட்டாமல், அதனைக் கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் என்னவென்றால், கோடிக்கணக்கிலான காசு பணம் கொடுத்தும், அமைச்சுப் பதவிகளை ஏலத்தில் விட்டும், எமது பக்கம் உள்ளவர்கள் அவர்களின் பக்கம் செல்லவில்லை என்பதே ஆகும். இதனடிப்படியில், ஐக்கிய தேசிய முன்னணி, காசுக்காக தனது கட்சியை காட்டிக் கொடுக்காத கொள்கையுடைய பெரும்பான்மையான அங்கத்தவர்கள் உள்ள கட்சி என்பதை நாம் சர்வதேசத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.  

அதேபோன்று, 2015 ஜனவரி 07 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்த பொழுது, ஐக்கிய தேசிய கட்சிக்கு 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை பற்றி யாரும் பேசவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பான்மை பற்றிய வாதம்

2015 இல் 41 உறுப்பினர்கள் மாத்திரம் இருந்தாலும் அன்றிலிருந்து, எல்லா சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துக்கு ஒத்துழைத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அவரின் அரசாங்கத்திற்கும், அவரின் கொள்கைகளுக்கும் எல்லா சந்தர்ப்பத்திலும் முன்னின்றுள்ளனர் என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. அதனால் பெரும்பான்மை சம்பந்தமான எந்த சிக்கலும் ஏற்படவில்லை.

அது மாத்திரமல்லாமல் ஜனாதிபதித் தேர்தலுக்கு பிறகு 2015 ஜனவரி 20 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடியது. அதன்பிறகு எங்களது அரசாங்கத்தின் முதல் வரவு – செலவுத் திட்டம் பெப்ரவரி 07 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி எமது வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 104 வாக்குகளும், எதிராக  01 வாக்கும் கிடைத்ததுடன் 103 பெரும்பான்மை வாக்குடன் வரவு – செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது.    

அதேபோன்று, 2015 ஏப்பிரல் 28ஆம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு உரித்தான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்ட 19 வது திருத்த சட்டத்தின் போது, அதற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிக்காமலும், 07 உறுப்பினர்கள் சமூகளிக்காமலும் இருந்தனர்.

அதன்படி 5/6 பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இக்காலகட்டத்தில் எமக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை குறைவாக இருக்கவில்லை. அதற்காக நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கவும் இல்லை. 2015 இல் இருந்து இதுவரையில், நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற எல்லா வாக்கெடுப்புக்களிலும் வெற்றியடைந்துள்ளோம்.

பிரதமருக்கு எதிரான சூழ்ச்சி  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில் பிரதமருக்கு விரோதமாக சூழ்ச்சி செய்யப்பட்டு, முன்னெடுத்த நம்பிக்கையில்லாப் பிரேரனையிலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில், வெற்றிபெற  ரணில் விக்கிரமசிங்கவினால் முடிந்தது. அந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும் எதிராக 122 வாக்குகளும் 26 சமூகளிக்காத உறுப்பினர்களும் உள்ளடங்கலாக 46 கூடிய வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பெரும்பான்மை தொடர்பாக எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அதன்படி ரணில் விக்கிரமசிங்கவின் நாகரீகத் தன்மை, கலாசாரம் மற்றும் குடும்ப பின்னணியைக் கொண்டு கோபம் மற்றும் ஆக்ரோஷம் அடைந்த ஜனாதிபதி, சட்டபூர்வமான பிரதமரை அகற்றியதும், நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்ததும் முழுமையாகக் கலைத்தலும், சர்வதிகார வெறியால் ஆவேசமடைந்த புத்தியில்லாத பித்தனின் நடவடிக்கை என்பது தெளிவாகின்றது.

சபாநாயகர் மீதான தாக்குதல்

இந்த நாகரீகமற்ற செயலுக்கு விரோதாமாக, பயமின்றி எழுந்து நின்ற சபாநாயகரை கீழ்த்தரமாக விமர்சிக்க, ஜனாதிபதி தமதுரையில் நீண்ட நேரத்தை ஒதுக்கியிருக்கின்றார்.

ஜனநாயகம் என்பது நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை மற்றும் நீதித்துறை எனும் மூன்று தூண்களைக் கொண்டுள்ளது. அதற்காக அரசுரிமை மற்றும் சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் இல்லாத சூழ்நிலையில், சட்டவாக்கத்றையின் சுயாதீனத்தை பாதுகாக்க தோள் கொடுப்பது சபாநாயகரின் கடமையாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையைப் பாதுகாக்க அவர் கடமைப்பட்டுள்ளார். அதேபோன்று, பொதுமக்களின் இறையாண்மை சம்பந்தமான உரிமையும் அவருடையது. அதற்காக அவர் பயமின்றி முன்னின்றார்.

சூழ்ச்சியாளர்களின் பயமுறுத்தல்களுக்கு மத்தியில் சபாநாயகர் முன்னெடுத்த தைரியமான நடவடிக்கைகளுக்காக நாம் அனைவரும் கடமைப்பட்டுளோம். அதேபோன்று அவரின் உயிரைக் காப்பாற்றுவது ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் அனைத்து குடிமகனினதும் கடமை என்பதை நினைவூட்ட வேண்டும்.

இறுதியாக கூறுவது என்னவென்றால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி சபையை உருவாக்கிய இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் முழுமையான விருப்பத்தை நிராகரித்து ஜனாதிபதி மைத்திரி, அவரின் வழக்கமான கீழ்த்தரமான முறையை கையாண்டுள்ளார்.

அவ்வாறெனின் அதற்கு எதிராக உயர் சுதந்திர ஜனநாயகத்தை நம்பி, அதற்கு மதிப்பளித்த மக்களுடன் நாம் தைரியமாக சுதந்திரத்தின் உச்சத்திற்கு செல்லத் தயாராக உள்ளோம்.   

Comments

புதிது பேஸ்புக் பக்கம்