பெரும்பான்மையை காட்டக் கூடிய நிலையிருந்தும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது: ஹிஸ்புல்லா

🕔 November 11, 2018
நாட்டில் நிலையற்ற ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு,  நாட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, நாட்டில் நிலையான அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மஹா குரூப் நிறுவனத்தின் தலைவரும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷனின் செயலாளருமான அஷ்ஷேய்க் மும்தாஸ் மதனியின் ஏற்பாட்டில் ‘வாழ்வோரை வாழ்த்துவோம்’ என்ற நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

“நாட்டில் கடந்த 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் மாற்றம் அவசரமாக தீடீர் என்று ஏற்பட்ட மாற்றம் அல்ல. நாட்டில் கடந்த பத்து மாதங்களாக ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடி நிலை காரணமாகவே முன்னாள் பிரதமரை நீக்கவிட்டு புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. பொருளாதார ரீதியாக நாடு நலிவடைந்து போகின்றது. நாளுக்கு நாள் இலங்கை ரூபாயின் பெறுமதி குறைந்து டொலரின் பெறுமதி அதிகரிக்கின்றது.

நாட்டின் தேசிய பொருளாதார கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்படவில்லை. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி விசேட நிபுனர் குழுவொன்றை நியமித்த போதிலும், முன்னாள் பிரதமர் ஒரு சிலரை மாத்திரம் வைத்துக் கொண்டு பொருளாதார நடவடிக்கைகளை வழிநடத்தியமை, பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. அத்துடன் மத்திய வங்கியில் இடம்பெற்ற பாரிய மோசடியும் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகப்பெரும் காரணமாகும்.

இது சம்பந்தமாக முன்னாள் பிரதமருடன் ஜனாதிபதி பல தடவை பேச்சு நடத்திய போதிலும், அவர் முன்வைத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்த முன்னாள் பிரதமர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக இலங்கையின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்றதோடு அடகு வைக்கும் நிலைமையே உருவானது.

இலங்கை மத்திய வங்கியின் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கையினை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க எடுத்த முயற்சிகளை, கடந்த நான்கு ஐந்து மாதங்களுக்கும் மேலாக, முன்னாள் பிரதமர் தடுத்து முடக்கி அது சம்பந்தமாக நாடாளுமன்ற பிரேரணையை திகதி குறிப்பிடாது ஒத்திவைத்தார். அது தொடர்பிலே உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதவாறு, சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சுக்கு உத்தரவிட்டிருந்தார்.

நாடாளுமன்றத்தில் 20ஆவது சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது. வடகிழக்கை மீண்டும் இணைத்து சமஷ்டி முறையிலான நிர்வாக அமைப்பை முன்னாள் பிரதமர் குறுக்கு வழியில் செய்ய முற்பட்டார். இது தொடர்பில் நாங்கள் கேள்வி எழுப்பும் போது, ஐ.நா. சபை, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் நோர்வே போன்றவற்றின் அழுத்தம் என்று தொடர்ச்சியாக கூறிவந்தாரே தவிர நாட்டின் இறைமை, எதிர்காலம் நாட்டு மக்களின் எதிர்கால வாழ்க்கை பற்றி அவர் சிந்திக்கவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில்தான் ஜனாதிபதியை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டமை அம்பலமானது. எனினும் அது தொடர்பான விசாரணை அறிக்கையினை ஜனாதிபதிக்கு வழங்க முன்னாள் பிரதமரும், முன்னாள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவை தொடர்ந்தும் பிரதமராக வைத்திருந்தால் இந்த நாட்டின் இறையாண்மை, பொருளாதாரம், பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகிவிடும் என்ற காரணத்தினால், பிரதமர் பதவியை ஏற்க முன்வருமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐ.தே.க. பிரதித்தலைவர் சஜித் ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். எனினும், அவர்கள் முன்வராத நிலையில் ஐ.ம.சு.கூ. பிரதித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவை நாங்கள் பிரதமராக்க நினைத்தோம். இருந்தாலும் அரசியல் சூழ்நிலைகள் கருதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க தீர்மானித்தது.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியமை அரசியலமைப்புக்கு முரணான செயல் என்றிருந்தால், உயர் நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டும். சட்ட ரீதியாக ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரத்துக்கு அமைய, குறித்த நியமனம் வழங்கப்பட்டது. அதனாலேயே எவரும் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை.

அந்தவகையில் புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டது. புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினை காட்டுவதற்காக சபை ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பான்மை ஆசனங்களை காண்பிப்பதற்காக பஷில் ராஜபக்ஷ, எஸ்.பி.திஸாநாயக்க உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட குழு செயற்பட்டது. அதில் நானும் உறுப்பினராக இருந்து செயற்பட்டேன்.

மு.காங்கிரஸ், அ.இ.ம.காங்கிரஸ் தலைமைகளுடனும் பேசினோம். எமக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான பலம் இருந்த போதிலும், இறுதி நேரத்தில் கட்சித்தாவல்கள் இடம்பெறலாம் என்று எமக்கு தகவல்கள் கிடைத்தன.

எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை சரி செய்ய, நிலையான அரசாங்கமொன்றினை அமைக்க வேண்டும். தற்போதுள்ள அரசியல் சூழலில் தொடர்ந்தும் அரசாங்கத்தை நிலையாக முன்கொண்டு செல்ல முடியாது.

ஆகவே, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டுள்ளது.

நாட்டின் ஸ்தீரத்தன்மை, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய நாங்கள் பொதுத் தேர்தலை முகம்கொடுக்கத் தயாராகவுள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்