பிரச்சினைகளுக்கு காரணம் ரணில்; வெளிநாட்டு ஆதிக்கத்தின் அபாயமுள்ளது: பஷீர் தெரிவிப்பு

🕔 November 5, 2018

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு பொருத்தமற்ற புதிய தாராளவாத பொருளாதாரக் கொள்கையை உட்புகுத்தி சர்வதேச பல்தேசிய கம்பனிகளின் நலன்களுக்காகச் செயற்பட்டமையே இன்றைய அரசியல் நெருக்கடிக்குக் காரணம் என முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் இன்றைய அரசியல் நெருக்கடியின் பிதா மகன் என்றும் அவர் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சார்ந்தவர்களும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை மேலும் ஆழமாக்குவதற்கு மேற்கொள்கின்ற செயற்பாடுகள் பிராந்தியத்தில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தை அதிகரிக்கச்செய்து இலங்கை மக்களுடைய சுதந்திரத்தை பறிக்கச்செய்யும் ஆபத்து இருக்கிறது என்றும் அவர் விபரித்தார்.

ஏறாவூர் – பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர் பாராட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பஷீர் சேகுதாவூத் இதனை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு பாடசாலை அதிபர் எம்எம்.  ஜலால்தீன் தலைமையில் நடைபெற்றது.

இங்கு பஷீர் சேகு தாவூத் தொடர்ந்து பேசுகையில்,

ரணில்தான் காரணம்

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இலங்கையில் பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரணம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஆவார். அவருடைய அணுகுமுறைகள்தான் இங்கு பிரச்சினைகளைத் தோற்றுவித்தன.

அவருடைய அரசியல் நடைமுறை அதிகாரத்தைப் பயன்படுத்தும் பாங்கு, நிர்வாக முறைமை, அவருக்கு சாதாரண பொதுமக்களுடன் நெருக்கமான தொடர்பின்மை சர்வதேச பெரும் சக்திகளுடனான உறவு, அந்த சர்வதேச பெரும் சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துப்போவது போன்ற இவ்வாறான நடவடிக்கைகள் ரணில் விக்கிரமசிங்கவிடம் காணப்படுகின்றன.

வெளிநாட்டு ஆதிக்கம்

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரைச் சார்ந்தவர்களும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஆழமாக்குவதற்கு மேற்கொள்கின்ற செயற்பாடுகள், பிராந்தியத்தில் வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தை அதிகரிக்கச்செய்து இலங்கை மக்களுடைய சுதந்திரத்தை பறிக்கச்செய்யும் ஆபத்து இருக்கிறது.

எனவே இந்நிலையில் அரசியல் தலைவர்களுக்கிடையே போட்டி இருக்கலாம். சில தலைவர்கள் பதவிகளை நிலைநிறுத்துவதற்காக முயற்சிக்கலாம். சில தலைவர்கள் நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்காகப் போராடலாம். எப்படி இருந்தாலும் அரசியல் அதிகாரம் என்பதை சந்தர்ப்பவசமாக பயன்படுத்துவதற்கு தயங்கமாட்டார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எமது நாட்டைப் பாதுகாக்கின்ற பணியில் அனைத்து மக்களும் ஒன்றுபடவேண்டும்.

எதிர்காலம் அரசியல் சவாலுக்குரிய காலம் என்பது மட்டும் யதார்த்தமானதாகும். இதனால் எமது நாட்டிற்கு எந்தவிதமான ஆபத்துக்களும் வராத வகையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல்வாதிகளும் செயற்படவேண்டும்.

முஸ்லிம்களின் கடமை

இதேவேளை, நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு மிகமுக்கியமான வகிபாகம் இருக்கிறது.

முஸ்லிம்கள் தாம் விரும்புகின்ற அரசியல் கட்சித் தலைவர்களது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு ஒவ்வக்கூடிய வகையில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்யக்கூடாது. மறைந்த தலைவர் மாமனிதர் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்னதுபோல நாங்கள் ஒரு நடுநிலையான சமூகமான இருந்து, இரண்டு சமூகங்கிடையிலான பாலமாகச் செயற்படவேண்டும்.

ரணில்தான் நிரூபிக்க வேண்டும்

அடுத்த சில நாட்களில் நாடாளுமன்றம் கூடுகின்றபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெரும்பான்மை இல்லை என்று ரணில் விக்கிரமசிங்கதான் நிரூபிக்கவேண்டும். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசியலமைப்பில் சொற்கூட்டங்கள் உள்ளன. அந்த அரசியலமைப்பிலுள்ள சொற்கூட்டங்களுக்கு வியாக்கியானங்களை பொருள்கோடலை நீதிமன்றங்கள் தான் செய்யவேண்டும்.

இந் நிலையில் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியமையை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். ஆனால் யதார்த்தம் புரிந்ததனால் அவர் அவ்வாறு செய்ய வில்லை” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்