எஞ்சியிருந்த ஒரே தீர்வு

🕔 October 30, 2018

– முகம்மது தம்பி மரைக்கார் –

திர்பாராத ஒரு திருப்பம் அரசியலில் நடந்திருக்கிறது. அரசியலில் ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே’, இந்தத் திருப்பம் அதிர்ச்சியானதாக அமைந்துள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவை, பிரதமர் பதவியில் மைத்திரி அமர்த்தியதை, நம்ப முடியாத ஒரு கனவு போலவே, இன்னும் பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். திரைப்படங்களை விடவும், சிலவேளைகளில் அரசியல், அதிரடிகள் நிறைந்தவை என்பதை, நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஓங்கி குத்தப்படும் முத்திரை  

வழமை போலவே ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக ஆட்சியமைக்கும் அரசாங்கங்கள் இடைநடுவில் கலைவது போல், இந்த ஆட்சியும் கவிழ்ந்து போகும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது. ‘அரசியலில் ரணில், அதிர்ஷ்டமில்லாதவர்’ என்கிற முத்திரை, இந்த நிகழ்வுக்குப் பின்னர், மீண்டும் ஒரு தடவை, அவர் மீது ஓங்கிக் குத்தப்பட்டிருக்கிறது.

ரணில் அமைக்கும் அரசாங்கம், ஒவ்வொரு முறையும் இடைநடுவில் கவிழ்ந்து போவதற்கு, என்ன காரணம் என்கிற கேள்வி முக்கியமானதாகும். ‘ரணில் விக்கிரமசிங்க, தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பவர்’ என்கிற பேச்சு, பரவலாக உள்ளது.

அவரின் அந்தக் குணம்தான், அவருடைய கட்சிக்குள்ளும் அரசாங்கத்திலும், அவருக்கு எதிரான நிலைவரங்கள் தோன்றுவதற்குப் பெரிதும் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றியிருந்த உரையிலும், இதே குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். “ரணில் விக்கிரமசிங்க, பொதுவாகவே கூட்டுச் செயற்பாடற்றவர்; தன்னிச்சையான தீர்மானங்களை எடுப்பவர்; மிகவும் முரட்டுத்தனமாகவும் பிடிவாதம் மிக்கவராகவும் அரசாங்கத்தில் அவர் செயற்பட்டார். அவரின் அந்தச் செயற்பாடுகள், பாரிய அரசியல் நெருக்கடியொன்றை உருவாக்கின” என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தமை கவனத்துக்குரியதாகும்.

தன்னிச்சையானவர்  

மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட்ட பிணை முறி மோசடியானது, இந்த நாட்டில் தெரிந்து நடந்த, மிகப்பெரும் ‘அரசியல் கொள்ளை’ எனக் கூறப்படுகிறது. அதன் பிரதான சந்தேக நபராக, அர்ஜுன மகேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் உருவானதை அடுத்து, மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜுன மகேந்திரனை, ரணில் விக்கிரமசிங்கதான் நியமித்தார். அவர், சிங்கப்பூர் பிரஜையாக இருந்த நிலையிலும், அந்தப் பதவியை, ரணில் வழங்கினார். அர்ஜுன மகேந்திரனும் ரணில் விக்கிரமசிங்கவும் நெருங்கிய நண்பர்கள் என்பது, அறிந்த விடயமாகும்.

அதனால்தான், “நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ள அர்ஜுன மகேந்திரனை, அழைத்து வரவேண்டிய பொறுப்பு, ரணிலுக்கு உரியதாகும்” என்று, ஜனாதிபதி தனது உரையில் கூறியிருக்கின்றார்.

ரணில் விக்கிரமசிங்கவுடனான உறவு, தனக்குக் கசந்தமைக்கும், மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கு, தான் முடிவு செய்தமைக்குமான காரணங்கள் என்ன என்பதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உரையில் விவரித்திருந்தார். அவர் கூறிய காரணங்கள், உண்மையாக இருக்குமாயின், பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலக்கப்பட வேண்டியவர் என்றுதான், நேர்மையுள்ள எவரும் கூறுவர்.

பிரதான காரணம்  

ஆனாலும், அதை ஜனாதிபதி செய்த விதமும், ரணிலுக்குப் பதிலாக, பிரதமர் கதிரையில் மஹிந்த ராஜபக்‌ஷவைக் கொண்டு வந்து அமர்த்தியமையும் சரிதானா என்கிற கேள்வியும் மக்களிடம் உள்ளது.

இருந்தபோதும், “எனக்கு முன்னால் எஞ்சியிருந்த ஒரே தீர்வு, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக்குவதுதான்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார்.

அவ்வாறாயின், அந்த நிலைக்கு அவரைத் தள்ளி விட்ட நெருக்கடிகள் எவை என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

அதை ஜனாதிபதியே கூறியிருக்கின்றார். மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமிப்பதற்கு, மிகப் பிரதான காரணம் என்ன என்பதை, தனது உரையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு விவரித்துள்ளார்: “என்னைப் படுகொலை செய்வதற்கான திட்டம் குறித்து, நாமல் குமார என்பவர் அம்பலப்படுத்தியிருந்தார். அது தொடர்பாக, விசாரணை செய்யுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டேன். ஆனால், பொலிஸ்மா அதிபர் அந்த விசாரணையை, முதலில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்காமல், பொலிஸிலுள்ள ஒரு பிரிவுக்குக் கையளித்தார். அந்த விசாரணைகளில் நம்பிக்கை கொள்ள முடியாது என்பதை நான் உணர்ந்தேன்”.

“அதேவேளை, இந்தச் சதித் திட்டம் குறித்து, தகவலை வழங்கிய நபர், ஒப்படைத்த ஒலிப்பதிவுகள் சந்தேகத்துக்குரியவை என்று, முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னராகவே, பொலிஸ் மா அதிபர் அறிவித்தார். நாட்டின் ஜனாதிபதியைக் கொலை செய்யும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை, வெளியிட்ட ஒலிப்பதிவுகள் மீது, எந்தவிதமான தொழில்நுட்ப  விசாரணையையும் மேற்கொள்ளாது, அந்த ஒலிப்பதிவுகள் சந்தேகத்துக்குரியவை எனக்கூறும் அளவுக்கு, பொலிஸ்மா அதிபரின் அந்தக் கீழ்த்தரமான செயற்பாடு உகந்ததா?”

“இந்தச் சதி பற்றிய விசாரணைகளை, மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் புலனாய்வுப் பிரிவினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும் அரசாங்கத்தின் புலனாய்வுக் குழுக்களும், இதுவரை பெற்றுக்கொடுத்திருக்கின்ற தகவல்களின்படி, இந்தச் சதித்திட்டம், மிகப் பாரதூரமானதாகவே இருக்கின்றது”.

“நாட்டு மக்களுக்கு, இதுவரை அறியக் கிடைக்காத பெருமளவு தகவல்கள், இது தொடர்பில் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. என்னைக் கொலை செய்வதற்கான, சதித்திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பற்றிய தகவல்களையும் இந்த நபர் பெற்றுக் கொடுத்திருக்கின்றார். அதேநேரத்தில் இந்த விசாரணைகளுக்குப் பாதகமான முறையில், பலவிதமான தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன”.

“சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்புமிக்க சில அதிகாரிகள், இந்த விசாரணைகளின் முக்கியமான திருப்புமுனைகளில், நழுவிச் செல்லும் நிலைமையும் ஏற்பட்டிருக்கின்றது”.

கவனத்துக்குரிய நியாயம்  

ஜனாதிபதி கூறியுள்ள தகவல்கள், பாரதூரமானவை. “நான் நம்பியவர்களே, என்னைக் கொல்வதற்குத் திட்டமிட்டார்கள். எனவே, எனது உயிரைக் காத்துக் கொள்வதற்காகவே, இந்த முடிவை நான் எடுத்தேன்” என்கிற அவரின் பக்க நியாயம், கவனத்துக்கு உரியதாகும்.

ஆனாலும், இந்த விவகாரத்தை வேறு விதமாக, ஜனாதிபதி கையாண்டிருக்கக் கூடாதா என்கிற கேள்விகளும் உள்ளன. “மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சி தேவையில்லை என்று தீர்மானித்துத்தானே, உங்களுக்கு வாக்களித்து, ஜனாதிபதி ஆக்கினோம். ஆனால், நீங்களே மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சியில் அமர்த்தியமை, எந்த வகையில் நியாயமாகும்?” என்று, மக்கள் கேட்கின்றார்கள்.

ஆளுமை பற்றிய விமர்சனம்

இந்த இடத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆளுமை மீதான விமர்சனம் அவசியமாகிறது. ஒவ்வொரு விடயத்தையும் சந்தர்ப்பங்களுக்கேற்ப, நபரொருவர் எவ்வாறு திறம்படக் கையாளுகின்றார் என்பதை வைத்தே, அவருடைய ஆளுமை தீர்மானிக்கப்படுகிறது.

தான் நம்பியவர்களே, தன்னைக் கொலை செய்யும் திட்டத்தை வகுக்கிறார்கள் என்கிற தகவல், ஜனாதிபதியை அச்சப்படுத்தி இருக்கிறது. அந்த அச்சமானது, அவருக்குள் ஒரு தற்காப்பு மனநிலையை உருவாக்கியிருக்கிறது.

‘தக்கன வாழும்’ என்பது, இயற்கை விதியாகும். தனது உயிரையும் அரசியலையும் பாதுகாத்துக் கொள்வதற்காக, என்ன செய்வது என்கிற பதற்றத்துடன் யோசித்தபோது, மைத்திரிக்குக் கிடைத்த முடிவுதான், ரணிலைக் கழற்றி விட்டு, மஹிந்தவை அணைத்துக் கொள்வது” என்பதாகும்.

அதேவேளை, மைத்திரியின் இந்தத் தீர்மானம், அவரின் ஆளுமைக் குறைபாட்டை வெளிப்படுத்தியுள்ளதா என்கிற கேள்வியையும் உருவாக்கியுள்ளது. நெருக்கடியானதொரு சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல், தனது எதிராளியிடம் சரணடைந்து விட்டமையானது, அவரின் ஆளுமையிலுள்ள பலவீனமாகப் பார்க்கப்படுகிறது.

இன்னொருபுறம், மைத்திரியின் இந்தத் தீர்மானத்தை ராஜதந்திரம் மிக்கதாகக் கூறி, மற்றொரு தரப்பு வியக்கிறது. தனக்கு ஆபத்தாக உருவெடுத்த ரணில் தரப்பை, ஓரங்கட்டி விட்டு, தனக்கு எதிராகச் செயற்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷவை, தனக்குக் கீழ் பணிபுரியும் பிரதம மந்திரா க்கி உள்ளார் மைத்திரி. மேலும், இதன் மூலம், பிளவுற்றிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, அவர் ஒன்று சேர்த்திருக்கிறார். அதேவேளை, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில், தனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அதிக சபைகளைக் கைப்பற்றிக் கொள்ளும் சாத்தியங்களை, உருவாக்கியிருக்கிறார்.

அத்தோடு, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், சுதந்திரக் கட்சி சார்பாக, தான் போட்டியிடுவதற்கான ஒரு சாத்தியத்தை மைத்திரி ஏற்படுத்தி இருக்கிறார்.

அப்படியில்லாமல், இந்த முறையுடன் அரசியலில் இருந்து, தான் ஓய்வு பெறுவதென்றாலும், அதன்பிறகு, மஹிந்த தரப்பு ஆட்சிக்கு வந்து, பழிவாங்காமல் இருப்பதற்கான ஒரு நிலைவரத்தை, தனது தற்போதைய தீர்மானத்தின் மூலமாக, அவர் செய்திருக்கிறார் என்கிற பாராட்டுகளும் மைத்திரிக்கு உள்ளது.

பெரும் துரோகம்  

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமர் பதவியில், மைத்திரி அமர்த்தியிருக்கக் கூடாது என்று கணிசமான தமிழர்களும் முஸ்லிம்களும் கூறுகின்றனர்.

அவ்வாறு மைத்திரி நடந்துகொண்டமை, அவருக்கு வாக்களித்த மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும் என்றும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிக்குத் தாங்கள் வழங்கிய ஆணையை, அவர் மீறி விட்டார் என்று, அவருக்கு வாக்களித்த மக்களில் ஒரு சாரார் கோபப்படுகின்றனர்.

அதேபோன்று, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் வாதப் பிரதிவாதத்துக்குரிய கருத்துகளை மக்கள் வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ரணில் மீதான கசப்பு 

நல்லாட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, ரணிலின் பதவி நீக்கத்தை சிலர் கவலையின்றிப் பார்க்கின்றனர். குறிப்பாக, கண்டி – திகன பிரதேசத்திலும், அம்பாறையிலும் நல்லாட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதலின் பின்னர், ரணில் விக்கிரமசிங்க மீது, முஸ்லிம்களுக்குக் கடுமையானதொரு கசப்புணர்வு ஏற்பட்டமையைக் காணக்கிடைத்தது.

திகன தாக்குதலின் போது, சட்டம்,  ஒழுங்கு அமைச்சை கையில் வைத்துக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க, ஐந்து நாள்கள், ‘சும்மா’ இருந்தார் என்றும், அந்தக் காலப் பகுதியில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியோருக்குக் ‘கதவு’ திறந்து கொடுக்கப்பட்டதாகவும் முஸ்லிம்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின் போது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக, முஸ்லிம்கள் திரண்டு வாக்களித்தமைக்குக் காரணம், அவரின் ஆட்சியில், முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாதச் செயற்பாடுகளும் தாக்குதல்களுமாகும்.

ஆனால், அதே வகையான தாக்குதல்களும் இனவாத அச்சுறுத்தல்களும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திலும் நடந்தமை, முஸ்லிம் மக்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முரண்பாடு  

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியதும், அந்தப் பதவியில் மஹிந்த ராஜபக்‌ஷவை உட்கார வைத்ததும், சட்டப்படிதான் மேற்கொள்ளப்பட்டனவா என்கிற கேள்விகளும் உள்ளன. இதற்குரிய பதில்கள், வாதப் பிரதிவாதங்களுக்கு உரியவையாகும். இந்த விடயத்தில், சட்ட நிபுணர்களின் அபிப்பிராயங்கள் முரண்படுகின்றன.

எனவே, இதிலுள்ள சட்டத்தன்மை குறித்து, இங்கு நாம் பேசவில்லை. ஆனாலும், மேற்படி ‘நீக்கல்’, ‘நியமனம்’ ஆகியவற்றை, சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே, தான் மேற்கொண்டதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கின்றார். எவ்வாறாயினும், இவ்விவகாரம் தொடர்பில், நீதி நாடப்படுமாயின், உயர் நீதிமன்றம், தனது தீர்ப்பைக் கூறும்.

பலம் பற்றிய கணக்கு  

இன்னொரு புறமாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை, ரணில், மஹிந்த தரப்பினருக்கு எழுந்துள்ளது. தற்போதைக்கு, ஐக்கிய தேசிய முன்னணிக்கு 106 நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளனர். ஆனாலும், அவற்றில் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய பங்காளிக் கட்சிகளுடையவை ஆகும்.

மறுபுறமாக, மஹிந்த தரப்பினரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு  95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவசம் உள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில்தான், நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கும் சமர் தொடங்கியுள்ளது.

எதிர்வரும் 16ஆம் திகதி வரை, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ள நிலையில், இடையிலுள்ள நாட்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பேரம்பேசல்கள் தீவிரமடையலாம் என்கிற பேச்சு உள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் பணபலம், இவ்வாறான பேரம்பேசல்களை நடத்துவதற்கான ஆளணி போன்றவை, இங்கு ஆதிக்கம் செலுத்தும் என்று, ‘புரண்ட் லைன்’ இதழின் இணை ஆசிரியர், ஆர்.கே. ராதாகிருஷ்ணன் பி.பி.சி க்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில், கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முஸ்லிம் கட்சிகள் அநேகமாக ஆளும் தரப்பில் இணைந்து கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருப்பதால், இம்முறையும் ஆட்சி அமைத்திருப்பவர்களுடன் முஸ்லிம் கட்சிகள் இணைந்து கொள்ளும் என்கிற எதிர்வு கூறலையும் மூத்த ஊடகவியலாளர் ஆர்.கே. ராதாகிருஷ்ணன் அந்த நேர்காணலில் வெளியிட்டிருந்தார்.

தனிமைப்படல்

இவ்வாறானதொரு நிலையில், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமரானமை தொடர்பில், சீனா தவிர, வேறெந்த நாடுகளும், இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை வாழ்த்துகளையோ, வரவேற்பையோ தெரிவித்திருக்கவில்லை என்பது கவனத்துக்குரியது.

இதன் மூலம், சர்வதேசத்தில் இலங்கை தனிமைப்பட்டு விடுமோ என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

எது எவ்வாறாயினும், நாடாளுமன்றம் கூடி, கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் ஒரு வாக்கெடுப்பு வருமாயின், ஒவ்வொரு தரப்பின் கூடைக்குள்ளும் எத்தனை ‘சரக்கு’ இருக்கிறது என்பது தெரிந்து விடும்.

அதுவரையில், அரசியலரங்கில் பஞ்சமில்லாமல் அதிரடிக் காட்சிகளும் திருப்பங்களும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (30 ஒக்டோபர் 2018)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்