குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம், மைத்திரியை பதவி கவிழ்ப்பது சாத்தியமா: சட்ட விளக்கம்

🕔 October 28, 2018

– எம். இத்ரீஸ் இயாஸ்தீன் (சட்டத்தரணி) –

னாபதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்து, அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையினை ஐ.தே.கட்சி முன்னெடுப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி ஒருவரை எவ்வாறு பதவி நீக்கம் செய்யலாம், அது குறித்து அரசியலமைப்பு என்ன கூறுகிறது என்பது தொடர்பில், இந்தப் பதிவு ஒரு புரிதலை வழங்குகிறது.

இலங்கையினுடைய ஜனாதிபதிப் பதவி என்பது ஒரு அதிகாரக் கிடங்கு என்றே கூற வேண்டும். 1978 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்த அரசியல் அமைப்பினை எழுதும் போது, ஜனாதிபதிக்கு கட்டுக்கடங்காத அதிகாரங்களை கொடுத்தே இந்த யாப்பினை வடிவைத்துள்ளார்.

அதன் படி இலங்கை ஜனாதிபதி அதிகார சிகரம், அதிகார ஊற்று என்றெல்லாம் வர்ணிக்கப்படும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் அதிகாரம் தொடர்பில் தனி ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு அது மித மிஞ்சி இருக்கிறது. எனவே நாம் விடயத்துக்கு வருவோம்.

இவ்வாறு பல அதிகரங்களை கொண்டுள்ள ஜனாதிபதியை பதவி விலக்குவது என்பது, இலகுவான ஒரு காரியம் அல்ல. அது பல படிமுறைகளைக் கொண்டுள்ளது. அவற்றினை நோக்குவோம்.

இலங்கையின் அதி உயர் சட்டமான, அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில் ஜானாதிபதியின் பதவி பின்வரும் காரணங்களுக்காக வெற்றிடம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

1. அவர் இறந்தால்
2. ராஜினாமா கடிதத்தை தனது கைப்பட எழுதி, சபாநாயகருக்கு கொடுப்பதன் மூலம்
3. அவர் இலங்கை குடியுரிமையை இழக்கின்ற போது
4. அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்தினுள் தனது பதவியை பொறுப்பேற்காத பொழுது
5. உடல், உள ரீதியில் தன்னால் தனித்து இயங்க முடியாத பொழுது

இதில் எது நிகழ்ந்தாலும் பதவி வெற்றிடமாகும். ஆனால் குற்ற பிரேரனை கொண்டு வருதல் என்பதற்கு பின்வரும் காரணிகள் அவசியமாகும்.

1. ஜனாதிபதியின் தேசத் துரோகம்
2. அதிகாரத் துஷ்பிரயோகம்
3. லஞ்ச ஊழல்
4. அரசியல் அமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம்
5. துர் நடத்தை

மேற்கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மாத்திரமே, ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவரை அகற்றுவதற்கு ஒரு பிரேரனையை கொண்டு வரலாம்.

எமது நாட்டின் ஜனாதிபதி வெள்ளிக்கிழமை மாலை செய்த காரியத்துக்காக அவரை மேற்சொன்ன காரணிகளில் இரண்டுக்குள் கொண்டுவரலாம்
1. அதிகார துஷ்பிரயோகம்
2. அரசியல் அமைப்பை வேண்டுமென்றே மீறிய குற்றம்

இதற்குள் கொண்டு வந்து இவர் உண்மையிலேயே இவற்றினை செய்துள்ளாரா என்பதை நிரூபித்தால் மாத்திரமே, பிரேரணை ஒன்றை ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரலாம்.

அது விடுத்து, குற்றப் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வந்த உடனேயே ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்ப இயலாது. இனிமேல்தான் படிமுறைகள் ஆரம்பிக்கும். அதனை நோக்குவோம்.

படி 01: மேற்சொன்ன ஒரு காரணத்துக்கோ அல்லது பல காரணத்துக்கோ 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 2/3 பகுதியினர் அல்லது அரைவாசிக்கு மேற்பட்டோர் ஒரு குற்ற பிரேரனையை ஒப்பமிட்டு சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும்.

படி 02: சபாநாயகர் இந்த குற்ற பிரேரணையை ஏற்றுக் கொண்டால், அதை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடுவார். மாறாக ஏற்றுக் கொள்ளாவிடின் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும். இவ்வாறு நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளப்பட்ட விடயம் 2/3 பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டால் அதை அவர் உயர் நீதிமன்றுக்கு அனுப்புவார்.

படி 03: உயர்நீதிமன்றில் ஜனாதிபதி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அதன் மூலம் ஜனாதிபதியை பதவி நீக்க முடியாது. மாறாக உயர் நீதிமன்றம் தீர்ப்பை சபாநாயகருக்கு அறிவிக்கும்.

படி 04:  நாடாளுமன்றில் உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் விவாதம் நடைபெறும். இந்த நாள்;’ஜனாதிபதியை பதவியில் இருந்து அகற்றும் இறுதி நாள்’ என அழைக்கப்படும்.

படி 05:  விவாதத்தின் பின்னர் ரகசிய வாக்கெடுப்பு ஒன்று நடைபெறும். இதில் ஜனாதிபதிக்கு எதிராக 2/3 பெரும்பான்மை காணப்படுமாயின், சபாநாயகரினால் பெயர் குறிக்கப்பட்டு ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பலாம்.

மேற்சொன்னவை மாத்திரம்தான் படிமுறைகளாகும். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீட்டுக்கு அனுப்புவதற்கு முன்னர், ஐக்கிய தேசிய முன்னணிக்கு 2/3 பெரும்பான்மை அவசியம். தற்போது 113 ஆசனங்களை பெறவே அவதிப்படும் இந்த ஐக்கிய தேசிய முன்னணி 2/3 பெரும்பான்மைக்கு எங்கு செல்லும்?

எனவே இலங்கை போன்ற நாட்டில் குற்ற பிரேரணை கொண்டுவந்து ஜனாதிபதியை பதவியகற்றுவது என்பது மிக கடினமான காரியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்