துறைமுகத்தை மூடுமாறு சொல்பவருக்கு, அதன் ஆரம்பம் தெரியாமை வெட்கமாகும்: பைசால் காசிம் பரிதாபம்

🕔 October 18, 2018

– எம்.ஐ.எம். இத்ரீஸ் (ஒலுவில்) –

லுவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள துறைமுகத்தை மூடி விட வேண்டும் என்றும், அந்தத் துறைமுகம் குறித்து அண்மைக் காலமாக பல்வேறு அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டும் வருகின்ற மு.காங்கிரஸ் சார்பான பிரதியமைச்சர் பைசால் காசிம், அந்தத் துறைமுகத்தின் ஆரம்பம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்கவில்லை என்பதை நிரூபித்துள்ளார்.

‘வசந்தம்’ தொலைக்காட்சியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ‘அதிர்வு’ நிகழ்சியில் கலந்து கொண்ட பிரதியமைச்சர் பைசால் காசிம், ஒலுவில் துறைமுகம் 1988, 1989 ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக கூறியிருந்தார். இது முற்றிலும் தவறாகும்.

1998ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி, அப்போது துறைமுகங்கள் அமைச்சராக இருந்த எம்.எச்.எம். அஷ்ரப் – வர்த்தமானி அறிவித்தல் மூலம், இந்தத் துறைமுகத்தைப் பிரகடனப்படுத்தினார் என்பதே சரியான தகவலாகும்.

ஒலுவில் துறைமுகமானது பிரதியமைச்சரின் சொந்த ஊருக்குப் பக்கத்தில் அமையப் பெற்றுள்ளது. அதுவும், பிரதியமைச்சர் தற்போது அங்கத்துவம் வகிக்கும் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்  இந்த துறைமுகத்துக்கு தொடக்கப் புள்ளியிட்டார்.

அவ்வாறானதொரு துறைமுகம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்கிற தகவலைக் கூட அறியாதவராக, பிரதியமைச்சர் பைசால் காசிம் இருக்கின்றமை, அவருக்கும் அவரின் கட்சிக்கும் வெட்கக் கேடாகும்.

இது போன்று ‘அதிர்வு’ நிகழ்ச்சியில், பிரதியமைச்சர் பைசால் காசிம், பல பிழையான தகவல்களைக் கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு தேசிய ஊடகத்தில், அதுவும் நேரடி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் போது, எவ்வாறான பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்க வேண்டும் என்பது பற்றிய பிரக்ஞை கூட இல்லாமல், பைசால் காசிம் பேசியமை, அவரின் ஆதரவாளர்களுக்கும் அவமானமாகும்.

இந்த நிலையில், பிரதியமைச்சர் பைசால் காசிம் – நேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் வழங்கிய தவறான தகவல்களையும், அவரின் குழப்பகரமான பேச்சினையும் நையாண்டி செய்யும் வகையில், பல்வேறு ‘மீம்’கள் சமூக வலைத்தளங்களில் உலவ விடப்பட்டுள்ளன.

அவ்வாறான வீடியோ ‘மீம்’ ஒன்றினை, புதிது வாசகர்களுக்காக வழங்குகின்றோம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்