தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சுனூமி செய்ன் எழுதிய, மூன்று நூல்கள் வெளியீடு

🕔 October 13, 2018

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர், மருதமுனையைச் சேர்ந்த சுனூமி செய்ன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த புதன்கிழமை பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றம், இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

முற்றத்து மல்லிகைகள் (பிரசுரிக்கப்பட்ட  ஆக்கங்களின் தொகுப்பு) என்கிற கட்டுரை தொகுப்பு நூலும்,  கலாநிதி ஸாலிஹ் பின் இப்ராஹீம் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பாக ‘இறையச்சம்: அதன் முக்கியத்துவமும் பிரதிபலன்களும்’ எனும் நூலும், ராசித் பின் ஹுசைன் பின் அப்துல் கரீம் எழுதிய நூலின் மொழிபெயர்ப்பான ‘வெற்றிகரமான கற்பித்தலுக்கு 33 வழிமுறைகள்’ என்கிற மூன்று நூல்களே, இதன்போது வெளியிடப்பட்டன.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சிறப்பு அதிதியாக – இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாகிர் கலந்து கொண்டார்.

மேற்படி நூல்களுக்கான விமர்சன உரையினை சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி நிகழ்த்தினார்.

இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உபவேந்தர் நாஜிம்; வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அதேவேளை, சிறப்புரை ஆற்றிய இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.எம். மசாகிர்; மாணவர்கள் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில், அப் பல்கலைக்கழக  மாணவர் ஒருவர் மூன்று நூல்களை, ஒரே சமயத்தில் வெளியீடு செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

நூலாசியர் சுனூமி செய்ன் – அரபு மொழி விசேட துறையிலே, மூன்றாம் ஆண்டில் கல்வி பயின்று வருகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்