ஒலுவில் மீன்பிடி துறைமுக விவகாரம்: மணல் அகழ அனுமதியளித்தும், போராட்டத்தைக் கைவிட மீனவர்கள் மறுப்பு

🕔 October 10, 2018

– முன்ஸிப் அஹமட் –

லுவில் துறைமுக விவகாரத்தை முன்னிறுத்தி, பொதுமக்களும் மீனவர்களும் எதிரும் புதிருமாக நடத்திவரும் அமைதிப் போராட்டங்கள் ஐந்தாவது நாளாக, இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒலுவில் மீன்பிடித் துறைமுக படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றித் தருமாறு, அங்கு படகுகளை தரிக்க வைத்துள்ள மீனவர்கள், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தமது படகுகளை வைத்துக் கொண்டு கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னரே, மீன்பிடி துறைமுகத்தை அடைத்துள்ள மணலை அகற்ற வேண்டுமெனக் கூறி, ஒலுவில் பிரதேச மக்கள், துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக, ஐந்தாவது நாளாகவும் தொடர்ச்சியான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதி, மீனவர்களுக்கு வழங்கப்பட்டமையை அடுத்து, அவர்கள் அங்கிருக்கும் மணலை இயந்திரத்தின் மூலம் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்துள்ள மீனவர்களின் நிதியினைக் கொண்டே, இந்த அகழ்வு நடவடிக்கை இடம்பெறுகின்றது.

எவ்வாறாயினும், தமது கவன ஈர்ப்புப் போராட்ட நடவடிக்கையை தற்போதைக்கு கைவிடப் போவதில்லை என்று, கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் படகுப் பாதையை அடைத்துள்ள மணலை அகற்றுவதற்கான நிரந்தரத் தீர்வொன்றினை அரசாங்கம் வழங்கும் வரையில், தமது போராட்டம் தொடரும் என்றும், கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்