ஒலுவில் மக்களின் அமைதிப் போராட்டம்: நான்காவது நாளாகவும் தொடர்கிறது

🕔 October 9, 2018

– மப்றூக் –

லுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக்குத் தீர்வு காணும் வரையில், ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றக் கூடாது என வலியுறுத்தி, ஒலுவில் மக்கள், இன்று நான்காவது நாளாகவும் தமது சாத்வீக போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மணல் மூடியுள்ளமையினால், ஒரு மாதத்துக்கும் மேலாக, அங்கு தரித்து நிற்கும் படகுகள், தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த வாரம் ஒலுவிலுக்கு வருகை தந்திருந்த துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் படகுப் பாதையை மூடியுள்ள மணலை அகற்றித் தருவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில், ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கான தீர்வு வழங்கப்பட்ட பின்னரே, மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்ற வேண்டுமென கூறி, ஒலுவில் பிரதேச மக்கள் கடந்த சனிக்கிழமை சாத்வீக போராட்டமொன்றி ஆரம்பித்தனர்.

ஒலுவில் துறைமுக நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட கூடாரத்தினுள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கியிருந்து இந்த போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

ஒலுவிலில் துறைமுகம் அமைக்கப்பட்ட பின்னரே, தமது கடற்கரைப் பகுதியில் தீவிர கடலரிப்பு உருவாகியுள்ளதாக ஒலுவில்  மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதேவேளை, ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளை தரிக்கச் செய்துள்ள மீனவர்கள், நேற்று தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக, தொடர் போராட்ட நடவடிக்கையொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றைய தினம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அதிகாரிகள் சந்திப்பொன்றினை நடத்தியமையினை அடுத்து, மீன்பிடி துறைமுகத்தை மூடியுள்ள மணலை அகற்றுவதற்கான அனுமதியை வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆயினும், அந்த அனுமதியினை எழுத்தில் வழங்குமாறு கோரி, மீனவர்கள் தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்