மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராக ஜவாத் நியமனம்

🕔 October 5, 2018

– அஹமட் –

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கே.எம். ஜவாத், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனங்களுக்கான கடிதத்தினை, கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன், நேற்று வியாழக்கிழமை ஜவாத்திடம் கொழும்பில் வைத்து வழங்கினார்.

இதன்போது மக்கள் காங்கிரசின் தவிசாளரும் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீரலியும் சமூகமளித்திருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆரம்பகால உறுப்பினரான கல்முனையைச் சேர்ந்த கே.எம். ஜவாத், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் இணைந்து, கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்.

முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர், பிரதிப் பொருளாளர் போன்ற பல பொறுப்புக்களை அந்தக் கட்சியில் இவர் வகித்திருந்தார்.

கல்முனை பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக 1994ஆம் ஆண்டு தெரிவானதன் மூலம், பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்த ஜவாத், கல்முனை மாநகரசபையின் உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

அதன் பின்னர் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகவும், அவர் இரண்டு தடவை பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலப்பகுதியில், பலருக்கு அவர் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்ததோடு, மக்களுக்கான வாழ்வாதார உதவிகளையும் பெருமளவில் வழங்கினார்.

இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய தலைவருடைய சர்வதிகாரப் போக்கு, தன்னிச்சையான செயற்பாடுகள், கட்சியை ஒரு கம்பனி போன்று நடத்தி வரும் விதம் போன்றவற்றில் கடுமையான அதிருப்தியடைந்த ஜவாத், ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரசிலிருந்து விலகி, அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்.

இதனையடுத்தே, மக்கள் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளராகவும், அந்தக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினராகவும் ஜவாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்