மஹிந்த தரப்பில் ஒருவரை பிரமராக்க மைத்திரி உடன்பாடு: அம்பலமானது ரகசிய பேச்சு

🕔 October 3, 2018

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ தரப்பைச் சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்துடன் பிரதமர் ரணிலை பதவி விலக்க ஏற்பாடுகளை செய்யலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆயினும், அடுத்த தேர்தல்களில் தன்னுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மஹிந்த தரப்பு பரிசீலிக்க வேண்டும் எனவும், அதற்கு தயார் என்றால் நாளைக்கே பேசுவோம் எனவும் ஜனாதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து, தற்போது விலகியுள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலரே இந்த தகவலை பரிமாறியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து விரிவான பேச்சுக்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜனாதிபதி மைத்திரி தரப்பின் மேற்படி கோரிக்கையை, மஹிந்த தரப்பு முழுமையாக நம்பவில்லை எனக் தெரியவருகிறது.

இந்த நிலையில்; “மைத்திரி எங்களுடன் பேசிக் கொண்டே, ஐக்கிய தேசியக் கட்சியுடனும் ‘டீல்’ போடுகிறார். இன்னொருபுறம் சஜித் பிரேமதாசா தலைமையில் ஒரு ‘டீமை’ தன்பக்கம் மைத்திரி இழுக்க முயற்சிக்கிறார். எங்களுக்கு எல்லாம் தெரியும். அவரை நம்பி, எமக்கு தற்போதுள்ள மக்கள் பலத்தையும் விட்டு வந்தால், எங்களை நடுத்தெருவில் மைத்திரி நிறுத்திவிடுவார். அன்று ஏமாற்றிய ‘அப்பம்’ தந்திரம் இப்போது சரிவராது” என்று , மைத்திரியின் தூதுவரிடம் மஹிந்த தரப்பின் முக்கிய புள்ளி ஒருவர் கூறியுள்ளார்.

இதன்போது, “நீங்கள் முதலில் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும். அப்போது எல்லாம் சரியாகி விடும்” என்று, மைத்திரியின் தூதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனை மறுத்த மஹிந்த தரப்பு; “இல்லை. தேவையானால் மைத்திரி வந்து எங்களை சந்திக்கட்டும். இல்லாவிட்டால், நாங்கள் ஏதோ தேடி வந்து, அவர் காலில் விழுந்ததாக அவரே கதையை கட்டி விடுவார். இதற்கு மைத்திரி சம்மதித்தால், மஹிந்த, பஸில் ஆகியோருடன் இன்னும் சிலர் சேர்ந்து நாங்கள் வருவோம்” என்று, மைத்திரி தரப்புக்கு அழுத்தமாக கூறியள்ளதாகவும் தெரியவருகிறது.

(செய்தி மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவாராஜா)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்