ஒலுவில் துறைமுகத்துக்கு, மண் அகற்றும் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானம்: அமைச்சர் சமரசிங்க அறிவித்தார்

🕔 October 3, 2018
– அகமட் எஸ். முகைடீன் –

லுவில் துறைமுக நுழைவாயில், மண்ணினால் மூடப்பட்டுள்ளதால் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை மற்றும் குறித்த துறைமுக நிர்மாணிப்பினால் ஒலுவில் மக்கள் எதிர்நோக்கும் இடர்கள் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் அழைப்பையேற்று, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று புதன்கிழமை ஒலுவில் துறைமுகத்துக்கு வருகைதந்து பாதிக்கப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.

இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், நாாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர், எஸ்.எம்.எம். இஸ்மாயில், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். நபீல், துறைமுக அதிகாரசபை தலைவர் பராக்கிரம திசாநாயக்க, தொழில்நுட்ப பணிப்பாளர் சந்திரகாந்தி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஒலுவில் துறைமுக கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஒலுவில் பிரதேச மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர்.

ஒலுவில் துறைமுக நுழைவாயில் காலத்துக்குக் காலம் மண் நிரம்பி படகுப்பாதை மூடப்படுவதனை சீர்செய்வதற்கும், கடலரிப்பினால் அழிந்துபோகும் ஒலுவில் பிரதேசம் நிலங்களை மீட்பதற்கும் ஏதுவாக, ரெஜர் கப்பல் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு இத்துறைமுகத்தில் நிரந்தரமாக தரிக்கச் செய்து பணியாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்வனவு செய்யப்படும் குறித்த கப்பலானது மண்ணை அகழ்ந்து கடற்கரை பிரதேசத்தை மூடுவதற்கு ஏற்புடையதான கப்பலாக அமையவுள்ளது. குறித்த கொள்வனவுக்கான 50 வீத நிதியினை ஒலுவில் துறைமுக நிர்மாணப் பணியினை மேற்கொண்ட நிறுவனம் இலவசமாக வழங்குவதற்கு முன்வந்துள்ளது. மிகுதி 50 வீத நிதியினை அரசாங்கத்திடம் பெற்று 04 மாதங்களுக்குள் மேற்படி ரெஜர் கப்பலை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துறைமுக அதிகாரசபையினால் சுவீகரிக்கப்பட்டுள்ள ஒலுவில் அல் ஜாயிஸா பாடசாலை மைதானத்தை உடனடியாக விடுவிக்குமாறு அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதன்போது உத்தரவிட்டார். அத்துடன் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள அரபா நகர் துறைமுக வீட்டுத்திட்ட காணிகளை ரத்துச்செய்து, அவற்றை பொதுத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இதேவேளை, மீனவர்களின் பிரச்சினைக்கு தற்காலிகத் தீர்வு காணும்வகையில் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஒலுவில் துறைமுக படகுப்பாதையில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்காக தற்போது ஒலுவில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பல் மண்ணை அகற்றும் பணியினை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாளை வியாழக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத்அலி தலைமையில் நடைபெறவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்