பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர்: அமைச்சரவையில் எகிறினார் மைத்திரி

🕔 October 3, 2018

பொலிஸ் மா அதிபர் ஒரு ஜோக்கர் ஆகி விட்டார் எனக் கூறி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோபப்பட்ட சம்பவமொன்று, அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்றதாகத் தெரியவருகிறது.

நேற்று செவ்வாய்கிழமை அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்ற போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார  நேற்றைய அமைச்சரவையில், அமைச்சரவை பத்திரம் ஒன்றினை முன்வைத்திருந்தார். இந்த  நிலையில், அங்குபொலிஸ் திணைக்களம் பற்றிய பேச்சு உருவானபோதே,  மேற்கண்டவாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

“நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்ததாக தெரியவில்லை. நீங்கள்தான் அப்படிக் குறைந்து விட்டதாக ஏதோ சொல்கிறீர்கள். ஆனால் வெளியில் போய் கேட்டுப்பாருங்கள். பொலிஸ் மா அதிபரை பற்றி பேசாதீர்கள். அவர் ஒரு ஜோக்கர் ஆகி விட்டார். அப்படித்தான் அவரை பார்க்கிறார்கள்” என, ஜனாதிபதி இதன்போது பொரிந்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதன்போது, குறுக்கிட்ட அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார; “ ஊடகங்கள்தான் சிறிய விடயங்களை பெரிதாக காட்டுகின்றன. புள்ளிவிபரங்களைப் பார்த்தால் நாட்டில் குற்றச் செயல்கள் குறைந்தே காணப்பகிடுகின்றன” என்று கூற, பிரதமர் ரணிலும் அதனை வழிமொழிவது போல பேச ஆரம்பித்துள்ளார்.

அப்போது சூடான ஜனாதிபதி; “பத்திரிகைகளை நன்றாக பாருங்கள். செய்திகளை கேளுங்கள். தலை ஒரு இடத்திலும் முண்டம் ஒரு இடத்திலும் இருக்குமளவுக்கு சம்பவங்கள் நடக்கின்றன. பொலிஸ் மா அதிபரைப் பற்றி என்னிடம் சொல்ல வேண்டாம். அவர் ஒரு ஜோக்கர் ஆகிவிட்டார். அப்படித்தான் அவரின் செயற்பாடுகள் உள்ளன” என்று  பதிலளித்ததாக தெரியவருகிறது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், பொலிஸ் மா அதிபரை பிரதமர் ரணில் புகழ்ந்து பேசியிருந்ததும், அதே கூட்டத்தில் உரையாற்றிய பொலிஸ் மா அதிபர்; “ நாட்டுக்கு சேவையாற்றிய ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சிதான்” என்று புகழ்ந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

(செய்தி மூலம்: சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்