பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக சந்திப்பிலிருந்து, தர்மேந்திரா வெளியேற்றப்பட்டமைக்கு, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கண்டனம்

🕔 September 25, 2018

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரசின் பிரதித் தலைவரும் பிரதியமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை பிரதியமைச்சர் ஹரீஸ் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தர்மேந்திரா எனும் ஊடவியலாளரே, இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு, ஊடக அமைப்புக்களுக்கு பிரதியமைச்சர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர பேரவையின் செயலாளர், தமது அமைப்பின் அங்கத்தவர்களுக்கு நேற்றைய ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அறிவித்திருந்தார்.

இந்த அறிவித்தலுக்கு இணங்கவே, நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் தர்மேந்திரா கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

மேற்படி ஊடக சந்திப்புக்கு ஊடகவியலாளர் தர்மேந்திரா சென்று சுமார் 30 நிமிடங்களின் பின்னர், பிரதியமைச்சர் ஹரீஸின் ஊடக இணைப்பாளர் எனக் கூறப்படும் நபர், தர்மேந்திராவை தனியாக அழைத்துச் சென்று, அங்கிருந்து வெளியேற்றினார்.

இது தொடர்பாக, ஊடகவியலாளர் தர்மேந்திரா, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் பதிவொன்றினை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர் தர்மேந்திரா இவ்வாறு வெளியேற்றப்பட்டமையை அறிந்து கொண்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர், இது குறித்து தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்