சிறைத் தண்டனைக்குப் பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்க நீதிபதி உத்தரவு

🕔 September 10, 2015

Books - 012
ண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, புத்தகம் வாங்கிப் படிக்கும்படி, ஈரான் நாட்டு நீதிபதியொருவர் தீர்ப்பளித்து வருகிறார்.

ஈரானின் வடகிழக்கு நகரிலுள்ள நீதிபதி குவாசெம் நகிசதெ என்பவர், இத்தகைய வித்தியாசமான தீர்ப்புகளை அளித்து வருகிறார்.

“குற்றவாளிகளை தண்டித்து சிறையில் அடைப்பதன் மூலம் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் ஏற்படும் தீர்க்கமுடியாத உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளைத் தடுப்பதற்காகாகவே”, தான் இத்தகைய தீர்ப்புகளை அளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளதாக, ஈரானிய அரசாங்கத்தின் செய்திச் சேவையான ஐஆர்என்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

தண்டிக்கப்படும் தனி நபர்கள், ஒவ்வொருவரும் ஐந்து புத்தகங்களை வாங்கிப்படிக்கும்படி நீதிபதி உத்தரவிடுவதோடு, அவர்கள் படித்த புத்தகங்களின் சுருக்கத்தை, தனித்தனியாக எழுதி தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

தாம் படித்த புத்தகம் தொடர்பான கருத்துக்களோடு, நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் சொல், செயல் மற்றும் அங்கீகாரங்களின் தொகுப்பான ஹதீஸ்களைப் படித்து, அவற்றிலிருந்து சிலவற்றையும் எழுதி நீதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், அவர்கள் வாங்கிப்படித்த புத்தகங்கள் உள்ளூர் சிறைகளுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இந்த தண்டனை ஆன்மீகரீதியானதும் அறிவுரீதியானதும் என்று கூறப்படுகிறது.

ஈரானில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்கீழ், சில வகையான வழக்குகளில் நீதிபதிகள் விரும்பினால் சிறைத்தண்டனைக்கு மாற்றாக வேறுவகையிலான தண்டனைகளை அளிக்க முடியும்.

அதைப்பயன்படுத்தி, நீதிபதி குவாசெம் நகிசதெ இத்தகைய தண்டனைகளை வழங்கி வருகிறார். சிறிய குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் தனி நபர்கள், பதின்ம வயதினர் மற்றும் முதல் தடவை குற்றம் செய்து தண்டிக்கபடுபவர்களுக்கு இத்தகைய தண்டனையை அவர் வழங்குகிறார்.

இப்படி தண்டிக்கப்படும் குற்றவாளிகள் – நீதிபதியால் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களின் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை மட்டுமே வாங்கிப் படிக்க வேண்டும்.

தான் பரிந்துரைக்கும் புத்தகங்கள் அனைவராலும் படிக்கக் கூடிய புத்தகங்களாக இருக்கும்படி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் நீதிபதி – ஒருவரின் கல்வி அறிவு, இலக்கிய பரிச்சயம் அல்லது வயது எதுவும் தடையில்லாமல், எல்லாதரப்பினராலும் படிக்கக்கூடிய புத்தகங்களை மட்டுமே – தான் பட்டியலிட்டிருப்பதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

இதன் மூலம், இந்த புத்தகங்களை சிறையில் இருக்கும் எல்லா கைதிகளுமே படித்து பயன்பெற முடியும் என்றும், ஐ ஆர் என் ஏ செய்திச் சேவையிடம் அவர் கூறியுள்ளார்.

“மிகவும் எளிமையான நடையில் எழுதப்பட்ட புத்தகங்கள் முதல், மேம்பட்ட அறிவியல் சார்ந்த புத்தகங்கள் வரை, இந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன” என்று அந்த நீதிபதி தெரிவிக்கின்றார்.

இந்த புத்தகங்களால் கூடுதல் பயன் விளைவதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

சிறைக்குள் இருக்கும் கைதிகள் புத்தகங்களைப் படிப்பதால், அவர்களுக்கு இடையில் உருவாகும் சண்டைகள் குறைவதாகவும் அவர் கூறுகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்