சொந்த ஊர் எனும் சொர்க்கம்: தாய் மண்ணுக்கு வெளியில் பிறந்தவரின் கதை

🕔 September 17, 2018

– மப்றூக் –

தாயும் தந்தையும் அகதிகளாக இருந்த போது பிறந்தவர் இஹ்திஸாப். 14 வயதாகும் வரை, தனது சொந்த மண்ணைக் காண்பதற்கான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை. இப்போது, தாய் மண்ணில் வாழும் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இஹ்திஸாபுக்கு 22 வயதாகிறது.

இலங்கையின் வடக்கிலிருந்து 1990ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது, தலைமன்னாரிலிருந்து இஹ்திஸாபின் குடும்பமும் வெளியேறியது. சொந்த மண்ணை இழந்த அவர்கள், புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேசத்தில் வசித்து வந்தார்கள். அந்த வாழ்க்கை 20 வருடங்கள் நீடித்தது.

தனது பெற்றோருடைய அகதி வாழ்க்கையின் ஆறாவது வருடத்தில், 1996ஆம் ஆண்டு இஸ்திஸாப் பிறந்தார். 2010ஆம் ஆண்டுதான் தனது குடும்பத்துடன் இஹ்திஸாப் சொந்த இடத்துக்குத் திரும்பினார். அதுவரையில் தனது தாய் மண்ணை கற்பனையில் மட்டுமே அவர் தரிசித்து வந்தார்.

இப்போது தலை மன்னாரில் இஹ்திஸாப் தனது சொந்த இடத்தில் மகிழ்ச்சியோடு வாழ்கின்றார். அவர் பிறந்த இடத்தைப் பிரிந்து வந்துள்ள  போதிலும், அது குறித்து தனக்கு எதுவித கவலைகளும் இல்லை என்கிறார். சொந்த மண்ணில் வாழ வேண்டும் என்கிற ஏக்கத்தையும், ஆசையினையும் அகதி வாழ்க்கையில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், தனக்குள் அதிகப்படுத்தியதாக இஹ்திஸாப் கூறுகின்றார்.

சொந்த மண்ணுக்குத் திரும்புவதற்கு முன்னரே, இஹ்திஸாபின் தந்தை இறந்து விட்டார். தனது தாய், இரண்டு மூத்த சகோதரர்கள் மற்றும் ஒரு மூத்த சகோதரியுடன் இப்போது தலைமன்னாரில் அவர் வாழ்கின்றார்.

சொந்த இடத்துக்குத் திரும்பிய பிறகு, தனக்கு சிறப்பான கல்வி கிடைத்திருப்பதாக கூறும் இஹ்திஸாப், உயர் கல்வி கற்கும் பொருட்டு திருகோணமலை மாவட்டத்துக்குச் சென்று வருகிறார். தான் பிறந்த ஊரில் தனக்குக் கிடைத்த நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களின் ஊடாக தொடர்பைப் பேணி வருவதாகவும், அவர் கூறுகின்றார்.

சொந்த மண் எனும் உறவு – பிறப்பின் ஊடாக மட்டும் கிடைப்பதல்ல, அது ஆத்தமார்த்தமானது என்பதற்கு இஹ்திஸாபின் கதை நல்லதொரு உதாரணமாகும். தாய் மண்ணில் தான் பிறக்கவில்லை என்பதனால், அந்த மண்ணை, இஹ்திஸாப் அதிகமதிகம் நேசிக்கின்றார்.

(அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் – வட மாகாணத்துக்கு அண்மையில் பயணித்தபோது இஹ்திஸாபுடன் பேசக் கிடைத்தது. அதன்போது கிடைத்த தகவல்களைக் கொண்டு இது – எழுதப்பட்டது)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்