எதிர்க்கட்சி அரசியல் செய்ய தயாராக உள்ளேன்: மு.கா. தலைவர் ஹக்கீம்

🕔 September 17, 2018
திர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தான் தயாராக இருப்பதாக, மு.காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்களை ஆளும் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 18ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்;

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரை இழந்துவிட்டதாக நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தப் பேரியக்கம் மூலம் அவர் எங்களுடன் பெரும் சொத்தாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அஷ்ரஃபின் அரசியல் ஆளுமை என்பது சாமானியமானதல்ல. அவரது காலத்தில் தோல்விகளை கண்டு நாங்கள் துவண்டுபோகவில்லை.

உற்சாகமாக அரசியல் செய்வதாக இருந்தால் எதிர்க்கட்சியில் அமரவேண்டும். இதற்கு தயாராக இருந்தால் நானும் தயார். அமைச்சு பதவிகள் இல்லாவிட்டாலும் வாழும்  என்பதை, முஸ்லிம் காங்கிரஸ் தவிர வேறெந்தக் கட்சியும் நிரூபித்தமை கிடையாது.

ஏனைய கட்சிகள் முடிந்தால் அமைச்சு பதவிகளை துறந்துவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்து பாருங்கள். அந்தக் கட்சி இடம் தெரியாமல் அழிந்துபோய்விடும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க் கட்சியில் இருக்கும்போது வளர்ந்த மாதிரி எப்போதும் வளர்ந்ததில்லை. அதுதான் இந்தக் கட்சி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை.

என்னை காரசாரமாக விமர்சிக்கின்றவர்கள் நேரில் கண்டால், தலைவர் என்று அழைக்கிறார்கள். அதுதான் இந்தக் கட்சியின் தலைமைக்கு இருக்கின்ற அந்தஸ்தாகும். மர்ஹூம் அஷ்ரஃபின் மகுடத்தை சூடிக்கொண்டிருப்பதால் எனக்கு கிடைக்கின்ற மகிமையே தவிர, இது வேறொன்றுமல்ல.

இந்த இயக்கத்திலிருந்து அரசியலை கற்றுக்கொண்டு சில்லறை கட்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்கள் – மறைந்த தலைவர் வளர்த்த கட்சியை எதுவும் செய்துவிட முடியாது. இந்த இயக்கத்தை வாழ வைப்பதற்கு போராளிகளும் இளைஞர்களும் என்றும் தயார்நிலையில் இருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் விருட்சத்தை வளர்ப்பதற்கு பலர் பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பங்களிப்புச் செய்துள்ளனர். எம்.பி.எம். அஸ்ஹர், சிவநாயகம் , சிவகுருநாதன் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் இந்தக் கட்சியை வளர்ப்பதற்கு பெரும் பங்காற்றியிருக்கிறார்கள்.

கட்சி யாருக்கும் கதவுகளை மூடவில்லை. கட்சியின் கதவு விசாலமாக திறந்து கிடக்கிறது. பிரிந்துசென்ற பலர் இன்று கதவுகளை தட்டுகின்றனர். தேர்தல் காலங்களில் சிலர் வெளியேறுவதுண்டு, சென்றவர்களும் திரும்பி வருவதுண்டு. வருகின்றவர்களுக்கு பதவிகளும் தாராளமாக காத்திருக்கின்றன” என்றார்.

இதன்போது மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஞாபகார்த்தமாக துஆ பிரார்த்தனையும், அழகிய தொனியில் அல்குர்ஆன் அரங்கேற்றமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம பிரதம அதிதியாகவும், முன்னாள் வட – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.எல்.எம். ஹனீபா சிறப்பு பேச்சாளாரகவும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்