இஸ்ரேல் குகையில் 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய சாராய ஆலை கண்டுபிடிப்பு

🕔 September 16, 2018

ஸ்ரேலில் ஹைய்ஃபாவுக்கு அருகில் உலகிலேயே மிகவும் பழமையான சாராய ஆலையை கண்டறிந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வரலாற்று காலத்திற்கு முந்தைய குகை ஒன்றில் இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் இது 13 ஆயிரம் வருடங்களுக்கு மந்தையது என நம்பப்படுகிறது.

அவ்வப்போது நாடோடிகளாக வாழ்ந்த வேட்டை ஆடுபவர்கள் இறந்த பின்னர், அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஆய்வு நடத்தி கொண்டிருந்தபோது, இந்த சாராய ஆலை கண்டறியப்பட்டுள்ளது.

பியர் தயாரிப்பு ஐந்தாயிரம் ஆண்டுகள் வரலாறு உடையதாக கருதப்படுகிறது.

ஆனால், தற்போதைய இந்த கண்டுபிடிப்பு பியர் தயாரித்தாக நம்பப்படும் காலம் அதற்கு முன்னதாகவே இருக்கலாம் என உணர்த்துகிறது.

ரொட்டி தயாரிக்கும்போது மீதியான பொருட்களில் பியர் தயாரிக்கப்பட்டது என்று முன்னதாக நம்பப்பட்டதற்கு மாறாகவும் இருக்கலாம் என்பதையும் இந்த கண்டுபிடிப்பு சுட்டுகிறது.

மது மற்றும் ரொட்டி இவற்றில் எது முதலில் வந்தது என்று தங்களால் கூற முடியாது என்று தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியான ‘ஜர்னல் ஒப் ஆர்க்கியோலோஜிகல் சையின்ஸ்’ சஞ்ஜிகையில் வெளியான கட்டுரையில், இறந்தோருக்கு மரியாதை அளிக்கும் வகையிலான சடங்குகளில் பியர் தயாரிக்கப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

“உலகிலேயே மனிதர்கள் தயாரித்த மிக பழமையான சாராயத்தை இந்த கண்டுபிடிப்பு பதிவு செய்துள்ளது” என்று, இந்த ஆய்வுக்குழுவை தலைமை தாங்கி வழிநடத்திய ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக பேராசிரியர் லி லியு, ‘ஸ்டான்ஃபோர்டு’ நியூஸிடம் தெரிவித்தார்.

பழைய கற்காலம் முதல் புதிய கற்காலத்திற்கு இடையில் வாழ்ந்த நாத்தூஃபியன் கால மக்கள் எந்த தாவரங்களின் உணவுகளை உண்டு வந்தார்கள் என்பதற்கான தரவுகளை ஆராய்ந்ததாகவும், கோதுமை மற்றும் பார்லியை கொண்டு தாயரிக்கப்பட்ட சாராயத்தின் சுவடுகளை கண்டறிந்ததாகவும் லியு கூறியுள்ளார்.

குகையின் தரையில் 60 சென்டி மீட்டர் (24 அங்குலம்) ஆழமுடையதாக செய்யப்பட்டிருந்த கல்லால் ஆன கலவைக் குழிகளில் இந்த சுவடுகள் தென்பட்டன. ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் சணல் போன்ற இழை நார்கள் உள்பட பல்வேறு செடி வகைகளை சேமிக்கவும், தூளாக்கவும் இந்த குழிகள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கஞ்சி அல்லது கூழ் போன்று இருக்கும் முற்கால மது, இன்று நாம் அறிந்திருக்கும் பியரில் இருந்து வேறுபட்டதாகும்.

தாங்கள் கண்டறிந்த எச்சத்தோடு ஒப்பிடும் வகையில், முற்கால மது தயாரிக்கும் முறையை உருவாக்கி செய்து காட்டியதில் இந்த ஆய்வுக் குழு வெற்றிபெற்றுள்ளது.

முதலில் தானியத்தை மாவாக்கி, பின்னர் வெந்நீர் மாவு குழைவை ஈஸ்ட் கொண்டு புளிக்க செய்வதன் மூலம் அவர்கள் இதனை செய்துள்ளனர்.

முற்கால சாராயம் புளிக்க வைக்கப்பட்டது. ஆனால், நவீன கால பியரைவிட குறைவான அளவிலேயே புளிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என அறிய முடிகிறது.

Comments