பாக்கிஸ்தான் பல்கலைக்கழகங்களில், இலங்கை மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்குமாறு, அமைச்சர் றிசாட் வேண்டுகோள்

🕔 September 7, 2018

பாகிஸ்தானிய புதிய அரசாங்கத்தின் உருவாக்கத்தில் அந்நாட்டு பல்கலைக்கழக மாணவர்களினதும், இளைஞர்களினதும் பங்களிப்பு காத்திரமானதாக இருந்தது எனவும், பிரதமர் இம்ரான்கானின் அரசாங்கத்தின் புதிய கொள்கைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இவ்விரு சாராரும் உத்வேகம் காட்டுவதாகவும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கலாநிதி ஹசன் சொஹைப் முராத் தெரிவித்தார்.

லாஹூரிலுள்ள முகாமைத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ஐ.எல்.எம் நம்பிக்கை நிதியத்தின் (ILM Trust) தலைவராகவும், ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் இருக்கும் இவர், இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நேற்று வியாழக்கிழமை மாலை அமைச்சில் சந்தித்த இவர், இரு நாடுகளின் கல்வி நிலை தொடர்பிலும், பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில், கைத்தொழில் துறையின் விருத்தி தொடர்பான ஆர்வங் குறித்தும் கலந்துரையாடினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவிக்கையில்; அண்டைநாடான பாகிஸ்தான், இலங்கையுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதுடன், பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை மேலோங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கைக்கு பாகிஸ்தான் பல்வேறு வழிகளில் உதவி வருவதாகவும், இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அழிவுகளின் போது, அந்த நாட்டு அரசாங்கம் கை கொடுத்திருப்பதாகவும், இலங்கை மாணவர்களின் கல்வி விருத்திக்கும், மேம்பாட்டுக்கும் அந்நாட்டு அரசு புலமைப்பரிசில்களையும், இன்னோரன்ன உதவிகளையும் வழங்கி வருவதையும் அமைச்சர் நினைவுபடுத்தினார்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இலங்கை மாணவர்கள், கல்வி கற்பதில் காட்டும் ஆர்வத்தை எடுத்துரைத்த அவர், பாகிஸ்தானின் முகாமைத்துவ மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் கற்பதற்கான வசதிகளைச் செய்துகொடுத்து, புலமைப்பரிசில்களை வழங்குமாறும் வேண்டுகோள்விடுத்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஹசன் முராத்; தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்கலைக்கழகத்துக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தார். இதன்மூலம் பல்கலைக்கழக மாணவர்களிடையே கைத்தொழில் துறையில் ஆர்வம் ஏற்பட இது வழிகோலும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கலாநிதி ஏ.எம். ஜெமீல், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாட், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின்  பிராந்திய முகாமையாளர் ரிஷ்டி செரீப் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்