இன ரீதியான பாடசாலைகளை ஒழித்து விடுவதால், முரண்பாடுகளை இல்லாமல் செய்து விட முடியாது: ஹக்கீம்

🕔 September 5, 2018
ன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு பதியுதீன் மஹ்மூத் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகப்பை, இன்று புதன்கிழமை திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

“இன முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வியாழக்கிழமை தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளார். இன ரீதியான பாடசாலைகளை இல்லாதொழித்தால், இன முரண்பாடுகள் குறையும் என்று பேசப்படுகிறது. ஆனால், இதை ஆராய்ந்துதான் செய்யவேண்டும்.

இன ரீதியான பாடசாலைகளை இல்லாமல் செய்வதன்மூலம், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒழிந்துவிடும் அல்லது இல்லாமல்போய்விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு நேரடி செல்வாக்கு செலுத்தக்கூடிய வேறு காரணங்களும் இருக்கலாம்.

ஒரு பாடசாலைகளுக்கு இனரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அங்கு ஏனைய இன மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம்தான் இனங்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வை வளர்க்கமுடியும்” என்றார்.

பாடசாலை அதிபர் சித்தீக்கா ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அனஸ், மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் ரியாஸ் கபூர், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்