முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை, அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்களுக்கு சிறை

🕔 September 3, 2018

மியான்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமையை ஆவணப்படுத்திய ராய்டர்ஸ் ஊடகவியலாளர்கள் இருவருக்கு ஏழு ஆண்டுகால சிறைத் தண்டனையை அந்த நாட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.

வ லோன் மற்றும் கியாவ் சோ ஓ ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரகசிய ஆவணம் ஒன்றை எடுத்துச் செல்லும் போது கைது செய்யப்பட்டார்கள். ஆனால், அந்த ஆவணத்தை அவர்களிடம் கொடுத்தது காவல்துறை அதிகாரிகள்தான் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

அந்நாட்டு ரகசிய சட்டத்தை மீறியதாக அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது.

அச்சப்படவில்லை

தீர்ப்புக்குப் பின் வ லோன், “நான் இதற்கெல்லாம் அச்சப்படவில்லை” என்று கூறினார்.

மேலும் அவர், “நான் எந்த தவறும் செய்யவில்லை. எனக்கு நீதியின் மீது, ஜனநாயகத்தின் மீது, சுதந்திரத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆசிரியர், “மியான்மருக்கும், அதன் ஊடக சுதந்திரத்திற்கு இன்று ஒரு மோசமான நாள்” என்று கூறியிருந்தார்.

யாங்கூன் நீதிமன்றத்தின் நீதிபதி யீ லின், “தேச நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்தது மற்றும் தேசிய ரகசிய சட்டத்தை மீறியது நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

நியாயமான விசாரணை

முன்னதாக விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடந்தால் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் விடுதலை கிடைக்கும் என்று கூறியிருந்தனர் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள்.

“இங்கு நிலவும் நிலைமையின் அடிப்படையில் நாங்கள் உண்மையை சொல்ல முயன்றோம்” என்று அவர் முன்னதாக கூறி இருந்தார்.

ரோஹிங்ய ஆயுத கும்பலொன்று காவல்துறை நிலைகளின் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, ரக்கைன் மாகாணத்தில் ரோஹிங்ய முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்த நெருக்கடி – பல காலம் அங்கு நீடித்தது.

ரோஹிங்யர்களுக்கு எதிராக ராணுவம் மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ரக்கைன் மாகாணத்திற்கு செல்லும் ஊடகங்களை ராணுவம் கடுமையாக கண்காணிப்பதால் அந்த பகுதியிலிருந்து நம்பகமான செய்திகளை பெறுவது கடினமான காரியமாக இருக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது?

வ லோன் (32 வயது) மற்றும் கியாவ் சோ ஓ (28 வயது) ஆகிய இரண்டு செய்தியாளர்களும், வடக்கு ரக்கைன் பகுதியில் உள்ள இன் தின் கிராமத்தில் பத்து பேர் தூக்கிலடப்பட்டது தொடர்பாக செய்தி சேகரித்து கொண்டிருந்தனர்.

ராய்ட்டர்ஸ் தரும் தகவல்களின்படி, ரோஹிங்ய ஆண்கள் சிலர், கடற்கரையோரம் அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார்கள். அங்கு, அவர்களில் இருவரை பெளத்த கிராம மக்கள் கொன்றிருக்கிறார்கள். பிறர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இவை நடந்தது சென்றாண்டு செப்டம்பர் மாதம்.

இந்த நிலையில் மேற்படி ஊடகவியலாளர்கள் இருவரும் டிசம்பர் மாதம், இரவு விருந்துக்கு இரண்டு போலீஸாருடன் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அங்குதான் இவர்களுக்கு போலீஸார் இந்த படுகொலை குறித்த ஆவணத்தை வழங்கி இருக்கிறார்கள்.

பின் அந்த உணவகத்திலிருந்து புறப்பட்ட உடன் அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ரக்கை மாகாணம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்புடைய முக்கியமான மற்றும் ரகசியமான அரசு ஆவணங்களை வைத்து இருந்தார்கள். இதனை வெளிநாட்டு ஊடகத்திற்கு அளிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அவர்களிடம் இருந்தது என்பதுதான் அவர்கள் மீதான குற்றச்சாட்டு.

ஊடகவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது முழுக்க முழுக்க போலீஸால் ஜோடிக்கப்பட்டது என்கிறார் ஊடகவியலாளர்களின் வழக்கறிஞர். அவர்கள் படுகொலை செய்தியை வெளியே கொண்டுவந்தார்கள். அதற்காக தண்டிக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு இப்படி செய்திருக்கிறார்கள் என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்