அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் வடக்கு பயணம்: முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் தொடர்பில் ஆராய்வு

🕔 September 3, 2018

– அஹமட் –

டக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டு வரும் குடியேற்றப் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பிலும், வனப் பிரதேசங்களை அங்குள்ள முஸ்லிம்கள் அழிப்பதாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் பற்றிய உண்மைத்தன்மையை அறிந்து கொள்ளும் நோக்குடனும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் களப் பயணமொன்றினை மேற்கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்திலுள்ள மூன்று ஊடகவியலாளர் அமைப்புக்களைச் சேர்ந்த 30க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் இந்தக் களப் பயணத்தில் இணைந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் சனிக்கிழமையும் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள், அங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகள், அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்தும் நேரடியாகக் கண்டு தரவுகளைத் திரட்டிக் கொண்டனர்.

ஊடகவியலாளர்களின் இந்தக் களப் பயணத்துக்கு வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீன் ஆதரவு வழங்கியிருந்ததோடு, ஊடகவியலாளர்களின் இந்தப் பயணத்தை சிறப்பாக மேற்கொள்வதற்கான உதவிகளையும் செய்து கொடுத்திருந்தார்.

வடக்கு மாகாணத்திலிருந்து புலிகள் அமைப்பினரால் 01 லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 28 வருடங்கள் – அடுத்த மாதத்துடன் (ஒக்டோபர்) நிறைவடைகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த களப்பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட தகவல்கள் – செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் ‘புதிது’ செய்தித் தளத்திலும் இடம்பெறும் என்பதை வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

ஊடகவியலாளர்களின் இந்தக் களப் பயணத்தின் போது – மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments