பிரபாகரனின் உடலுக்கு கோவணம் அணிவிக்குமாறு சரத் பொன்சேகா உத்தரவிட்டார்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி தகவல்

🕔 August 26, 2018

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இறந்துபோன உடல் கண்டெடுக்கப்பட்ட போது அணிந்திருந்த புலிகள் அமைப்பின் சீருடையைக் களைந்தெடுக்குமாறு, முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா உத்தரவிட்டார் என்று, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சஜி கலகே தெரிவித்துள்ளார்.

கடுமையான துப்பாக்கிச் சூட்டினையடுத்து 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை, நந்திக்கடல்  பகுதியில் பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இறுதி யுத்த காலத்தில் சஜி கலகே – படைப் பிரிவொன்றின் தளபதியாக இருந்ததோடு, புலிகளின் தலைவருடைய உடல் மீட்கப்பட்ட சண்டையிலும் பங்கேற்றிருந்தார்.

சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே, இந்தத் தகவல்களை சஜி கலகே தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் அணிந்திருந்த புலிகளின் சீருடைய அகற்றுமாறு கூறி, சிரேஷ்ட படை அதிகாரிகளை சரத் பொன்சேகா திட்டியதாகவும் – சஜி கலகே தகவல் வெளியிட்டுள்ளார்.

வீடியோ படம் மூலம் பொதுமக்களுக்கு பிரபாகரனின் உடல் காட்டப்பட்டபோது, அவரின் உடலில் புலிகளின் சீருடை காணப்பட்டது.

“பிரபாகரனின் உடலுக்கு கோவணத்தை அணிவிக்குமாறு, சரத் பொன்சேகா எங்களுக்கு கோபத்துடன் உத்தரவிட்டார்” எனவும்  ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சஜி கலகே குறிப்பிட்டுள்ளார்.

“இதன் பின்னர், பிரபாகரனின் உடல் ராணுவ முகாமுக்குக் கொண்டுவரப்பட்டு, அங்கு வைத்து கோவணம் அணிவிக்கப்பட்டது. பின்னர், அந்த உடல் எங்கு கண்டெடுக்கப்பட்டதோ, அங்கு கொண்டு செல்லப்பட்டது” எனவும் தெரிவித்துள்ளார்.

(மொழிபெயர்ப்பு: புதிது செய்தித்தளம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்