மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு: போருக்கு பின்னரான பூஜ்ய யதார்த்தங்கள்

🕔 August 23, 2018

– சுஐப் எம். காசிம் –

க்கள் மத்தியில் நிலைக்கக் கூடிய கொள்கைகளே அரசியல் கட்சிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. போருக்குப்பின்னரான வெறுமைச்சூழலே இப்புதிய கள நிலைமைகளை ஏற்படுத்தியுள்ளன. மூன்று தசாப்தங்களாக நாட்டில் நிலவிய யுத்தத்தில் எந்தச் சமூகங்களும் விமோசனமோ, விடுதலையோ பெற்றதில்லை. பாரிய எதிர்பார்ப்புடனும், பரபரப்புடனும் ஆரம்பிக்கப்பட்ட அஹிம்சை, ஆயுத போராட்டங்களுக்கு ஆரம்பகாலத்தில் மக்களின் அதிக ஆதரவிருந்ததென்பது உண்மையே.

இதற்காக பொருளாதாரம், ஆள்பலம், வெளிநாட்டு உதவிகளையும் சிலர் பெற்றுக்கொடுத்தனர்.  அன்றைய சூழலில் தங்களுக்கு இல்லாத ஏதாவதொன்றை பெற்றுத் தருவார்களென்ற எதிர்பார்ப்பு இம்மக்களிடம் இருந்ததே தவிர, இந்தப் போராட்டத்தால் எது கிடைக்கும் என்பதில் எவருக்கும் தெளிவுகள் இருக்கவில்லை. பின்னர் நிலைமைகள் மாறி போர்க்களம் நீண்டதால் ஏற்பட்ட சலிப்பு, இழப்பு, வெறுப்பு, தோல்வி என்பவையும், ஜனநாயக அரசியல் விலை பேசப்பட்டு சோரம் போனதாலும் இயல்பாகவே உரிமைப் போர் பற்றி மக்கள், சில யதார்த்தங்களை புரியத்தலைப்பட்டனர்.

அழியாத வடுக்கள்

யதார்த்தத்துக்கும் அதிகமாகக் கேட்டுப் போராடப்போய், இருந்ததையும் இழந்ததாகவே தற்போது மக்கள் கருதுகின்றனர். பாடசாலைகளை இடைநடுவில் விட்டு போராட்டத்தில் குதித்ததால் எத்தனையோ இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற முடியாதுள்ளது. வீடுகள் தரைமட்டமாகி குடியிருக்க வீடுகள் இல்லாதுள்ளன. குடியிருந்த காணிகளை மீளப்பெறுவதற்கு வழி இல்லை. பராமரிப்பின்றிக் கிடந்த காணிகளை ராணுவம் ஆக்கிரமித்தமை, காடுகள் மண்டியுள்ள மக்களின் காணிகளை வனஇலாகா பறித்துக்கொண்டமை, புலம்பெயர்ந்தமை, உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை. அகதி வாழ்வு – இந்த அத்தனை அவலங்களும் உரிமை அரசியற் போர் ஏற்படுத்திய அழியாத வடுக்களாகவே மக்களின் மனக்கண்ணாடிகள் முன் தோற்றம் அளிக்கின்றன.

புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் போராளிகள் வாழ்வதற்கான போராட்டத்தையே இன்னும் நடத்தி வருகின்றனர். பாரிய இலட்சியக் கனவோடும், தாயகத் தாகத்தோடும் போராடி வீழ்ந்த மாவீரர்களின் துயிலும் இல்லங்கள் இன்று கவனிப்பாரற்று வெறும் கல்லறைகளாகவே பராமரிக்கப்படுகின்றன. இவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்கள் உரிமைப் போராட்டத்தில் எதை எதிர்பார்க்க முடியும்? கழுத்துகளில் சயனைற் வில்லைகள், வயிறுகளில் வெடி குண்டுகள், கைகளில் கனரக ஆயுதங்கள், தோள்களில் கலிபர்கள் ஏந்திப் போராடிய புலிகளுக்கே ஈழத்தின் ஓரங்குல நிலத்தையேனும் விடுவிக்க முடியவில்லை.

உலகப் போக்கு

இன்றைய உலக அரசியல் போக்கு பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்பன எந்த மூலைகளில் தலையெடுத்தாலும் முளையில் கிள்ளி எறிந்துவிடும். 2001 செப்டம்பர் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட பின்னர், ஏற்பட்டுள்ள புதிய உலக அரசியல் ஒழுங்கு, ஒத்துழைப்புக்கள் இந்நிலைமையை ஏற்படுத்தியுள்ளன.

இந்த யதார்த்தத்தில் ஆடம்பர வாகனங்களிலும், குளிரூட்டப்பட்ட மாளிகைகளிலும் வாழ்ந்து வீரவசனம் பேசும் அரசியல்வாதிகள் எந்த உரிமை, விடுதலைக்காக மக்களை உணர்ச்சியூட்ட முடியும்? சிறுபான்மை தமிழ், முஸ்லிம் தலைமைகள் எத்தனை வருடங்களாக வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் பேச்சுக்களை நடத்தின. எரிக்சொல்ஹெய்ம் இலங்கைக்கு வந்த செலவுகளை கணக்கிட்டால் எத்தனையோ ஏழைகளை வாழவைத்திருக்க முடியும். எண்ணிலடங்காத மாநாடுகள், வெளிநாட்டு பயணங்கள், சந்திப்புக்கள், தாய்லாந்து முதல் டோக்கியோ வரை இழுபட்டுச் சென்ற சமாதானப் பேச்சுக்கள் எவையும், எதையும் உரிமைப் போரில் சாதித்ததில்லையே. நம்பிக்கையில் நாட்கள் நகர்ந்து அழிவுகளையே இம்முயற்சிகள் அதிகரித்தன.

இந்த அனுபவங்கள், படிப்பினைகள் மக்களை தெளிவுபடுத்தியுள்ளன. இதனாலேயே வாழ்வாதார அபிவிருத்தி, நிம்மதியான வாழ்வு, ஐக்கிய உணர்வுகளுக்குள் மக்கள் கட்டுண்டுவிட்டனர். இவையே வேறு அரசியல் சித்தாந்த வேட்கைகளே மக்களுக்கு தேவையாக்கிற்று. அன்றாடம் வயிற்றுப் பசியைப் போக்க அலையும் ஏழைகளுக்கு எதிர்கால ஆட்சி அதிகாரம், தன்னாட்சி, சமஷ்டி பற்றி புரிந்துகொள்வதற்கான மனோநிலை இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. புரியவைத்தாலும் அவற்றை அவர்கள் நம்பப்போவதுமில்லை.

அது மாத்திரமின்றி, டாம்பீக வாழ்க்கையில் திளைத்துள்ள செல்வந்தர்களுக்கும் போராட்டம், விடுதலை எவையும் தேவைப்பட்டதாக தெரியவில்லை. இவ்வாறான நெருக்கடியை ஏற்படுத்தி வியாபாரத்தையும், கொழுத்த லாபத்தையும் பாழ்படுத்த விரும்புவார்களா? கடந்த காலங்களில் கப்பம் கொடுத்தே சில வர்த்தகர்கள் ஓட்டாண்டிகளானதை எவரும் மறந்து விடுவார்களா?

கள நிலைவரம்

இப்பின்புலங்களே அமைச்சர் மனோகணேசனின் கட்சியையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அபிவிருத்தி அரசியலை அடிநாதமாக்கிய புதிய அரசியல் பயணத்துக்கு தள்ளி விட்டுள்ளது.

இன்றைய சூழலில் வடமாகாணத்தை குறிப்பாக, வன்னிப் பிரதேசத்தை எடுத்துக்கொண்டால், அங்குள்ள வைத்தியசாலைகளில் ஒழுங்கான வைத்தியர்கள் இல்லை. வைத்திய வசதிகளும் இல்லை. பூர்வீக மக்களின் காணிகளை வனஇலாகா பறித்துக் கொண்டதால் காணிப்பிரச்சினை மட்டுமின்றி, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றியும் அலைய வேண்டியுள்ளது.

ஒரு நாளைக்கு சுமார் 61 கிலோ புற்கள், ஒரு கால் நடைக்குத் தேவைப்படுகிறது. போருக்கு முன்னர் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி விரவிக்கிடந்த நிலங்கள், இன்று கட்டுப்பாடுகளுக்குள் வந்து தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளன. மாவட்ட அபிவிருத்தி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மக்களின் இந்த அவதிகளை தெளிவாக உணரலாம். ஆனால் இதை இன்னும் உணராது சில கட்சிகள், உரிமைப் போராட்டத்தை மட்டுமே பற்றிப் பேசி காலத்தைக் கடத்துகின்றன.

எது உரிமை? எது விடுதலை? சாதாரண நோய்க்கு வைத்தியம் செய்ய மருந்துகள் இல்லாத உரிமை, வாழ்வதற்கு குடில் இல்லாத உரிமை, பசிக்கு உணவில்லாத உரிமை, பூர்வீகக் காணிகளில் விவசாயம் செய்ய முடியாத உரிமைகளை விடவும் மாகாண சபை உரிமைகள் பெரிதாகிவிட்டதா? தனியலகு பெரிதா?  அல்லது தனி ராஜ்யம் முக்கியமா?

மக்கள் இல்லாத மாளிகையில் மணிமண்டபம் எதற்கு?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்