மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா: சட்டம் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

🕔 August 20, 2018

– வை எல் எஸ் ஹமீட் –

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்ற கருத்து கடந்த இரண்டொரு வாரங்களாக உலா வந்துகொண்டிருக்கின்றது. நேற்று  ஞாயிற்றுக்கிழமை வெளியான சண்டே டைம்ஸ் பத்திரிகயிலும், பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்ததாக சில கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றன.

இவை தொடர்பாக சற்று கண்ணோட்டம் விடுவோம்.

இங்கு வியாக்கியானத்துக்கு உட்படுத்தப்படுகின்ற பிரதான சரத்து 19 வது திருத்தத்தினூடாக மீள அறிமுகப்படுத்தப்பட்ட சரத்து 31(2) ஆகும். இது ஏற்கனவே இருந்தது. 18 வது திருத்தத்தினூடாக நீக்கப்பட்டது. அது மீண்டும் 19 வது திருத்தத்தினூடாக கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

சரத்து என்ன சொல்கிறது?

இந்த சரத்து பின்வருமாறு கூறுகின்றது; “No person who has been twice elected to the office of President by the People, shall be qualified thereafter to be elected to such office by the people”.

அதாவது, “ இரு தடவை மக்களால் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை” என்பதாகும்.

இங்கு பேராசிரியர் பீரிஸ் முன்வைக்கின்ற வாதம் என்னவென்றால்; ‘இந்த சட்டம் ‘prospective’ வே தவிர ‘ retrospective’ அல்ல என்பதாகும்.

இச்சொற்களுக்குரிய நேரடித் தமிழ்ப்பதம் தெரியாது. இவற்றின் பொருள்; ‘prospective’ என்பது ஒரு சட்டம் அமுலுக்கு வந்தபின்னர் நடைபெறுகின்ற விடயங்களுக்கே அச்சட்டம் செல்லுபடியாகும். அதற்குமுன் நடைபெற்ற விடயங்களுக்கல்ல என்பதாகும்.

‘Retrospective’ என்பது சட்டம் பின்னர் இயற்றப்பட்டாலும் அதற்கு முன் நடந்த விடயங்களுக்கும் அது செல்லுபடியாகும் என்பதாகும்.

உதாரணமாக முஸ்லிம்களுக்கு பலதார மணம்புரிதல் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. நாளை ‘ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முஸ்லிம்களுக்கும் செல்லுபடியாகாது’ என்று ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டால் அது prospective என்றால் சட்டம் அமுலுக்கு வரமுன் முடித்த பலதார திருமணங்கள் பாதிக்கப்படாது. புதிதாக முடிக்க முடியாது. ‘retrospective’ என்றால் சட்டம் கொண்டுவரமுன் முடித்த ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களும் செல்லுபடியற்றதாகிவிடும்.

சட்டத்தின் நிலைப்பாடு

பொதுவாக சட்டத்தின் நிலைப்பாடு என்னவென்றால் ‘எந்தவொரு சட்டமும் retrospective effect இருக்கின்றது என்று அதில் வெளிப்படையாக குறிப்பிடப்படாவிட்டால், அது ‘prospective’ யே ஆகும்.

(இதன்பின் இலகு புரிதலுக்காக prospective ஐ முன்னோக்கிய செயற்படுதன்மை என்றும் retrospective ஐ பின்னோக்கிய செயற்படுதன்மை என்றும் குறிப்பிடப்படும்).

அதேநேரம் கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக ஆக்கப்படும் சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வெளிப்படையாகவும் வழங்குவதை அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்திருக்கின்றது.

ஏனைய சட்டங்களைப் பொறுத்தவரை அரசாங்கம் விரும்பினால் பின்னோக்கிய செயற்படுதன்மையை அதற்கு வெளிப்படையாக வழங்கலாம். அவ்வாறு குறிப்பிடாவிட்டால் அதற்கு ‘பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை என்றும் முன்னோக்கிய செயற்படுதன்மை’ மாத்திரமே இருக்கின்றது என்பதும் பொருளாகும்.

மேற்குறித்த அரசியலமைப்பு சரத்தில் பின்னோக்கிய செயற்படுதன்மை தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது மாத்திரமல்ல, வியாயக்கியான விதிகளின்படி சாதாரண சட்டங்களுக்கு பின்னோக்கிய செயற்படுதன்மையை வழங்குவதுபோன்று அரசியலமைப்புச் சட்டத்திற்கு வழங்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் எப்போதும் முன்னோக்கிய செயற்படுதன்மையையே கொண்டிருக்கின்றது என்ற நிலைப்பாடு இருக்கின்றது.

தெளிவு

இந்தப் பின்னணியில்தான் மேற்படி சரத்திற்கு பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை, முன்னோக்கிய செயற்படுதன்மையே இருக்கின்றது. எனவே, மஹிந்த ராஜபக்ஷ இருமுறை ஜனாதிபதியாக இருந்தது 19வது திருத்தம் கொண்டுவரப்பட முன்னராகும். 19 வது திருத்தத்தின் பின் அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படவில்லை. எனவே, அவருக்கு மீண்டும் போட்டியிடத் தடையில்லை. மைத்திரி தொடக்கம் எதிர்காலாத்தில் ஜனாதிபதியாகின்றவர்கள்தான் இருமுறைக்குமேல் தெரிவுசெய்யப்பட முடியாது என்ற வாதத்தை பேராசிரியர் பீரிஸ் முன்வைக்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அவர்கள் மேற்படி வாதத்தை ஏற்றுக்கொண்டவராக, “இரண்டு தடவைக்கு மேல் தெரிவுசெய்யப்பட முடியாது என்ற தடை ஏற்கனவே (1978ம் ஆண்டிலிருந்து) இருந்தாலும் அது 18வது திருத்தத்தின்மூலம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, 19வது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட சரத்து (பழையதாக இருந்தாலும்) புதியதாகவே கருதப்பட வேண்டும். எனவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இச்சட்டம் பொருந்தாது என்ற கருத்தைத் தெரிவித்திருக்கின்றார்.

ஏற்றுடைத் தன்மை

இவர்களின் கருத்தினதும் நிலைப்பாட்டினதும் ஏற்புடைத் தன்மை என்ன என்று பார்ப்போம்.

மேற்குறித்த சரத்திற்கு பின்னோக்கிய செயற்படுதன்மை இல்லை என்ற இருவரது கருத்துக்களும் முழுக்க முழுக்க ஏற்புடையதே. மறுதலிக்க முடியாது. அதேபோன்று, குறித்த சரத்து புதியதே என்ற முன்னாள் பிரதம நீதியரசரின் கருத்திற்கும் மறுப்பேதும் கூறமுடியாது. அதுவும் சரியான கருத்தே.

“எனவே, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் போட்டியிடுவதை இச்சரத்து கட்டுப்படுத்தவில்லை” என்ற அவர்களது நிலைப்பாட்டில்தான் முரண்பாடுள்ளது. அதாவது இச்சரத்திற்குரிய பொருள்கோடலில்தான் முரண்பாடு இருக்கின்றது. அப்பொருள் கோடலுக்கு இப்போது வருவோம்.

பொருள்கோடல்

குறித்த சரத்தை இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம். (two clauses).

“ No person ….. shall be qualified thereafter to be elected to such office by the People “ ( main clause).

அதாவது, “ எவருக்கும் அதன்பின் அப்பதவிக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் தகுதி இல்லை” (பிரதான பகுதி)

“……..who has been twice elected to the office of President by the People…..”. ( subordinate clause)

அதாவது, “……..யார் மக்களால் இருமுறை ஜனாதிபதிப் பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றாரோ அவர்…….”. (அதன் உப பகுதி)

இங்கு கவனிக்க வேண்டியது, ஒரு குறிப்பிட்ட வகையானவர்கள் இச்சரத்து அமுலுக்குவந்த கணத்திலிருந்து மீண்டும் போட்டியிடத் தகுதியற்றவர்களாகின்றனர்.

மையக்கேள்வி

இந்த முழுப்பிரச்சினைக்குமான மையக்கேள்வி, “இந்த குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவராக ஒருவர் இந்த சரத்து அமுலுக்கு வந்தபின் வரவேண்டுமா? அல்லது ஏற்கனவே அந்த வகையில் அடங்குகின்ற ஒருவரை இச்சட்டம் குறிப்பிடுகின்றதா? என்பதாகும்.

இங்கு பாவிக்கப்பட்டிருக்கின்ற உப பகுதி ( subordinate clause) என்ன காலத்தில் பாவிக்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் இங்கு முக்கியமானது. இந்த உப பகுதியின் தொழில் அந்த பிரதான பகுதியில் பாவிக்கப்பட்டிருக்கின்ற ‘ அவர்’ யார் என்பதை விவரிப்பதாகும்.

“………who has been elected twice……”

இங்கு பாருங்கள் ‘present perfect tense ‘ இல் இந்த clause பாவிக்கப்படுகின்றது. இந்தக் காலம் ஒரு சம்பவம் நிகழ்காலத்தில் நடந்து முடிந்திருக்க வேண்டும். அதாவது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

இங்கு நிகழ்காலமென்பது ‘இப்பொழுதான்’ என்பதாகவும் இருக்கலாம். அல்லது முன்பு நடந்து தற்பொழுது என்கின்ற உணர்வை வழங்குவதாக இருக்கலாம். (அதாவது there must be a sense in the present tense, but the action must be complete).

உதாரணமாக ‘I have had my lunch ‘ இது சற்றுமுன்னர் நடந்ததைக் குறிக்கும். நேற்று நடந்ததைக் குறிக்காது.

(மூன்று மாதங்களுக்கு முன் ஒரு கார் வாங்கினோம். இப்பொழுதும் சொல்லலாம் ‘ I have bought a car’ ‘ நான் ஒரு கார் வாங்கியிருக்கின்றேன்’ என்று. (ஆனால் I have bought a car three months ago என்று கூறமுடியாது. இது இலக்கணத்தோடு தொடர்புபட்டது. இங்கு அவசியமில்லை)

இங்கு அவதானத்திற்குரியது, அந்த சம்பவம் நிறைவுபெற்றிருப்பது.

சட்டம் சொல்வது இதுதான்

எனவே, யாருக்கு மீண்டும் தெரிவுசெய்யப்படுவது தடையென்றால் ‘19 வது திருத்தம் அமுலுக்கு வந்ததன்பின் தெரிவுசெய்யப்படுகின்ற சமயத்தில் அவர் ஏற்கனவே இரண்டுமுறை தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.

மாறாக, இவர்கள் கூறுவது போன்று ‘அவர் அவராக வருவதும் 19வது திருத்தம் அமுலுக்கு வந்ததன் பின்புதான் என்றால் ஆகக்குறைந்தது இச்சரத்து யதார்த்தத்தில் அமுலுக்கு வருவதற்கு பத்து வருடங்கள் எடுக்கும். அது நாடாளுமன்றத்தின் எண்ணமாகவும் இருந்திருக்க முடியாது. வியாக்கியான விதிகளையும் கேலிக்கூத்தாக்கும்.

மட்டுமல்ல, கீதா குமாரசிங்கவின் வழக்கில் நீதிமன்றம் எடுத்துக்கொண்ட பிரதான கேள்வி தேர்தல் தினத்தன்று அவர் இரட்டைப் பிரஜாஉரிமை உடையவரா? என்பதே தவிர, அவர் 19ஆவது  திருத்தத்திற்கு முன் இரட்டைப் பிரஜாஉரிமை பெற்றாரா? பின்னர் பெற்றாரா? என்பதல்ல.

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரும்போது ஒருவர் ஏற்கனவே இருமுறை தெரிவுசெய்யப்பட்டிருந்தால் போட்டியிட முடியாது.

இவை இவர்களுக்குத் தெரியாததுமல்ல. இவையெல்லாம் ஒருவகை அரசியல் உத்திகளும் பிரச்சாரமுமாகும்.

இதேபோன்றுதான் பழையமுறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த சட்டத்தில் இடமுண்டு என்றார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்