குடும்ப உறுப்பினர்களைத் தவிர, வேறெவரையும் ஜனாதிபதி வேட்பாளராக, மஹிந்த களமிறக்க மாட்டார்

🕔 August 16, 2018

னது குடும்ப உறுப்பினர்களை தவிர, பொது எதிரணியிலுள்ள வேறெவரையும் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ முன்னிலைப்படுத்த மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுசெயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக  பொது எதிரணியினர் சார்பில் யாரை முன்னிலைப்படுத்துவது என்பது தொடர்பில், அக்கட்சியில் தற்போது கருத்து முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

குடும்ப ஆட்சியை மீண்டும் உருவாக்குவதே மஹிந்தவின் தற்போதைய அரசியல் அபிலாசையாக காணப்படுகின்றது. ஆகவே ஒருபோதும் தன் குடும்ப உறுப்பினர்களை தவிர  எதிரணி  உறுப்பினரை ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த முன்னிலைப்படுத்த மாட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“2020ஆம் ஆண்டு  இடம் பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசாங்க தரப்பில் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை. ஆனால் எதிர்தரப்பிலே இவ்விடயம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. பொது எதிரணியினர் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாக கோட்டாபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை களமிறக்க வேண்டுமென, பொது எதிரணி உறுப்பினர்கள் தமது தனிப்பட்ட கருத்துக்களை   குறிப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் மூவர் மாத்திரமா பொது எதிரணியில் அரசியல் ஞானம் உடையவர்கள்? வேறொருவரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வர தயங்குவது ஏன். 2015ஆம் ஆண்டு குடும்ப ஆட்சியை வீழ்த்தி தேசிய அரசாங்கம் ஜனநாயகத்தை நிலை நாட்டியது.  தற்போது அனைத்து விதமான சுதந்திரமும் மக்களுக்கு பூரணமாக எமது ஆட்சியால் வழங்கப்பட்டுள்ளது. இந் நிலைமை தொடர வேண்டுமாயின் தேசிய அரசாங்கம் தொடர வேண்டும்.

குடும்ப ஆட்சியை  மீண்டும் உருவாக்கும் கனவிலே மஹிந்த ராஜபக்ஷ செயற்படுகின்றார்.  தற்போது ஜனநாயகம் தொடர்பில் மக்கள் மத்தியில் கருத்து வெளியிடுபவர் மஹிந்த ராஜபக்ஷ, தனது குடும்ப உறுப்பினர்களை வேட்பாளராகக்க வேண்டும் எனக் கூறப்படுவதைப் புறம் தள்ளி, தனது கட்சியின் உறுப்பினருக்கு, தான்  ஆதரவு வழங்கி ஜனாதிபதி வேட்பாளராக  களமிறக்குவேன் என்று பகிரங்கமாக தெரிவிப்பாரா?  அவர் இவ்வாறு செய்தால் ஜனநாயகம் மதிக்க்கப்படுவதாக அர்த்தப்படும்.

குறைபாடுகள் எவ்வளவு இருந்தாலும்  அப் பிரச்சினைகளை அரசாங்கம் ஜனநாயக முறையிலே தீர்க்கின்றது. நிதி ஊழல்வாதிகளை  தண்டிக்கவில்லை என்று மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்  நாட்டில்  நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி திருடர்களை நாம் நினைப்பது போல் மிக விரைவாக கைது செய்ய முடியாது

ஆகவே   குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் ஒரு போதும் பின்வாங்காது.  மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வெகு விரைவில் நிறைவேற்றுவோம். அதில் எவ்வித மாற்றங்களும் கிடையாது. காலத்தின் தேவைக்கேட்ப  சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படும்” என்றார்.

Comments