மறைந்தும் மறையாத, மருதூர் அலிக்கான்: ஓர் ஊடகவியலாளனின் இலக்கியப் பதிவுகள்

🕔 August 11, 2018

– ஏ.கே.எம். நியாஸ் –

(அலிக்கானின் ஏழாவது நினைவு தினம் இன்றாகும். ஓர் இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளராகவும் எழுத்துத் துறையில் அலிக்கான் அறியப்பட்டவர். அந்த வகையில், அலிக்கானின் இலக்கியச் செயற்பாடுகளை நினைவுபடுத்தும் வகையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது)

மிழ் கவிதைப் பரப்பில் ஏ.எம். அலிக்கான் நன்கு அறிமுகமானவர். கிழக்கு மாகாணம் சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்தவர். தினகரன் பத்திரிகையில் 01.05.73 இல் எழுதிய கவிதையுடன் இவரின் எழுத்துலகப் பிரவேசம் ஆரம்பமாயிற்று .

எழுபதுகளில் தேசிய பத்திரிகைகளிலும் மல்லிகை, சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளியாகியமையினை அடுத்து, மூத்த இலக்கியவாதிகளால் ஆளுமையுள்ள இளம் படைப்பாளியாக அடையாளம் காணப்பட்டார்.

மரபுக் கவிதைகளை எழுதியதோடு புதுக் கவிதைகளிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். பொதுவுடமைச் சிந்தனைகள் எழுச்சி பெற்ற காலத்தில் தென்கிழக்கை மையமாகக் கொண்டு இடம் பெற்ற பல கவியரங்குகளில் பங்குபற்றினார். கவிஞனாக மட்டுமல்லாமல் சிறுகதை வெளியிலும் தனக் கொரு இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

அக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்றிருந்த சிரித்திரன், மாணிக்கம், மாணவ முரசு ஆகிய சஞ்சிகைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்குபற்றி பரிசு பெற்றார். இலங்கை வானொலியில் (14. 01 .80) ‘இல்லாமிய மண்வாசனைச் சொற்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார்.

தனது எழுத்துக்கள் ஊடாக பிரதேசத்தின் முக்கிய இலக்கியவாதிகளுடன் சுமுகமான உறவுகளைப் பேணி வந்தார். கவிஞர் சண்முகம் சிவலிங்கம் தலைமையிலான கல்முனை எழுத்தாளர் சங்கத்தில் பொதுச் செயலாளராகக் கடமையாற்றியதோடு சாய்ந்தமருது சிற்பிகள் அமைப்பு, கல்முனை கலை இலக்கிய கலாசாரப் பேரவை என்பவற்றிலும் செயலாளராக பணி செய்தார்.

அத்துடன் பொதுநல இயக்கங்கள், பத்திரிகை அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள் போன்றவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்து சமூகம் சார்ந்த பணிகளிலும் ஈடுபட்டார். தினகரன் பத்திரிகையின் கல்முனை மத்திய விசேட நிருபராகக் கடமையாற்றிய காலத்தில் இறுக்கமாகவும் தெளிவாகவும் செய்திகள் எழுதி ஊடகத்துறையிலும் தனது பெயரைப் பதித்தார்.

தேவைக்கேற்ப கட்டுரைகளையும் உருவகக் கதைகளையும் எழுதினார். 12.08.2011 இல் தனது 58வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்த இவர், 35 ஆண்டு கால இலக்கியப் பணியில் பரிசுகளும் பாராட்டுக்களும் பட்டங்களும் பெற்றுக் கொண்டாலும்கூட, அவரது படைப்புகள் எதுவும் நூலுருப் பெறாமை கவலை தரும் செய்தியாகும்.

(அலிக்கானின் மறுமை வாழ்வு சிறக்க, இந்தத் தருணத்தில் அவருக்காக நாமும் பிரார்த்தித்துக் கொள்கிறோம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்