பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுவோம்: ஹக்கீம் சவால்

🕔 August 11, 2018
தேர்தல் முறைகள் தொடர்பாக இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, அதில் வாக்கெடுப்பு மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெற்று, பழைய முறையில் மாகாணசபை தேர்தலை நடாத்திக்காட்டுவோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சவால் விடுத்தார்.

நேற்றிரவு வெள்ளிக்கிழமை இரவு மருதமுனையில் நடைபெற்ற உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவிக்கையில்;

“புதிய முறையில் மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சில கட்சிகளுக்குள் இழுபறி நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு நாங்கள் முடிவுகட்டும் நோக்கில் நாடாளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து, புதிய தேர்தல் முறையில் பிடிவாதமாக இருக்கின்ற கட்சிகளுக்கு எங்களது நிலைப்பாட்டை மிகவும் அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருக்கிறோம்.

ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஜே.வி.பி.யும் புதிய முறையில் தேர்தலை நடத்துவதற்கு பிடிவாதமாக இருக்கின்றன. தேர்தல் முறைகள் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, வாக்கெடுப்பின் மூலம் ஒரு முடிவைக்கண்டு அவசரமாக மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டுமென நாங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம்.

எமது கோரிக்கையை ஏற்றுக்கொள்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லாவிடினும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒரு நிர்ப்பந்ததை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். எல்லாத் தரப்புகளிடமும் பேசிய வகையில், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை எடுத்துக்காட்டுவோம் என்பதை, நான் அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

இந்த மாதத்துக்குள் நாடாளுமன்றத்தில் ஒரு விவாதத்தை நடத்தி, நடைபெறும் வாக்கெடுப்பில் பழைய முறையில் தேர்தல் முறைக்கு ஆதரவாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவோம். அதன்பின் பழைய தேர்தல் முறையில் விரைவாக மாகாணசபை தேர்தலை நடத்துவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எங்களுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளது. வடக்கிலும் கிழக்கிலும் அதிகாரங்களை பங்கிட்டு அவற்றை சிறுபான்மையினர் அனுபவிக்கவேண்டும் என்பதற்காக 13ஆம் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தோமா, அந்த இடங்களில் பேரின ஆளுநர்கள் ஆளுகின்ற நிலைமைதான் இப்போது வரப்போகிறது.

இதில் நாங்கள் இழுபறிபட்டுக் கொண்டிருந்தால் ஆளுநர்களின் கைகளில் ஆட்சியை கொடுத்துவிட்டு நாங்கள் பரிதவிக்கவேண்டிய நிலைமை வந்துவிடும். கிழக்கில் இந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. வடக்கிலும் செப்டம்பர் மாதத்தின் பின்னர் இந்த நிலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். அதற்காக நாங்கள் எடுத்துள்ள முயற்சியில் நிச்சயம் வெற்றி காண்போம்.

அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டின் தீர்மானங்களில் ஒன்றாக புதிய தேர்தல் முறையை பகிஷ்கரிப்பது என்றும், பழைய முறையிலேயே தேர்தலை நடத்தவேண்டும் எனவும் தீர்மானித்திருக்கிறோம்.

சிறுபான்மையினருக்கு பாதகமான புதிய தேர்தல் முறையயை ஒழித்து, பழயை தேர்தல் முறைக்கு மீளத் திரும்புவோம்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்