மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள்: அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் மோசடி

🕔 August 8, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முதலாமிடங்களில் மோசடி இடம்பெற்றுள்ளதோடு, அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலை மாணவர்களுக்கு அதிக முதலாமிடங்கள் முறையற்ற வகையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் என்பவர், இந்த மோசடியை செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேற்படி மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகள், கடந்த ஜுலை மாதம் 22ஆம் திகதி அக்கரைப்பற்று மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றன. இதில், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டாளைச்சேனை, பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப் இதற்குப் பொறுப்பாக இருந்தார்.

இந்த நிலையில், போட்டி நிகழ்வுகளுக்கு நடுவர்களாகக் கலந்து கொண்டவர்களிடம், போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான புள்ளிகளை மட்டும் வழங்குமாறும், போட்டியில் எத்தனையாவது இடத்தை மாணவர்கள் பெற்றுக் கொண்டனர் என்பதைக் குறிப்பிட வேண்டாம் எனவும், உதவிக் கல்விப் பணிப்பாளர் மனாப் அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோர் பற்றிய விபரங்களை, உதவிக் கல்விப் பணிப்பாளர் தனியாகத் தயாரித்து அவற்றினை, பாடசாலைகளுக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

இதேவேளை, வலயக் கல்விப் பணிமனையில் கடமை புரியும் – இஸ்லாம் பாடத்துக்குப் பொறுப்பான ஆசிரிய ஆலோசகரை கூட, மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றோர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில், உதவிக் கல்விப் பணிப்பாளர் இணைத்துக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்படி உதவிக் கல்விப் பணிப்பாளரின் முடிவுகளுக்கிணங்க, நடந்து முடிந்த 72 போட்டிகளில், அக்கரைப்பற்று கோட்டப் பாடசாலைகளுக்கு 52 முதலிடங்களும், அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கு 19 முதலிடங்களும், 21 பாடசாலைகளைக் கொண்ட பொத்துவில் கோட்டத்துக்கு ஒரேயொரு முதலிடமும் வழங்கப்பட்டன.

இந்த விடயத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. மனாப், மோசடி செய்துள்ளார் என்பதை நிரூபிக்கும் வகையில் இன்னுமொரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

அதாவது, பொய்யாகவும் மோசடியாகவும் மேற்படி வெற்றி பெற்றோர் பட்டியலைத் தயாரித்த போது, மீலாதுன் நபி போட்டிகளில் கலந்து கொள்ளாத மாணவியொருவருக்கும், முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள ஒலுவில் ஜாயிஸா பாடசாலை மாணவியொருவருக்கே, இவ்வாறு முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆயினும், தான் அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாத நிலையில், தனக்கு இவ்வாறு முதலிடம் வழங்கப்பட்டமை குறித்து, உரிய மாணவி எழுத்து மூலம் உறுதிப்படுத்திய கடிதமொன்றினைப் பெற்ற நிலையிலேயே, இந்தச் செய்தி எழுதப்படுகிறது.

வெற்றி பெற்றோர் பட்டியலை பொய்யாகத் தயாரிக்கும் அவசரத்தில், போட்டியில் கலந்து கொள்ளாத மாணவிக்கு இவ்வாறு முதலாமிடம் வழங்கப்பட்டமை பின்னர் தெரிய வந்தது.

குறித்த மாணவி, மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு விண்ணப்பித்திருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அவர் கலந்து கொள்ளவில்லை.

அக்கரைப்பற்று ‘வாதத்தினை’ முன்னிறுத்தி, அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இவ்வாறு பல்வேறு மோசடிகளும், பக்கச்சார்பான செயற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக, ஏனைய பிரதேச பாடசாலை அதிபர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையிலேயே, மீலாதுன் நபி போட்டி நிகழ்ச்சிகளில் இடம்பெற்ற மோசடிகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.

இந்த மோசடி பற்றிய தகவல்கள், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி. நிஸாமின் கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இதுபோன்ற இன்னும் பல மோசடியான சம்பவங்களும் பக்கச்சார்பான செயற்பாடுகளும் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு அறியக் கிடத்துள்ளது.

அவை குறித்த செய்திகளும், விரைவில் வெளிவரும்.

Comments