சுஐப் எம். காசிம்: வடக்கு முஸ்லிம்களின் வலியை, வரலாற்றில் பதிந்த ஊடகவியலாளன்

🕔 July 31, 2018

– றிசாத் ஏ காதர் –
லக்கியமும், எழுத்தும் அனுபவத்தின் ஊடாகவே வரவேண்டும் என்கிறார் எழத்தாளர் முருகையன். இந்த கருத்திலிருந்தே இக்கட்டுரை கட்டியெழுப்பப்படுகின்றது.

அந்த வகையில், அனுபவப்புலன்களின் வெளிப்பாடாக உள்ளது ‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்’ என்கிற நூல்.

‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும் தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய புத்தக அறிமுக விழா, கடந்தவாரம் அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று நகரில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.

விடுதலைப் புலிகளினால் வடபுல மக்கள் இரவோடு இரவாக வெறுங்கையுடன் வெளியேற்றப்பட்ட அனுபவங்களை சுமந்தவர்களில் ஒருவனாக தானும் இருந்தமையினை, புத்தக ஆசிரியர் மிகச்சிறப்பாக வெளிக்கொணர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சாதாரணமாக ஒரு மனிதன் அனுபவிக்கும் துன்பங்களுக்கும், ஒருவர் – தான் வாழ்ந்த பூமியை விட்டு விரட்டப்படும் வலிகளுக்குமுள்ள அனுபவங்கள் வித்தியாசமானவை.

அந்த வகையில், இரண்டாவது அனுபவத்தினை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் ஒரு ஆவணமாக சுஐப் எம் காசிம் தந்திருக்கிறார். இது ஓர் வரலாற்றுச் சாட்சியாகவும் உள்ளது.

1990களில் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் வரலாறு பற்றி இன்றுள்ள இளையவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறான ஒரு நிகழ்வு சிலவேளை வரலாறுகளிலிருந்து தூரமாக்கப்படலாம். அதனை இச்சமூகத்துக்கு சேர்க்கும் பணியினையே சுஐப் செய்திருக்கிறார்.

மேற்குறித்த புத்தக வெளியீடு இப்பிராந்தியத்தில் ஒரு அதிர்வலையினை ஏற்படுத்தியிருக்கின்றது. சாதாரணமாக புத்தக வெளியீடுகள் என்றால் அங்கு குறிப்பிட்ட, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு தொகையினரே கலந்துகொள்வர். ஆனால், சுஐப் எம் காசிமின் புத்தக அறிமுக விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதிலும் அநேகமான ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், நிறுவனத் தலைவர்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டமையினை காணக்கிடைத்தது.

சுஐப் எம் காசிம் ஊடகவியலாளர் என்கிற அடிப்படையில்,அவரின் சகபாடிகளான ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டமை ஒருபுறமிருக்க, புத்திஜீவிகள், கல்விமான்கள், நிறுவனத் தலைவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டமைக்கு ஓர் காரணமிருக்கிறது. முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அவலங்களை நம்மவர் ஒருவர் ஆவணப்படுத்தியுள்ளமையினை தட்டிக்கொடுக்கும் வகையிலேயே மேற்சொன்னவர்கள் வருகை தந்திருந்தமையினை நோக்க முடிகிறது.

அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தமட்டில் மாற்றுக்கருத்துக்களைக் கொண்ட பல ஊடக அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன. இவை தங்களது கருத்துக்கள், கொள்கை கோட்பாடுகளுக்கு முக்கியத்துவமளித்து செயலாற்றுகின்ற போதிலும், சுஐப் எம் காசிமுடைய புத்தக அறிமுக விழாவில் ஒருமித்து கலந்து கொண்டமையினை அவதானிக்கின்ற போது, இந்த சமூகத்துக்கான பணிகளில் ஒருமித்து செயற்படுவதற்கு ஊடகவியலாளர்களாகிய எங்களுக்கு எதுவும் தடையல்ல என்கிற சமிக்ஞை வெளிக்காட்டப்பட்டது.

அந்த வகையில், அரசியல்வாதிகள் தொடக்கம், ஊடகவியலாளர்கள் வரை, அனைவரையும் ஒற்றுமைப்படுத்தும் திறமையும் சுஐப் எம் காசிமிடம் அமையப்பெற்றிருந்தமையினையும் அந்த விழாவில் காணக்கிடைத்தது.

இன்னுமொரு உதாரணத்தினையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகவிருக்கும். அக்கரைப்பற்று பிரதேசம் தேசிய காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவுள்ளது. இங்குள்ள இரு உள்ளுராட்சி சபைகளையும் ஆட்சி புரிகின்ற கட்சியாக தேசிய காங்கிரஸ் கட்சி உள்ளது. அவ்வாறான ஒரு சூழலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீனுடைய ஊடக இணைப்பாளராகக் கடமையாற்றும் சுஐப் எம் காசிம் எழுதிய புத்தக அறிமுக விழாவில், அப்பிரதேசத்திலிருந்து பலர் கலந்துகொண்டதுடன், தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையினை ஆற்றியமை பெருத்த வரவேற்பை ஏற்படுத்தியிருந்தது.

கிழக்கு மாகாணத்திலும் விடுதலைப் புலிகள் நடத்திய கொடூரங்கள், கொலைகள் ஏராளமாகும். அவ்வாறு துன்பங்களை அனுபவித்த மக்கள் வாழ்கின்ற பூமியொன்றில் வடக்கு மக்களின் துயரங்களை வெளிக்கொணரும் புத்தகமொன்றினை அறிமுகப்படுத்தியமை இங்குள்ள சமூக ஆர்வாலர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கான ஒரு முன்மாதிரியாகவும், எடுத்துக்காட்டாகவுமே பார்க்கவேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளை அனுபவித்த பிரதேசங்களில் அக்கரைப்பற்று மிக முக்கியமானது. புலிகளின் வன்முறைகளால் உயிர்களை, சொத்துக்களை இழந்தது மாத்திரமன்றி இன்னும் முஸ்லிம்கள் தங்கள் வயல் நிலங்களை மீட்கமுடியாமல் தவிக்கின்ற சந்தர்ப்பத்தில் அச்சமூகத்தின் பிறிதொரு பகுதியில் வசித்த மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை மிகத் துல்லியமாகவும், தைரியமாகவும் தனக்கே உரித்தான மொழிநடையில் சுஐப் எம் காசிம் ஆவணப்படுத்தியிருக்கின்றார்.

கடந்த ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு இனவாத செயற்பாடுகளினால் துன்பம் விளைவிக்கப்பட்டது. அதனால், நல்லாட்சி எனும் அரசாங்கத்தைக் கொண்டுவந்து சிறுபான்மை மக்களின் துயரங்கள் துடைக்கப்படும் என்கிற நம்பிக்கை வழங்கப்பட்டது. இந்த  நிலையில், நல்லாட்சியிலாவது சிறுபான்மை மக்களுக்கு விடிவு கிடைக்குமா? என, பெருத்த ஏக்கத்தோடு சுஐப் வைத்திருக்கும் கேள்விகள், அவருக்குள்ள சமூகப் பற்றினை தெளிவாக எடுத்தியம்பியிருக்கின்றது.

அந்த நிகழ்வில், நூலின் அறிமுக உரையினை மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜௌபர்கான் ஆற்றியிருந்தார். அவரின் உரை இந்த சமூகத்துக்கு பல செய்தியினை சொல்லியிருந்தது.

ஊடகவியலாளர்கள் ஆற்றவேண்டிய பணிகளில் மிக முக்கியமானது, தான் சார்ந்த சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சமூகமயப்படுத்துவதேயாகும். அதனையே இன்று தமிழ் தரப்பு செய்துவருகின்றது. ஆனால் முஸ்லிம் சமூகத்தை பொறுத்தமட்டில் பெருத்த இடைவெளியிருப்பதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கான பணியையே – ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் தொடங்கி வைத்திருக்கின்றார் என்று, ஜௌபர்கான் கூறியிருந்தார்.

அவருடைய உரையில்; ‘அரசியல் ரீதியாக முஸ்லிம்கள் முரண்பட்டுக்கொள்கின்றனர். இச்சமூகத்துக்கு ஓர் ஊடகம் தேவை என்று பேசிக்கொள்கின்றோம். சமூகத்துக்கு ஏற்பட்ட அழிவுகளை சொல்லுகின்ற ஊடகவியலாளர்களை உருவாக்குகின்றோமா” என்ற கேள்வியினையும் ஜௌபர்கான் முன்வைத்தார்.

“விடுதலைப்புலிகள்தான் காத்தான்குடி, ஏறாவூர், சதாம் ஹூசைன் கிராமம், அழிஞ்சிப்பொத்தானை மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களை படுகொலை செய்தனர் என்கிற செய்தியை தைரியமாக சொல்லுவதுக்குரிய ஊடகவியலாளர்கள் அரிதாகவே காணப்படுகின்றர். ஊடகவியலாளர்கள் அறிக்கை சமர்ப்பிப்பவர்களாக இருந்துவிடக்கூடாது” எனவும் ஜௌபர்கான் கருத்துரைத்தார்.

‘வடபுல மக்களின் மீள்குடியேற்றத்திலுள்ள சவால்கள்’ நூல் அறிமுக நிகழ்வில், நூல் விமர்சன உரையினை ஜெஸ்மி எம் மூஸா வழங்கியிருந்தார். முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் எல்லா விடயங்களிலும் பேச்சுக்கள் நிறையவே இருக்கின்றன. அவை பல தசாப்தங்களை தாண்டியிருக்கின்றது. அவற்றுக்கு நீண்ட நெடிய வரலாறுகள் உண்டு. ஆனால் அவை ஆவணமாக்கப்படவில்லை.

வரலாற்று ரீதியான ஆவணப்படுத்தல்கள் மிகக் குறைந்த ஒரு சமூகமாகவே முஸ்லிம் சமூகம் காணப்படுகின்றது. ஏதாவது ஊரின் வரலாறு, குடியினுடைய வரலாறு அல்லது முஸ்லிம்கள் வந்த வாலாறு என எழுதத் தொடங்கினாலும், அவை வரலாற்றை எழுதியவர்களை பிரகடனம் செய்கின்ற பதிவாக வருகிறதே அன்றி, முஸ்லிம்களின் இருப்பையும், முஸ்லிம்கள் உண்மையாக வந்த வரலாற்றுத் தடத்தையும் எடுத்துச் சொல்கின்ற ஆய்வுகளாக அல்லது தரவுகளாக இல்லை என்று ஜெஸ்மி தனது ஆதங்கத்தினை வெளிக்காட்டியிருந்தார்.

அந்த தொடரிலிருந்து சற்று விலகியே ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ என்கிற நூலை தரிசிக்கவேண்டியிருப்பதாக அவர் குறிப்பிடுவதுடன், வில்பத்து காட்டுக்குள் புகுந்து முஸ்லிம்கள் அறபுக் கொலனியை உருவாக்கி விட்டார்கள் என்று, பொதுபலசேனா கூக்குரலிட்டுக்கொண்டிருக்க, மறுபுறம் றிசாட் பதியுத்தீன் வடபுலத்தில் இருக்கின்ற வில்பத்துவை வைத்துக்கொண்டு தன்னுடைய அரசியலைச் செய்கின்றார் என்கிற விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்க, இந்த நிலையில் அவரோடு இணைந்து அவர் பிறந்த அந்த மண்ணிலேயிருந்து வெளியேற்றப்பட்ட சுஐப் எம் காசிம் இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றார் என்பது முக்கியமானதாகும்.

நூலின் விமர்சன உரையில் ஆய்வாளரும், விமர்சகருமான ஜெஸ்மி எம் மூஸா தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த நூல் அன்று பிரபல்யமாக வெளியீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் கால சூழலில் எழுந்த சில விடயங்களால் அவை தவிர்க்கப்பட்டது. இப்போது நூல் அறிமுக விழா நடத்தும் இடம் மிக முக்கியமான ஒரு பிரதேசம். விடுதலைப் புலிகளினால் முக்கியமானவர்களை இழந்த மண்ணில் இருந்து சுஐப் எம் காசிமின் புத்தகம் வெளிவருவது காலத்தின் பதிவாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

அனுபவக் கரைசலின் ஊடாக வருகின்ற இலக்கியங்கள் எப்போதும் ஆத்மார்த்த ரீதியாகவும், வரலாற்றினுடைய பதிவு செய்யப்பட்டிருக்கின்ற முக்கியமான எழுத்துக்களாகவும் வரும் என்பதும்தான் முருகையனுடைய கருத்து. இதற்கு வெளியே இருந்து வடபுலத்தை பற்றி பேசுவதை விட, அந்த இடத்திலேயிருந்து விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்ட சுஐப் எம் காசிம் இந்த நூலை வெளியிட்டிருப்பது, அவர் பெற்றுக்கொண்ட அனுபவத்தின் கரைசல்களை சாறாகப் பிழிந்திருக்கின்றது.

வடபுல மக்கள் வெளியேற்றப்பட்ட தருணத்திலிருந்து அம்மக்களுக்கு நிறைய உதவி, ஒத்தாசைகளை வழங்கியதில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் கட்சியின் மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் மற்றும் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் நூர்தீன் மசூர் ஆகியோர் மறக்கமுடியாதவர்கள் என்பதுடன், வாழ்விடம் வழங்கி ஒத்துழைப்புச் செய்த புத்தளம், குருநாகல் மற்றும் அநுராதபுர மாவட்ட மக்கள் மிக்க நன்றிக்குரியவர்கள் என்பதனையும் சுஐப் எம் காசிம் தனது எழுத்தினூடாக நன்றியுணர்வோடு குறிப்பிட்டிருக்கின்றார்.

மேலும் பிற்பட்ட காலங்களில் உதவி நல்கிய, மீள் குடியேற்றத்துக்கு பங்காற்றிய கட்சித் தலைவர்கள், அரசியலவாதிகள் என பலரையும் சுஐப் ஞாபகித்திருப்பது வடபுலமக்களின் நன்றியுணர்வை வெளிக்காட்டுவதாக உள்ளது.

வடபுல முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இருபத்தி நான்கு வருடங்கள் கடந்துசெல்கின்றபோதிலும், இன்னும் முழுமையாக தங்களது நிலங்களை ஆளமுடியாத அவலங்கள் எண்ணிலடங்காதவை.

முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் காலத்துக்கு காலம் பல்வேறு அரசியற் தலைமைகள் தலைதூக்கிய போதிலும், தான் சார்ந்த மக்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் தீர்வினைப்பெற்றுக்கொடுக்க ஒவ்வொருவரும் எடுத்த முயற்சிகள் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் வெளியேற்றப்பட்ட மக்களுள் ஒருவராக இருந்து துன்பங்களை அனுபவித்து – இன்று அமைச்சராகவிருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சித் தலைவர் றிசாட் பதியுத்தீன், பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தனித்து நின்று போராடுவதாக சுஐப் எம் காசிம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அதற்காக பல்வேறு வழக்குகளை அமைச்சர் றிசாட் பதியுத்தீன் சந்தித்துள்ளதனையும் அரசியல் அரங்கில் காணக்கிடைக்கின்றது.

‘வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்’ என்று தலைப்பிட்டிப்பதனால் அந்த வட்டத்துக்குள் நின்று மட்டும் வாசிப்பதற்கான புத்தகமாக இது இல்லை. வடபுல முஸ்லிம்களின் பூர்வீக வரலாற்றில் தொடங்கி அங்குள்ள மக்கள் அனுபவித்த துன்பங்கள், விடுதலைப் புலிகளின் அதிரடி அறிவித்தல் மற்றும் வடக்கு முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் மற்றும் வடபுல மக்களை அரசியல் முன்னெடுப்புகளால் ஏமாற்றிய பிரபா – ஹக்கீம் ஒப்பந்தம் என, பல தலைப்புகளில் இந்த நூலை ஒழுங்கு படுத்தியிருப்பது இன்னும் பல வழிகளில் இப்புத்தகத்துக்கு உரம் சேர்த்திருக்கின்றது.

இந்தப்பிராந்தியத்தில் இப்படியான ஒரு புத்தகத்தின் அறிமுக விழாவினை நடத்தி, இங்குள்ள சமூக உணர்வாளர்களுள் தேங்கிக் கிடந்த உணர்வை சுஐப் எம் காசிம் ஊடாக மெல்லத் தட்டியெழுப்பிருக்கின்றார் மு.காங்கிரசின் அக்கரைப்பற்று பிரதேச முன்னாள் அமைப்பாளரும், அக்ககரைப்பற்று மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தற்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்பாட்டாளருமான அஷ்ஷேஹ் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி.

இவ்வாறான சமூகப்பணிகள் புத்தெழுச்சி பெறுதல் வேண்டும். அப்போதுதான் நமது வரலாறுகள் ஆவணமாக்கப்பட்டு, அவை – நமது இருப்புக்கு உரம் சேர்ப்பவையாக அமையும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்