தடைகளைத் தாண்டி, மன்னார் நகரத்தை நவீன மயப்படுத்தி வருகிறோம்: அமைச்சர் றிசாட்

🕔 July 30, 2018

“மன்னார் நகரத்தை அழகுபடுத்தி நவீன மயமாக்கும் எமது முயற்சிகளில் பல்வேறு தடைகளும், சவால்களும் இருந்தபோதும் அதனையும் தாண்டி, அந்த நகரத்தை நவீன மயப்படுத்துவதற்கான அடிக்கல்லை அண்மையில் நாட்டியிருக்கிறோம். விரைவில் இந்தப் பணிகளை பூரணப்படுத்தி மக்களுக்கு கையளிக்கவுள்ளோம்” என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொவித்தார்.

மன்னார் அல் – அஸ்ஹர் பாடசாலையில் அதிபர் மாஹிர் தலைமையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வுகளின் பின்னரான கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

புதிய ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வகுப்பறையை திறந்து வைத்தல், புதிய கேட்போர் கூடத்துக்கான அடிக்கல் நாட்டல், மற்றும் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்;

“யுத்த முடிவின் பின்னர் வன்னி மாவட்டத்தில் நாங்கள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அந்தவகையில் மன்னார் நகரத்தை அழகுபடுத்த நாம் முயற்சிகள் முன்னெடுத்த போதும், உள்ளுர் நிர்வாகம் அதற்கு இடையூறாக இருந்தது.

சுமார் ஏழு, எட்டு வருடங்களாக இந்த இழுபறி தொடர்ந்த போதும்,  வரவு – செலவு திட்டத்தில் மன்னார், நகர நிர்மான வேலைகளுக்கென எமது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியுடனும் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியின் உதவியுடனும் நிர்மானப்பணிகளை மேற்கொள்வதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம்.

அண்மையில் அமைச்சர்களான சம்பிக்க மற்றும் நிதியமைச்சர் ஆகியோரை அழைத்து வந்தே இந்த அடிக்கல்லை நாட்டிவைத்தோம், அதுமட்டுன்றி, மன்னார் நகரத்தை சார்ந்த பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த காலங்களில்  மன்னார் உப்புக்குளம், பனங்கட்டிக்கொட்டு, எழில் நகர் போன்றவை  மழைக் காலத்தில் வெள்ளத்துள் அமிழ்ந்து இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டதை அறிவீர்கள். ஐரோப்பிய யூனியனின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பிரதேசத்தில் வடிகான்கள் அமைக்கப்பட்டு, வெள்ள அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் மேற்கொண்ட முயற்சியை நீங்கள் அறிவீர்கள்.

பாடசாலை என்பது வெறுமனே புத்தக கல்வியை வழங்கும் நிறுவனமாக மாத்திரம் இருக்கக்கூடாது. மாணவர்களின் புறக்கீர்த்தி செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் ஒரு இடமாகவும் அது இருக்கவேண்டும். அந்தவகையில் மாணவர்களின் ஆற்றல்களையும், திறமைகளையும் இனங்கண்டு அவர்களை முன்நிலைக்கு கொண்டு வருவதற்கு ஆசிரியர்களின் பங்களிப்பு முக்கியமானது. அதுமாத்திரமன்றி, இந்த விடயங்கள் சரிவர நிகழ்வதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

மாணவர்கள் தத்தமது மாவட்டங்களில் சாதனை படைத்தால் போதுமென்ற மனோபாவத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மாற்றியமைத்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதயிலும் மிளிர்வதற்கு அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதே சிறப்பானது. பிள்ளைகளின் வளர்ப்பிலே பெற்றோர்களின் பங்களிப்பு முக்கியமானது” என்றார்.

இந்த நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான ரிப்கான் பதியுதீன், பிரதேச சபை தவிசாளர்களான முஜாஹிர், சுபியான், முன்னாள் அதிபர் ஹிதாயதுல்லா, மன்னார் பிரதேசசபை உறுப்பினரான நகுசின், உவைஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Comments