மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொறுப்பிலிருந்து, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு விலகி விட முடியாது

🕔 July 28, 2018

ட்சிக் காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு என்றும். அப்பொறுப்பிலிருந்து அந்த ஆணைக் குழு விலகிவிட முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார்.

மேலும் “ மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நவவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் – வடக்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளின் பதவிக்காலமும் விரைவில் நிறைவடையவுள்ளது. எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்வது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்;

“ஜனநாயகம் பற்றி பேசிக்கொண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் இல்லாது செய்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் நீண்ட காலம் இழுத்தடிப்புச் செய்தது. அத்தேர்தலை நடத்தச் செய்வதற்கு பெரும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

அதனைப்போல்,  பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலையும் நடத்தாது தற்போது அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்து வருகிறது. தேர்தலை நடத்த வேண்டும் என்கின்ற  எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. தேர்தல் நடைபெற்றால் தமது தோல்வி வெளிப்பட்டு விடும் என்பது அரசாங்க தரப்புக்கு நன்கு தெரியும். அதனாலேயே ஒவ்வொரு காரணங்களை குறிப்பிட்டு தேர்தலை பிற்போட்டு வருகிறது.

எனினும் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடு உள்ளது. நாடாளுமன்றில் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டு அது அமுலுக்கு வரவில்லையெனின், நடைமுறையிலுள்ள சட்டம் அமுலாகும். எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்