இலங்கையில் தங்க ஆபரண, இரத்தினக்கல் கேந்திர நிலையத்தை நிர்மாணிக்கப் போவதாக சீன நிறுவனம் அறிவிப்பு

🕔 July 26, 2018

வீன தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் கேந்திர நிலையமொன்றை இலங்கையில் அமைப்பதற்கு சீனாவின் பிரமாண்டமான தங்க சுரங்க நிறுவனமான சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் முன்வந்துள்ளதுடன், சீனாவின் பட்டுப் பாதைத் திட்டத்தை  விரிவுபடுத்த இது பெரிதும் உதவுமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஷங்காய் தங்க பறிமாற்ற நிறுவனத்துக்கு பக்க பலமாக நின்று, உலகியேயே பௌதீக ரீதியான பிரமாண்டமான தங்கப் பரிமாற்ற நிலையமாக ஷங்காய் நிறுவனத்தை மாற்றியுள்ள இந்த நிறுவனத்தின்  தலைவரான சூ யூச்சின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை செவ்வாய்கிழமை சந்தித்த போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், இதன் மூலம் இலங்கையில் தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக்கல் பங்குச் சந்தையின் பெறுமானம் மேலும் அதிகரிக்குமெனவும் கூறினார். அத்துடன் சீன உல்லாசப் பயணிகளுக்கு இந்த நிர்மாண முயற்சி பெரிதும் பயனளிக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது சீனாவின் சன் மெங்சியோ நகரின் உதவி மேயர் சன் ஜிவி உட்பட சீனாவின் முன்னணி வர்த்தகர்களும் பங்கேற்றிருந்தனர். இலங்கையைச் சேர்ந்த  இரத்தினக்கல் மாளிகையின் பணிப்பாளர் எம்.என்.எம். றம்சீனும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தார்.

சீனாவின் அதிகூடிய சனத்தொகையைக் கொண்ட அதாவது 100 மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமான கெனன் மாநிலத்தை தளமாகக்கொண்டியங்கி வருகின்ற,  அரசாங்கத்துக்குச் சொந்தமான சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டமையை அமைச்சர் றிஷாட் பாராட்டினார்.

ஹெனன் மாநிலத்துக்கு அருகிலுள்ள சண்டோங் மாநிலத்திலேயே கடந்த வருடம் மார்ச் மாதம் சீனாவின் பிரமாண்டமான தங்கச் சுரங்க இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டது.

சீனாவின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண விற்பனைக்கான இலங்கை விநியோகஸ்தரான பாச்சா ஜெம்ஸ் உடன், கடந்த பல வருடங்களாக வியாபாரத்தில் பங்காளராக நாம் இருக்கின்றோம். குறித்த திட்டத்தில் இலங்கை அரசாங்கம், பாச்சா இரத்தினக்கல் ஆபரண நிறுவனம் மற்றும்  சேன் மெங்சியோ ஜிங்கு குறூப் நிறுவனம் ஆகிய மூன்றும் பங்காளராகின்றன. இத்திட்டத்தின் முதலாவது கட்டத்துக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் முதலீடு செய்கின்றோம்” என்றும் நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் பல மாடிகளைக் கொண்ட கட்டிடமொன்று நவீன அம்சங்களுடன் நிர்மாணிக்கப்படும். அந்த கட்டிடத்தொகுதியில் தங்க ஆபரணம் மற்றும் இரத்தினக் கல் விற்பனை நிலையங்கள், இலங்கையில் உள்ள வங்கிகளின் கிளைகள், வெளிநாட்டு பணப்பரிமாற்ற நிலையங்கள்,, சீன உணவுச்சாலைகள் உட்பட பல நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன” எனவும் அந்த நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் றிஷாட் பதியுதீன் கருத்து தெரிவித்த போது; “இலங்கையில் குறித்த நிறுவனமானது இவ்வாறானதொரு பாரிய முயற்சியை மேற்கொண்டிருப்பது வரவேற்கத் தக்கது. இந்த நிறுவனத்தின் பிரவேசமானது இலங்கையின் தங்க ஆபரணம் மற்றும் நகைத்துறையில் உயர்வான போட்டித் தன்மையை ஏற்படுத்தும்” என்றதோடு, பாச்சா ஜெம் நிறுவனத்தின் வியாபார முயற்சியையும் பாராட்டினார். மேலும், நவீன இக்கேந்திர நிலையம் அமைக்கும் இப்பாரிய செயற்பாட்டிற்கு   கைத்தொழில் வர்த்தக அமைச்சும் உத்தியோகபூர்வ பங்களாராகுவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் நிதியமைச்சருடனும் உயர் மட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டு இந்த அரிய  முயற்சியை முன்கொண்டு செல்ல தமது அமைச்சு உதவுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் இத்திட்டமானது எமது நாட்டில் தங்க மற்றும் ஆபரண ஏற்றுமதியை மேலும் உயர்த்தும் எனவும்அமைச்சர் றிசாட் தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்