சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

🕔 July 24, 2018

சிரியாவின் போர் விமானமொன்றினை – தனது வான் எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் போர் விமானத்தை இயக்கிய விமானியின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

சிரியாவின் வான் பகுதியில் பறந்துகொண்டிருந்த ஜெட் விமானத்தின் மீது இலக்கு வைக்கப்பட்டதாக அந்நாட்டை சேர்ந்த ஊடகமான சானா செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், சிரியாவின் விமானம் தாக்குதலில் சிக்கியதா என்பது குறித்து அதில் தெரிவிக்கப்படவில்லை.

சிரியாவின் கிழக்கு பகுதியிலுள்ள யார்மோக் பள்ளத்தாக்கு பகுதியிலுள்ள ஆயுதமேந்திய தீவிரவாத குழுக்களுக்கு எதிராக, ரோந்து பணியில் அந்த போர் விமானம் ஈடுபட்டு வந்ததாக பெயர்குறிப்பிடப்படாத ராணுவத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்ததாக சானா தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், இஸ்ரேலின் இடைமறித்து தாக்கும் ஏவுகணை வெடித்து சிதறிய சத்தத்தை கேட்டதாக இஸ்ரேலின் ஹாரேட்ஸ் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் இருந்து தீப்பிழம்புகள் மற்றும் புகை வெளியேறியதாக ஏஎப்பி செய்தி தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்