பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி: தடை தாண்டினார் நடால்

🕔 May 27, 2015

Nadal - 01பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்பெய்னின் ரஃபேல் நடால் முதல் சுற்றில் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் 09 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால் – நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் 6-3, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பிரான்ஸ் வீரர் கென்டின் ஹேலிஸைத் தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்பெய்னின் டேவிட் ஃபெரர் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேகியாவின் லூகாஸ் லேக்கோவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் களிமண் ஆடுகளத்தில் 300-வது வெற்றியைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெற்றார் ஃபெரர்.

தற்போது விளையாடி வரும் ஸ்பெயின் வீரர்களில் மேற்கண்ட மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் ஃபெரர் ஆவார். முதல் வீரர் நடால்.

மற்றொரு ஆட்டத்தில் குரேஷியாவின் மரின் சிலிச் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் ராபின் ஹேஸியைத் தோற்கடித்தார்.

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் விம்பிள்டன் சாம்பியனான செக்.குடியரசின் பெட்ரா விட்டோவா இரண்டரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நியூஸிலாந்தின் மரினா எரகோவிக்கை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் 47 ‘அன்போர்ஸ்டு’ தவறுகளை செய்த விட்டோவா, இறுதியில் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி கண்டார்.

போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி தனது முதல் சுற்றில் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் இத்தாலியின் கரின் நாப்பை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். வோஸ்னியாக்கி தனது 02 ஆவது சுற்றில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை சந்திக்கவுள்ளார்.

ஜார்ஜஸ் தனது முதல் சுற்றில் 6-2, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கோகோவை வீழ்த்தினார். 2009 பிரெஞ்சு ஓபன் சாம்பியனான ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவா 6-1, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை வீழ்த்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்