அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மொழி பெயர்ப்பு அவசியம்: உறுப்பினர் ஜெமீலா ஹமீட் வலியுறுத்தல்

🕔 July 19, 2018

ட்டாளைச்சேனை பிரதேச சபையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைப் பேசும்  உறுப்பினர்கள் உள்ளமையினால், சபை அமர்வுகளின் போது அவர்கள் பேசுகின்றமையை மொழி பெயர்ப்புச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, தேசிய காங்கிரஸின் அறபா வட்டார உறுப்பினர் ஜெமீலா ஹமீட்  முன்வைத்த பிரேரணை சபை ஏற்றுக் கொண்டது.

 அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை, தவிசாளர் ஏ.எல். அமானுல்லா தலைமையில் இடம்பெற்ற போது மேற்படி பிரேரனையை முன்வைத்து ஜெமீலா உரையாற்றினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த சபையில் சக உறுப்பினராகவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்வை – பொத்துவில், அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களுக்கான பிரதேச அபிவிருத்திக் குழு  இணைத்தலைவராக நியமனம் பெற்றிருக்கின்றார். அவருக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும், அறபா வித்தியாலய வீதியில் அமைந்துள்ள பாலத்தில் புதிய தெருவிளக்குகளைப் பொருத்துமாறு கோரியிருந்தேன். அதனை கருத்திற்கொண்டு கௌரவ தவிசாளரின் உத்தரவிற்கிணங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

விபத்துக்கள் அதிகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  காபர்ட் வீதிகள், உள்ளக வீதிகளில் வேகக் கட்டுப்பாட்டினை ஏற்படுத்துதல் கட்டாயமாகவுள்ளது. எனவே குறித்த நடவடிக்கையினை அவசரமாக ஏற்படுத்தி விபத்துக்களை தடுப்பது பொருத்தமானதாகும்.

இவ்விடயம் தொடர்பில் அறபா வித்தியாலய அதிபர், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கின்றார்.

மேலும், சபை அமர்வுகள் இடம்பெறும் தினங்களில் ஊடகவியலாளர்களுக்கு அழைப்பிதழ் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வுலகில் மிக வேகமாக  வளர்ந்துவரும் ஊடக்துறை – தற்போது மக்கள் மயப்பட்டுள்ளது. அதற்கு அர்பணிப்புச் செய்கின்றவர்களாக ஊடகவியலாளர்கள் இருக்கின்றனர். எனவே எமது செயற்பாடுகளும் மக்களுக்கு சென்றடைதல் அவசியம். அதனால் பிரதேச சபை நடவடிக்கைகள், மக்களுக்கு எந்தளவு முக்கியத்துவமானது என்பதனை வெளிக்கொணர்ந்து, மக்கள் மயப்படுத்தும் செயற்பாடு அவசியமாகும். எனவே அதனை கருத்திற்கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அழைப்புவிடுக்குமாறு இச்சபையில் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது பிரதேச சபையில் சிங்கள மொழி பேசும் உறுப்பினர்கள் உள்ளனர். எனவே, அவர்கள் இச்சபையில் உரையாற்றும் போது, அதனைத் தமிழிலும், தமிழில் மற்றவர்கள் பேசும் போது அதனைச் சிங்கத்திலும் மொழிமாற்றம் செய்வது அவசியமாகும். அதைச் செய்யாமல் விடுவது சிறப்புரிமையினை மீறும் செயலாகவே கருதுகின்றேன். எனவே அதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

என்னால் இச்சபைக்கு பல முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டும் தெருவிளக்குகள் பொருத்தும் பணிகள் மாத்திரமே சிறப்புற இடம்பெற்றுள்ளது. ஏனைய அனைத்தும் கிடப்பிலே போடப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது. பிரதேச சபை என்பது தெரு மின் விளக்குகள் பொருத்துவதற்கான இடமாக மாற்றம் பெற்றுள்ளது என மக்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்” என்றார்.

இதனையடுத்து உறுப்பினர் ஜெமீலா ஹமீட் முன்வைத்திருந்த கோரிக்கைகள் மற்றும் விடயங்கள் சபையில் ஆராயப்பட்டு அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்