வெற்றிப் பாதையில் பயணிக்கும், சதொசவின் வருமான இலக்கு 40 பில்லியன்: பராஸ்

🕔 July 18, 2018
– எ.எம். றிசாத் –

தொச நிறுவனம் கடந்த 03 வருடகாலத்திற்குள் பாரிய அடைவுகளை எட்டியுள்ளதோடு, தனியார் சுப்பர் மார்க்கட்களுடன் போட்டியிடும் விதத்திலான நிலையை எட்டியுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஏ.எச்.எம். பராஸ் தெரிவித்தார்.

லங்கா சதொச நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, லங்கா சதொசவின் முன்னேற்றங்கள் தொடர்பில் அவர் கருத்து தெரிவித்த போதே, அவர் இதனைக் கூறினார்.

கடந்த வருடம் ஆரம்பத்தில் 392ஆக இருந்த சதொச விற்பனை நிலையங்களை இற்றைவரை 400ஆக அதிகரித்துள்ளோம். இம்மாத இறுதியில் மேலும் 30 விற்பனை நிலையங்களை அமைக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்;

“இந்தவருட இறுதியில் விற்பனை நிலையங்களை 500ஆக அதிகரிக்கும் இலக்கை நோக்கி நகர்கின்றோம். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்தவருடம் சதொச மீதான நுகர்வோரின் நாட்டம் 43 சதவீதமாக அதிகரித்துள்ளது. சதொச விற்பனை நிலையங்களை அதிகரித்ததன் மூலம் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். முறையான செயற்பாடுகளை பின்பற்றி இந்த நிறுவனத்தில் முகாமைத்துவ உதவியாளர்கள் பதவிகளையும் பட்டதாரி ஆட்சேர்ப்பு நியமனங்களையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

பாரிய நஷ்டத்தில் இயங்கி வந்த சதொச நிறுவனம் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம்  கையளிக்கப்பட்டதன் பின்னர், அவரின் வழிகாட்டலிலும், ஒத்துழைப்பிலும் அதனை லாபகரமானதாக்கியுள்ளோம்.

அத்துடன், பிரதான அலுவலகம் உட்பட அநேகமான கிளைகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. விற்பனை நிலையங்களில் இடம்பெறும் நேர்மையற்ற நடவடிக்கைகளை கண்காணிக்க சி.சி.டி.வி கெமராக்களை பொருத்தியுள்ளோம். அனைத்து விற்பனை நிலையங்களிலும் பணியாளர்களின் வருகையை உறுதிப்படுத்த கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

அத்துடன் விற்பனை நிலையங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணியாளர்களின் கடந்தகால அலட்சிய  மனோபாவத்தை மாற்றியமைப்பதற்காக பயிற்சிப்பட்டறைகளை நடத்தி திருப்தியான சேவைகளை வழங்கக்கூடியதாக அவர்களை செம்மைப்படுத்தியுள்ளோம்.

லங்கா சதொச நிறுவனத்தின் வருமானம் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருவதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2017ம் ஆண்டு 31 பில்லியனாக இருந்த வருமானம், இவ்வருடம்  எதிர்பார்க்கப்பட்ட 40 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக அவர்களுக்கு சதொச நிறுவனம் சிறந்த சூழலை ஏற்படுத்தி விற்பனைச் சந்தையில் ஒரு போட்டித்தன்மையை உருவாக்கியுள்ளது. சதொச நிறுவனத்தை கிராமங்களில் வாழும் சாதாரண பொதுமக்கள் புகழ்ந்து பேசக்கூடியவாறான நிலையை உருவாக்கியுள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்