தூக்கு தண்டனை நிறைவேற்றும் முயற்சிகள் மும்முரம்: அலுகோசு பதவிக்கு ஆட்சேர்க்க விளம்பரமும் வெளியீடு

🕔 July 12, 2018

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் பொருட்டு கையொப்பமிடப் போவதாக – ஜனாதிபதி கூறியமையினை அடுத்து, சிறைச்சாலைத் திணைக்களம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் நிலவி வரும் அலுகோசு (தூக்கிலிடுபவர்கள்) பதவிக்கு ஆட்களைச் சேர்ப்பதற்கான விளம்பரமும் வெளியிடப்பட்டவுள்ளது.

இலங்கை சிறைச்சாலைத் திணைக்களத்தில் அலுகோசு பதவிக்கான இரண்டு வெற்றிடங்கள் காணப்படுவதாக, அந்தத் திணைக்களத்தின் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பதவிகள் வெற்றிடமாகவே உள்ளன. குறித்த பதவிக்கு இருவரை பணிக்கு அமர்த்துவதற்காக தேர்வு செய்து – அவர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவரும் அந்தப் பதவியிலிருந்து விலகிச் சென்றிருந்தனர்.

எவ்வாறாயினும், தூக்கிலிடுவதற்கான கயிறு மற்றும் உபகரணங்கள் தம்மிடம் ஏற்கனவே உள்ளது எனவும், சிறைச்சாலைப் பேச்சாளர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் பெண் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments