போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி தீர்மானம்

🕔 July 11, 2018

போதைப் பொருளோடு தொடர்பான குற்றங்களுக்காக தண்டனை பெற்று, சிறைச்சாலைகளில் இருந்தவாறே, போதைப் பொருள் கடத்தல் குற்றங்களுடன் தொடர்புபடுவோருக்கு மரண தண்டனையினை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டமைக்காக நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்ட பலர், போதைப் பொருள் வலையமைப்பை இயக்கிக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

கட்டம்பேயில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

எனவே, இவ்வாறானவர்களுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு நேற்றைய தினம் அமைச்சரவையில் பிரேரணையொன்றினை தான் முன்வைத்ததாகவும், பின்னர் இதற்குத் தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நீதியமைச்சுக்கு உத்தரவிட்டதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.

ஒரு பௌத்தனாக இது தொடர்பில் வாதப்பிரதிவாதங்கள் உள்ளபோதும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு, அதனை அமுல்படுத்தும் பொருட்டு – தான் கையொப்பமிடவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.

Comments