அக்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் மிக மோசமானவர் நீங்கள்தான்: லத்தீப் மீது குற்றச்சாட்டு

🕔 July 10, 2018

– அஹமட் –

க்கரைப்பற்றில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்களில் தற்போதைய பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லத்தீப்தான், மிகவும் மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமை செய்வதாக, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும், அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச ஒன்றிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட உதுமாலெப்பை, பிரதேச செயலாளர் லத்தீபை நோக்கி இந்தக் குற்றச்சாட்டினைக் கூறினார்.

பிரதேச செயலாளர் லத்தீபை நோக்கி, உதுமாலெப்பை மேலும் கூறுகையில்;

“உங்களுக்கு ஏதாவது நடந்து, அதன் பிறகுதான் இந்த ஊரை விட்டுப் போக வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவமானப்பட்டுப் போக வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்.

இங்கு வந்த பிரதேச செயலாளர்களில், ஆக மோசமாக கட்சி பேதம் பார்த்து கடமையாற்றியவர் நீங்கள் மட்டும்தான். ஆக மோசமாக அரசியல் செய்தவரும் நீங்கள்தான்” என்றார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக தற்போது கடமையாற்றும் லத்தீப்; சில காலங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளராகக் கடமையாற்றியிருந்தார்.

அப்போது, அரசுக்குச் சொந்தமான காணியை, இவர் மோசடியான முறையில் தனது குடும்பத்தாரின் பெயருக்கு மாற்றியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, அது தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது.

Comments