இருக்கக் கூடாத இடத்தில் இருந்தார் தவம்: அக்கரைப்பற்று கூட்டத்தில் அமளி துமளி

🕔 July 10, 2018

– மப்றூக் –

க்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எல். தவம், உத்தியோகபூர்வ பிரதிநிதிகளுக்குரிய ஆசனத்தில் அமர்ந்தமையினை அடுத்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.

மேற்படி கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை ஆரம்பமானது.

குறித்த கூட்டத்தில் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அமர்வதற்காக ஒதுக்கப்பட்ட – முன் இருக்கையில், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவம் அமர்ந்தமைக்கு, அக்கரைப்பற்று பிரதேச ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இணைத் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தனது எதிர்ப்பினை வெளியிட்டார்.

இருந்தபோதும், மேற்படி ஒழுங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மற்றொரு இணைத் தலைவரான பிரதியமைச்சர் பைசால் காசிம்; ஏ.எல். தவம் தன்னுடைய இணைப்பாளர் என்றும், அதனால் அவர் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் அமருகின்ற – முன் இருக்கையில் உட்கார முடியும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இதனை அனுமதிக்க முடியாது என ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை தொடர்ந்தும் வாதிட்டார்.

இதனையடுத்து அங்கு கடுமையான வாய்த்தர்க்கங்களும், அமளிதுமளியும் ஏற்பட்டன.

இதன் காரணமாக, மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த, அக் கூட்டத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் பைசால் காசிம், மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபையின் மு.கா. உறுப்பினர்கள் உள்ளிட்டோர், அந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து, அங்கிருந்து வெளியேறினர்.

எவ்வாறாயினும், குறித்த கூட்டம் –  அதன் இணைத் தலைவர்களில் ஒருவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை தலைமையில் தற்போது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.

வீடியோ

Comments